Tuesday, July 31, 2012

மயங்காதிரு என் மனமே!!!

இல்லாமலலும் இருப்தாயும் மிதக்கும்
என் மனமே!!!!
கேள் மனமே!


காலை வெயில் வெளிச்சங்களில் தோள் மீது கை போட்டு
கடற்கரைச்சாலைகளில் கூட வருகிறாய்.,
பேரின்பம் இது தான் என என்னோடு
பேசிக்கொள்கிறாய்.,
பூமியில் கால் உதைத்து மேகங்களையெல்லாம் மேவச்செய்கிறாய்.,
பூக்கள் விரியட்டும் என இடம் கொடுத்து
என்மீது மென்மைகள்  பூக்கச்செய்கிறாய்,,
என் மடியில் சாய்ந்து கொண்டே 
இறப்பையும் கடப்போம் என்கிறாய்.,
விழுந்து விழுந்து இதயக்கரையெல்லாம் மிகந்து செல்கிறாய்.,
இது போதும்,இனி வாழ்வேன்
சத்தமாய் பாடிக்கொள்கிறேன்..

அதோ நீ அங்கிருக்கிறாய்
என்னைத்தான் பார்க்கிறாய்
ஏதோ ஆயத்தம் செய்கிறாய்

நான் அமைதிகொண்ட பொழுதொன்றில்
எனை  நோக்கி ஆவேசமாய் பாய்கிறாய்.!
"  கொல் "
என்கிறாய்,
புதை  என்கிறாய்.
என் பொம்மைகளை பறித்துவிட்டு 
தீப்பந்தம் கொடுக்கிறாய்..
 எரிக்கச்செய்கிறாய்
"செத்துப்போ"
என்கிறாய்.

சன்நியாசம் தான் சரி.......!
பற்று அறு...!
தனித்திரு...!
பாசமே வேசம்...!
ஏகாந்தம் தான் இனிமை....!
 புரியவில்லை
உன் சித்தம்!!!
ஏன் இப்படி????????
இதையும் நீதான் சொல்கிறாய்.
இப்போதெல்லாம் இதைத்தான் சொல்கிறாய்.!


அத்தனை ஈரங்களையும்
தனித்திருந்து உறிஞ்சிவிட்டு
பரட்டை தேசமாய் என்னை பாளம் போடுகிறாய்.

மறுபடியும் கண்ணீர் ஊற்றுகிறாய்.
மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறாய்..!
விரல் மறைத்து குடை செய்து 
ஒலிவக்கன்று  தருகிறாய்.
நீயே நட்டும் வைக்கிறாய்.

என் இனிய நண்பனே!
என் மனமே!!
மயங்காதிரு!!!
பொறுத்திரு,சகித்திரு!
வென்றுவிடச்சொல்லி விட்டு
நீயே கொன்று போனால்..........:(

இறுகி இறுகி கட்டிப்படாதே,
கொஞ்சம்  ஈரம்  வை...!
இயன்ற வரை முளைத்துக்கொள்கிறேன்....!
                                                                                                                         -அதிசயா-

Wednesday, July 25, 2012

காட்சிப்பிழைகள்......!

  சொந்தங்களுக்கு அதிசயாவின் உரிமை மிக்க நேசங்களும் வணக்கங்களும்!

 


    பார்வைப்புலத்தினுள் சிக்கிக்கொண்ட நாள் முதல்வெளிவராது வலிக்கும் ஒரு காட்சிக்கோணத்தைப் பதிவிடுகிறேன்.இது காட்சிப் பிழையா அல்லது படைப்புப் பிழையா நான் அறியேன்.ஓணான் செதில்களும் கரட்டைப்புதர்களும் நெரிக்கும் இடைவெளியில் முளைத்து, இன்னும் பிழைத்து நிற்கும் வெயில் பிரபஞ்ச வெளி அது.ஏர்க்காலிற்கும் கஞ்சிப்பானைக்கும் மட்டுமே கனவு காணத்தெரிந்த குலத்தில்"பெண்" என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வகுப்பின் கேள்விக் குறியாகவே இப்படைப்பு பிறக்கிறது.

                                          
    பெண் என்ற பிறப்பு சுகம் அடைத்த சதைப்பிண்டமாக நோக்கப்பட்டது கடந்து போன தலைமுறையின் நோய்.ஆனால் இன்றும் தொடரும் அவலம் இது.தாய்மைத் தன்மை ஒருபுறம் தெய்வீகமாக போற்றப்பட்டாலும் அதே தாய்மைக்கான தகவு தானே அவளை போகப்பொருளாகவும் வரித்துப்போகிறது.இன்று வீறு கொள்ளும் பெண்மையின் சாதகமான பக்கங்கள் எதையுமே அறிந்திராத, உள்ளத்தை விழுங்கி ,உடலை மட்டுமே உழைப்பிற்காகவும் உணர்விற்காகவும் முன்னிறுத்திய  அப்பாவிப் பெண்மையின் வேதனை இது.

   பித்தவெடிப்பிற்குள் புகுந்து, உயிர்துருத்தும் கற்களைப்போல தான்,அவர்களுக்கு இந்த உலகமும் அது உமிழ்ந்த பந்தங்களும்.ஒவ்வொரு பிறத்தலும் அழகுக்கோலம்.புள்ளியில் ஆரம்பித்து கோலமாய்விரிவது தான் முறை.போராடி புழுதியாகும் வெயில்காட்டில் இவர்கள் கோலமாய் விழுந்து புள்ளியாய் சுருங்கிப்போகிறார்கள்.வறுமைக்கோடு என்பது இங்கு பொருந்தாது.அடையாளமில்லா அவதரிப்புக்கள் இவர்கள்! இங்கு கோடு ஏது?
நான் அறிய, சாதியின் பால் கீழாக்கப்பட்டு கீழ்ப்பட்டே போன ஒரு கிரகம் தான் இவர்கள்.

    இப்பெண்கள் முகூர்த்தம் பார்பதில்லை.முறை,சடங்கு இவைபற்றி பேசுவதில்லை.கூடல்,ஊடல் இவை மட்டும் தான் இங்கு பந்தத்தை அமைக்கின்றன.பயிர்செழிக்க வஞ்சம் செய்யும் இந்த நிலத்திணிவில், கருச்செழிப்பிற்கு பஞ்சமில்லை.விபரீதமாய்,விபத்தாய் என முண்டியடித்துக்கொண்டு நீண்டு கொள்கிறது,இந்த குடும்பங்களின் பிள்ளைப்பட்டியல்.


  இந்தவேதனைகளுக்குள் வெளிச்சம் என்பது ஒரு கீறலாய் கூட விழ மறுக்கிறது.மது ,மாது இவற்றிற்கு மண்டியிடுவது மேல்வர்க்ம் மட்டுமல்ல.இங்கும் தான்.கோட்டானுடன் விழித்தபடியே புலர்கிறது வேதனைக்கான ஆரம்பங்கள்.இங்கே கட்டில் கோப்பி இல்லை,காலை உணவு இல்லை.கூட்டு,பொரியல் என்ற நேரவிரயம் இல்லை.கூழ்,கஞ்சி என்ற வழமைதான் இங்கு.பாதிநேரம் கடந்தபின் பள்ளிசெல்லும் பிள்ளைகள்.முக்கால் நாள் பொழுது முடிந்த பின்தான் மறுபடியும் வீட்டிற்கு...!ஆங்காங்கே புளியமரமும்,வேலிகள் விட்டுக்கொடுத்தால் விளாத்தியும் வழியில் பசிகுறைக்கும் பெருமரங்கள்.

    பேதைகளாக வாழ்ந்து பழகிவிட்ட அப்பாவி மக்கள்.இங்கு தான் ""மதுவை படைத்தவன் பாழ்படட்டும்"" என்று சபிக்கத்தோன்றுகிறது.உழைப்பதும் குடிப்பதும் கழிப்பதும் என கணவனின் கடமை இங்கு.கண்ணீரிலிருந்து,இரத்தம்வரை இரண்டுமே பிசுபிசுப்பது பெண்மையில் ஆழங்களில் தான்.!:(காலை கொஞ்சல்,மதியம் ரத்தம் இதோ இப்போ கூடல் என விரியும் இப்பெண்கள் வாழ்வு.! பாரதி உறங்கிய இடைவெளிகளில் தான் இவர்கள் பிறந்தார்களோ??

   வெயில் காடு இது.இப்பெண்மைக்குள் மென்மை தேடுவது முட்டாள் தனம்.கல்லைப்பிழிவது தான் கஞ்சிக்கு வழி என்ற ஆன பின் கைரேகைக்கு கவனம் சொல்வது எப்படி??அத்தனை நரம்புகளிலும் இறுக்கம்.  ஒவ்வொரு இமைத்தலுமே  நலிந்து நீண்ட ஏக்கம்..!அது நிம்மதி வாஞ்சிக்கும் ஏக்கம்.இதை பார்த்த கணங்களை விட இப்போது ஆவணப்படுத்தும் இந்த நொடிகளில் தான் அவர்களின் விசும்பல்  பலமாய் எதிரொலித்து என்னைக் கடந்து கொல்கிறது.

   வரண்டு போன அந்நிலங்களை போலதான் இத்தாய்க்குலத்தின் வாழ்கையும் கனவும் வெந்து கிடக்கிறது.அவர்களும் ஏனோ நெடுநாள் நீருற்றுகளை தேடாமல் "அன்றைய அப்பமும் தண்ணீரும்"போதும் என பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.ஒவ்வொரு புலர்விலும் இரப்பதற்கும்,இறப்பதற்கென்றுமே தங்களை தயாரித்துக்கொள்கிறர்கள்.எத்தனை பழிச்சொல்,கேலிப்பேச்சு,நாய்க்குரைப்பு விரட்டினாலும் ஏனோ இத்துப்போகாததாய்த் தான் காட்டிக்கொள்கிறார்கள் தம் இதயத்தை.!:(
    

 ""அவள் கண்களில் வெளிச்சமில்லை.
அந்தத் தோல்களில் ஈரப்பசை இல்லை.
துருத்தும் கழுத்தடி என்புகள் சொல்லின அவள் இருக்கிறாள்என்று.
பிள்ளைக்காய் பரிந்துரைக்கையில் தான் தெரிந்துகொண்டேன்,
அவள் தாய் என்று,
இத்தனையும் தாண்டி 
இறந்து கொண்டே இருக்கத் தெரிந்ததால்
சொல்கிறேன் அவள் பெண் என்று"". 
                   
     இதை தவிர வேறேதும் சொல்லத்தெரியவில்லை.
இதை எங்கு முடிப்பது என்று தடுமாறுகிறேன்.இருப்பினும் உள்ளிருந்து உயிர் உறுத்திய  முள் ஒன்றை சொந்தங்களிடம் இறக்கியதால் திருப்தி.இனியொரு தரம் இவளாய்ப் பிறந்தெனினும் இவள்குலம் மீட்கவேண்டும்.கவிஞன் பாரதி வேண்டாம்.புரட்சிப்பாரதி தான் இங்கு வேண்டும்....!

                                                                                                                             நேசங்களுடன் 
                                                                                                                            -அதிசயா-
  


  
 

Friday, July 20, 2012

வலை விடு தூது!!!


ஐயா பெருமகனே!!
உயர்கல்வி அமைச்சரே!
வடக்கின் நுனியிலிருந்து
பெரும் பிரயத்தனப்பட்டு குரல் தூதொன்று அனுப்பினேன்.
ஓடிப்போய்விடு
""நாங்களெல்லாம் பகிஷ்கரிப்பு""
விரட்டி அனுப்பியது காற்றலை.
உவ்விடம் வந்து மனுக்கொடுக்கவா??
யோசித்தேன்.
இருவழிப்பயணமா??இப்போதைக்கு வாய்ப்பில்லை
பட்டினிப்பாவலனாய் கைவிரித்தது வீட்டுக்கஜானா!!
வழியேது???கடைசிவழி இதுதான்.!


ஐயா அறிவாளியே!
அப்படியே பிற்குறிப்பொன்று உமக்காய்.
சிறப்பாய் சீவிக்கத்தான் நினைத்தேன்.
இன்று சித்தம் இத்து உக்கிப்போகிறது!
பின்னாளில் பித்தாகிப்போனால்
முன்னுரித்து,பின்னனுருத்து இரண்டுமே உமக்குத்தான்.!!!


மூன்றரை ஆண்டுகள் :((
முக்கால் டிகிறி முடிக்கவேண்டிய அனுபவம்
பள்ளிவாசலிலே நின்றுகொண்டது காலம்.
முக்கி முயன்று உயர்தரம் முடித்துவிட்டேன்.
அதோ அங்கே,இல்லையில்லை இங்கே என்று
திறமையாய் ஏய்த்துவிட்டீர்
நான்கு மாதங்கள்.!!!

பண்டிகைக்காய் அலங்கரித்த மார்கழிக்காலையொன்றில்
அறிக்கைவிட்டார் பரீட்சை ஆணையாளர்!!
""இன்று நண்பகல்12  மணிக்குபெறுபேறுகள் ""
கேட்டதிலிருந்து தாயார் செய்தேன்.
குளியலறை போய் கண்ணாடி தேடி,
கொஞ்சமாய் சிரித்து,பஞ்சமாய் அழுது
ஆச்சர்யபாவம் எனக்கு சரியாகுமா?? செய்முறை பார்த்து
இப்படியாய் ஏகப்பட்ட ஆயத்தங்கள்.!

மு.ப,பி.ப தாண்டி முன்னிரவாகியும் கதை கசியவில்லை.
பின்னிரவின் கோடியொன்றில்
அவசர அழைப்பெடுத்தான் அண்ணன்.
உள்ளே 1000 மைல் வேகத்தில் ஆசைக்காற்று!
அவசரத்தில் எந்த பாவம் வாய்த்தென்று கவனிக்க மறந் விட்டேன்.!
காதருகில் மச்சம் அதிஷ்டம் என்பது மெய்தானோ??
வென்று விட்டதாய் தான் நினைத்தேன்.

இரண்டு நிலவுகள் சிரித்துப்போனது.
மூன்றாம் பகலில் விட்டீர் பாரும் மறு அறிக்கை.
இசட் புள்ளி மாற்றம்,மாவட்ட நிலை திருத்தம்.
இன்னொரு ஒத்திக்கையும் தயார்செய்து 
பார்த்தேன்,அப்பாடா!
தப்பிவிட்டேன்.

என் சிரிப்பையெல்லாம் தின்றவிட்ட சிரிக்கிறீர் ஐயா!!
இரண்டு வாரம் பொறுத்தால் பரீட்சை முடிந்து ஓராண்டு நிறைவு.
அழைப்பனுப்புகிறேன்.வாருமையா விருந்திற்கு!!!!
நீதிமன்று தீர்பளித்தால் புரியவில்லை என்கிறீர்கள்..!
புதிதாய் புதிராய் எதுவுமே  சொல்லவில்லையே,
வாருமய்யா மறுபடி படிப்போம் முன்பிருந்து!

இப்போது சொன்னீர் பாரும் மற்றொரு அறிக்கை.
திரிஷாவிற்கு கிசுகிசுபோல 
உமக்கும் வாடிக்கை செய்தியாகி விட்டது நம்பாடு.
"பரீட்சைப்பெறுபேறுகள் இரத்து"
இரத்தம் கொதிக்கிறது அமைச்சரே!

பருவமழை பொய்யான வெயில்காடு இது!!!.
வாழ்ந்து பாரும்,புரியும் உமக்கும்!
அதிகாரி ஐயாவே..
உம்வீட்டு கணக்கறிக்கையா கேட்கிறேன்?????
கனவின் முதலீட்டை தானே கேட்கிறேன்.

பரிதாபமாய் பார்கிகிறார்கள்.
துயரம் விசாரிக்கிறார்கள்.
முதுகின் பின் சிரிக்கிறார்கள்.!
"மகள் இப்போ என்ன செய்கிறா?? "
உம் வாசல் அனுப்பி வைக்கிறேன்-இனி நீரே பதில் சொல்லும்.

சரிசரி
பல்கலைக்கு கூப்பிட்டு
என்ன கிளிப்பீர்கள்??
நான்கு வருடமும் பகிஷ'கரிப்பிற்கு பழக்குவீர்!
பின் பட்டாதாரி முன் மற்றொரு பட்டம்"வேலையில்லா......."

நாற்பதுகளின் நடுப்பகுதியில்
நிவாரணமாய் நியமனம் தருவீர்.
நடனப்பயிலுனரை நகரசபைக்கு அனுப்புவீர்,
கணக்குப்பயிலுனரை கடைத்தொகுதிக்கு அனுப்புவீர் !!
வாழ்க உம்பணி.
சாபங்கள் பலிக்குமென்றால் செத்திருப்பீர் அன்றெப்போதோ!!!
                                                                                                                                        -அதிசயா-

 

Monday, July 16, 2012

ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!

சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசங்களும் வணக்கமும்!


நலனிற்காக ஆசித்து பதிவிற்கு அன்போடு அழைக்கிறேன்.சில காலங்களாய் எழுத விரும்பியும் எழுத்துக்கள் வசப்படாததால் பிற்போட்டு இன்று வசதிப்பட்டமை மகிழ்ச்சி.

ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!(இது கற்பனையே..!)


   கனவுகள் மீது காதல் கொண்டது இந்த மனம்.கனவுகள் தானே வாழ்தலின் அடையாளம்.கனவுகள் மீது பரவிய படி ஒரு பாதத்தையும் மரணங்களின் வாசலில் புதைந்த மறுபாதத்தையும் கொண்ட குழப்பவாதி நான்,சாவின் குரல் பலமாக ஒலிக்கும் ஏகாந்த காடொன்றில் வேகமாக ஓடிக்கொண'டிருக்கும் அவசரங்களில் இதை எழுதுகிறேன்.

   எந்த  அறிவித்தலும் இன்றி பிரபஞ்ச வெளிகளில் விழுந்த விதை நான்.தண்ணீரால் கழுவிய கணம் தொடங்கிய என் பயணம்,கண்ணீராகி நிறைகின்ற இந்தக்கணம் வரை ஒவ்வொரு கணமும் கனமானது.புத்தகப்பை தோள்களால் இறங்கிய வரை இருந்த விறுவிறுப்பு சிறகுகள் பூட்டிய இளமையில் காணாமலே போனது.அந்நிய கைகளில் சாவியை கொடுத்தவிட்டு,வெளிச்சம் கேட்டு  கதவுகள் தட்டி,வியர்வையால் தோய்ந்த இனமொன்றின் எச்சம் நான்.

   எங்கோ பொறியாகத்தெறித்த வாழுதலின் மீதான பற்றின்மை எனக்கே தெரியாமல் என்னுள் தோன்றி இந்தக் காட்டையே எரிக்கும் அளவிற்கு தீப்பிளம்பாகிவிட்டது......!எரிதல் என்று வந்த பின் பொறி என்ன பிரவாகம் என்ன????

   இன்று தான் இரவின் ரம்மியங்களை அணு அணுவாக உணர்கிறேன்.ஓங்கி ஒலிக்கும் மரணத்தின் கூப்பிடுதல்களுக்கு தற்காலிக அடைப்பு கொடுத்து விட்டு,எனக்கே எனக்காய் இந்த இரவை ஒதுக்கி வைத்துள்ளேன்.இதுதான் நான் காணும் கடைசி முழு நிலா.இதுவே எனக்காய் இறங்கி வந்த வானின் வரப்பிரசாதம்.

 வானம் தான் கூரை..!நிலவு தான் ஒளி உருண்டை.கோட்டைகள் தாண்டி,கோடிப்புறத்தில் புரண்டு,எங்கோ எங்கெங்கோ கொட்டும் ஒளித்தூறல்கள்.இதை எத்தனை கண்கள் கண்டதுவோ?யார்வீட்டுப்போர்வைகள் முக்காடிட்டனவோ? புள்ளி விபரம் அறியேன்.என் கண்கள் மட்டும் நிரந்தரமாய் இங்கு நிலவிற்காய் நின்று கொண்டன.

   பூலோகத்தில் சஞ்சரித்த காலப்பெரு வெளியில் சாத்தியப்படாத இந்த நிமிடங்கள் "வாவா" என சாவு கூச்சலிடும் அவசரங்களில் தான் என்னை  சந்திக்க அனுமதித்திருக்கிறது.கருணையே கருணை.!

இலட்சியம் தேடி ஓடிய அத்தனை வேகங்களையும்சேர்த்து சிறியதாய் ஒரு செட்டை கொண்டு வேகமாக நகர்கிறேன் நிலவை தேடி!மரணத்தின் அறிவிப்புகளும் வரவேற்புகளும் செறிந்த இந்த இடத்தில் தான் எத்தனை ரம்மியம்.?!

   உச்சி நனைக்கும் இந்த ஒழுகல்கள் எதையோ ஞாபகப்படுத்துகின்றன.இப்படி ஒரு முழு நிலாஇரவில் தான் வெற்றி பற்றி ,இலட்சியம் பற்றி என்னோடு நானே பேசினேன்.""வென்று விட்டேன்.இனியும் வெல்வேன் "' என்று என்னுள் எண்ணியது இங்கு தான்.வெற்றி மீதான மோகம் அன்று அந்த நிலாச்சந்திப்பை அத்தோடே நிறுத்திவிட்டது.பருவங்களும் பொழுதுகளும் எத்தனை மாற்றங்களைக்கண்டிருக்கும்.அந்த வழக்கத்தில் தான் இந்தச்சந்திப்பும் நிகழ்கிறது.ஏக்கக்கோடுகள் நிறைந்துவிட்ட என் ஞாபகத்தாள்கள் பள்ளிக்குழந்தையாய் வாசலில் முரண்டு பிடிக்க இறுக்கமான பார்வை ஒன்றால் நிறுத்தற்குறி காட்டிவிட்டுத்தொடர்கிறேன்.

   முகடுகளோடு மூச்சுமுட்ட,கனவுகள் போட்டிபோட்டுத்துரத்த,ஒருக்களித்துத்திரும்பும் இடைவெளியில் நினைவுகள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ள,தூக்கங்கள் எல்லாம் துயரமாய் போன இரவில் கூட நிலவு பற்றிய எண்ணம் தோன்றவில்லையே.....:(ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் என் ஆயுள் ரேகை வளர்ந்திருக்கும்.அடுத்த திருப்பத்தில் தயாராகஎன் மரணம்.சாவின் கதவருகில் தான் வாழ்தல் அர்த்தம் புரிகிறது.அழகால் நிரம்புகிறது.

''கால் விழிம்பில் மரணம் ,
வருத்தமில்லை!!
சாவின் சாலைகளில் கூட நிலவு
வருகிறது!!கடைசி நொடி இரட்சகனாய்!
இது போதும்.!''

பகல் என்பது வெளிச்சவெளி.எல்லாமே வெளிப்படை என்பதால் அழகின் மீதான தேடல்களுக்கு இங்கு வாய்ப்பில்லை.அழகுப்போலிகளும் ,இயந்திர இரைச்சல்களும் இறந்து விட்ட இரவுகள் தான் அழகு!மெல்லிய வெளிச்சங்களின் இழையோடல்களில் தான் உயிர் ஊறும் அசைவு புரிகிறது.ஆஹா....

   இங்கு தான் பார்க்கிறேன்,பார்வையாளர்களுக்காய் பிற்போடப்படாத மரங்களின் நடனங்களை,மூச்சுவிடும் இடைவெறிக்குள் நிறையத்துடிக்கும் குளிர்த்துணிக்கைகளை,வேர்கள் குடிக்கிறதா??குளிக்கிறதா???இரண்டுமாய் கேட்கும் ஈரத்தின் சப்தங்களை,இதுவரையும் கட்டிவைத்த இசைக்கட்டிகளின் கசிவுகளை,விடிதலுக்காய் நிறம் குழைக்கும்அடிவான அவசரங்களை...!!!!!

   முடிதலிற்கு முன்பு ஒரு நிறைதல் வேண்டுமல்லவா?அதுதானே திருப்தியான முடிதல்.இறத்தலின் மீது நெருக்கங்கள் உண்டு பண்ணிய என் பிரிய எதிரிகளே!ஒன்று மட்டும் சொல்வேன்.என்னுள்  ஒரு பாதி உங்கள் நேசங்களால் அன்றே நிரம்பிவிட்டது.மறுபாதி சொட்டுபோட்டே வற்றுகிறது.இங்கு பொழியும் வெள்ளை நேசங்களால் விடிவதற்குள் மீதமுள்ள உயிரும் நிறைந்து என் பாத்திரம் அமைதிகொள்ளும்.

உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!

 

                                                                                                                        நிலவுகளுடன்
                                                                                                                               -அதிசயா-

Thursday, July 12, 2012

முதல்முதலாய் முடிவாய்!!!!


நீ புல்லாங்குழல்...!
என் காற்று மண்டலங்களிலெல்லாம்
கல்யாணியாய் நிறைகிறாய்...!
மூச்சுவிடும் இடைவெளியில் வந்து
ஒக்சிஐனை எல்லாம் விழுங்கிக்கொள்கிறாய்...!

நீ மழைக்குருவி...!
என் தோட்டங்களிலெல்லாம்
பாட வருகிறாய்,
ஏனோ பாடாமலே பறக்கிறாய்...!
காய வைத்தஎன் ஓவியங்களை கண்டவுடனே
மூச்சிரைக்கப்பாடி,
நிறங்களை குடித்துச்சிரிக்கிறாய்...!

நீ மகரந்தச்சிமிழ்...!
சிவப்பாய்,மஞ்சளாய்,வெளிர்பச்சையாய்...,
விதவைகள் வாசலெல்லாம் வெறுமை பூசிவிட்டு
என் தாள்களை மட்டும்
நிரப்பிப்போகிறாய்...!

நீ ஐமுனா நதி...!
அரவமில்லாம்,அதிசயமாய்
பூத்துப்போகிறாய்..,
ஏன் வாசலில் ஏனடி பிணவாடை பூசுகிறாய்???

மொகலாய சாம்ராஐ; ''ரசியா'' நீ...!
எதிரிக்காய் தீட்டிய வாட்களையெல்லாம்
நிராயுதபாணி என்முன்,
விழிகளால் ஏன் வீசுகிறாய்???

ஏகாந்த வானத்தின் முழுநிலா நீ..!
பொழிகிறாய்.,
கடல் தாண்டி,மலை மேவி தேசமெல்லாம் பெய்கிறாய்.
பாவம்
பாலைவனம் எனமுன்
திரையிட்டு மறைகிறாய்...!திமிர் நிலவு தான் நீ!

தேன் கடல் நீ!!!
இரவுகளில் அடங்காமல் ஆர்பரிக்கிறாய்..!
கனவுகளில் வளைய வளைய வந்து
என் கழுத்தை நெரிக்கிறாய்..!

பிரம்மன் நல்லவனா???
பின்பு ஏன் உன்னைப்படைத்து என்
கண்களை கீறினான்???
இல்லை இல்லை நல்லவன் தான்..
மயிலிறகால் தாவணி கட்டி தழுவியதும் அவள் தானே???

அவ்வளவு நீளமா உன் கூந்தல்???
விழிகளில் நுழைந்து
சித்தமெல்லாம் புரண்டு
சுவாசப்பை இதயக்கரை தாண்டி
உயிர்முடியும் நீளம் வரையுமல்லா பரந்திருக்கிறாய்??

யார் தந்தியனுப்பிது உனக்கு???
குரல் எடுத்து கூப்பிடும் முன்னே
மெதுமெதுவாய் மிதந்து
என்னுள் எப்படி நிறைகிறாய்??

உன் தந்தையை வரச்சொல்
படிகச்சிலை உனக்காய் எத்தனை
குங்குமத்தோட்டங்களை வாங்கினானாம்???

நீ எனக்கில்லை
என்ற பின்னும்
இப்படியெல்லாம் உளற வைக்கிறாய்..,
நீ போதைக்கட்டி
விலக்கிய பின்னும் இரகசியமாய்
போதை ஊட்டுகிறாய் நடக்கிறாய்..
முதலாய' முதல்முதலாய்
நான் தான் முடிகிறேனடி!!அன்புடன்
-அதிசயா-

Friday, July 6, 2012

ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.

சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் நிறைந்த அன்பான வணக்கங்கள்.
உங்களின் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகளை விடையாக்கி சேமங்களிற்காக இறைவனை வேண்டி நிற்கிறேன்.

வாருங்கள் பதிவிற்குள் போவோம்.

ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்!!!


நீண்ட நேரங்களாய் விசைப்பலகை மீது விரல் பரப்பி இந்த விடயம் பற்றிப்பேசுவது சரியா என என்னையே கேட்டு வேண்டாம் விட்டுவிடுவோம் என விலகிய பின்னும்,நீண்ட காலமாய் என்னுள்நிரவி நிரவி மேலிட்ட இந்த உணர்வு குழப்பத்திற்கு முற்றிட விரும்பியதால் இதைப் பேசத்துணிந்தேன்.

வாழ்க்கையின் பருவங்களின் லேசாக நரை விழத்தொடங்கும் ஐம்பது வயதின் இரு எல்லைகளிறடகும் இடை நின்று,இப்பதிவு இடப்படுகிறது.இங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது.

நாற்பதுகளை மெதுவாகக்கடக்கத்தொடங்கும் பருவங்களிலிருந்து ஐம்பதுதுகளின் நடத்தல்களில் தான் இப் பிறழ்வுகளை கேட்டதுண்டு.களைக்க களைக்க கற்று,இழைக்க இழைக்க ஓடி,நுரைக்க நுரைக்க காதல் செய்து இளமை நகர்கிறது..சில பொழுதில் முரண்டு பிடித்து
சில தருணங்களில் இயல்பாய் வளைந்து கொடுத்து,சில சமயங்களில் ஆக்ரோஷங்களுக்கு அடங்கி இப்படி பல விதமாய் இல்லறமோ துறவறமோ இரண்டில் ஒன்றிற்று ஊடாக எம்மைத்திருப்பிக்கொள்கிறோம்.இங்கு துறவு பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.
இல்லற இணைவின் முலமிடல் கூட ஒரு வகையில் ஒப்பந்தமே.இதற்குள் தம்மை கட்டுப்படுத்தி,தங்கள் வாழ்வின் நகர்தலின் வெளிப்பாடாக,வாழ்தலின் அர்த்மாக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள்.

அதன் பின் வாழ்கையின் பின்னே ஓடியே ஆக வேண்டும்.இந்த ஓடுதல்கள் விறுவிறுப்பாயும்,விரைவாயும் ஆரம்பித்து இலக்குகள் விரட்டிப்பிடிக்கப்படுகின்றன்.
மெதுவாக நாற்பதுகளின் இறுதியில் அடைவோ அழிவோ இரண்டில் ஒரு முடிவிற்கான அடித்தளம் சிறப்பாகவே இடப்பட்டிருக்கும்.

ஐம்பதுகளில் நுழைந்ததும் ஒரு அமைதி தேவைப்படுகிறது.வெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.இங்கு தான் சட்டென நுழைந்து கொள்கிறது இன்னொரு நேசம்.இது தோன்ற நீண்ட நாள் அறிமுகம் அவசியப்படுவதாய் தெரியவில்லை.வர்க்க வேறுபாடு மறந்து,தராதரங்கள் தாண்டி,வயதுகளை கூட மறந்து இது விரைவாய் தொற்றிக்கொள்கிறது.இதை காதல் என்று மேற்கோளிட மனம் ஏனோ ஒப்பவில்லை.இந்த நேசங்கள் விலக்கப்பட வேண்டியவை...இது தவறானது என வாதிடவில்லை.ஆனால் இந்த நெருக்கங்களில் ஏற்படும் வரம்பு மீறுதல்கள் தான் அருவருப்பிற்குரியது.கண்டிக்கப்படவேண்டியது.

நான் கற்றவற்றின் அடிப்படையில் இந்த 50 வயதுகளின் சாயலும் நடத்துகைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவே மாறுபட்டது.உடலியல் ரீதியாக பெண் பல மாறுதல்களுக்கு முகம் கொடுக்கும்படி இயற்கையால் நிர்பந்திக்கப்படுகிறாள்.இதன் விளைவாக இயல்பான ஒரு மனச்சோர்வு, விரக்தி உடல் நோய்களுடன் கூடவே பலவீனமும் தொற்றிககொள்கின்றன.ஆனால் ஆண்கள் அத்தன்மையை அடைய மிக நீண்ட நாள் செல்லும்.இது அறியப்பட்ட போதும் புரிதல்கள் தம்பதிகளிடம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.பெண்களுக்கு மனோரீதியாக பெரியதொரு ஆதரவும் பலப்படுத்தலும் இப்போது தான் தேவைப்படுகிறது.அதுவும் தம் துணையிடமிருந்து கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

நிலைமையோ பல சமயங்களில் சதிசெய்து சிரிக்கிறது.ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்.அதிலும் வேதனை எதுவென்றால் இளவயதுப்பெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.திருமண வயதை அடைந்த பிள்ளைகளை தம் வீட்டில் வைத்தபடி இத்தகைய தந்தையர் ,ஆண்கள் சபலப்பட்டுகிறார்கள்.

வாழ்க்கை,வழுக்கை,வருத்தம் இத்தனையையுமே ரசித்து ,திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தங்களுக்கு உரம் சேர்க்க வேண்டிய வயதில் இப்படித் திரிவுபட்டு போகும் இவர்களை கண்டால்,கேட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபமும்,முடிந்துவிடாமல் நீளும் கேள்விகளுமான் நான் என்னுள் குழம்பி குழம்பி இறுகியதுண்டு.இத்தனை நாளாய் நிழல் தந்து ,நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.??!!மற்றொரு நிழல் தேடுவது முறையா??ஃபின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்."கவனம்!
இன்னொரு காதல் வரும்
புன்னகை வரை மட்டும் போ...!
புடவை தொடாதே"
-வைரமுத்து-

இது யதார்த்தமான கோரிக்கை.சபலம் கைகுலுக்கி சந்தித்து போகும்.விட்டுவிடுங்கள் போகட்டும்.ஆனால் பல பேர் காதுகள் செவிடுகள் போலல்லாவா வெளிக்காட்டப்படுகின்றன????
ஒவ்வொரு மனிதனுமே சுகம் மட்டும் வாழ்வு என நினைத்தால் அழகான குடும்ப அமைப்புகள் எவ்வாறு நிலைக்கும்??எத்தனை சிறுவர்களின் மனம் கிலேசப்படும்???எத்தனை பேரிற்கு வாழ்தல் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை இழப்புகள் விதை கொள்ளும்????


இட்சியத்தை துரத்தி ஓடியது போதும் என்ற எண்ணம் முளைவிடுகிறதா.???


"சாய்வுநாற்காலியும் சில காகிதங்களும் கை வசம் கொள்ளுங்கள்.
அணில்பிள்ளைக்கு தலைதடவுங்கள்.!
வாழ்கையிடம் சுகம் விசாரியுங்கள்..!
அன்று பார்க்க மறந்த பூக்களிடமாய் மண்டியிடுங்கள்.!
ரசியுங்கள்..!!!
துணையிடமாய் மனம்விட்டு சிரியுங்கள்.!
சின்ன மகளின் செருப்பிற்குள் கால் நுழைத்துப்பாருங்கள்..!
எத்தனை முடிக்குள் முதுமை நுழைந்து விட்டது
முகவரி கேளுங்கள்...!
பகலிடமாய் சிரித்துப்பேசுங்கள்..
நலிவு கூட நவரசமாய் சுகிக்கும்" !!!!!

நான் அதிசயா.சிறியவள் சில சமயங்களில் கடிகாரம் பார்பதிலும் தடுமாறுபவள்.இந்தப் பதிவுலகில் எத்தனையோ கற்றறிந்தவர்கள்,பெரியோர்கள்,புலவர்கள்,அறியப்பட்டவர்கள் என எத்தகையோ பெருந்தகைகள் உள்ளீர்கள்.என் கருத்துகளில் தவறிருப்பின் பொறுத்தருள்க.நெடுநானாய் பூட்டி தைத்த விடயம் ஒன்றை என் அன்பான சொந்தங்களிடம் மனம் திறந்ததில் ஆறுதல்.சொந்தம் என்று வெறுமனே சொல்லின் சுதிக்காய் கூறவில்லை.முகம் தெரிவதில்லையாயினும் மனம் திறந்து தான் சொல்கிறேன்.இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.

அன்புடன்
-அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...