Wednesday, May 4, 2016

துயர் காய வருகிறேன் பார்த்தீபா...!

விரலிடை கணுவெல்லாம் நிரம்பி நெருங்கு பார்த்தீபா
எப்போதும் நிகழ்ந்துவிட்டிராத அணைப்புக்களையும்
இனி நிகழவே கூடாத  நெருக்கங்களுக்கும் சேர்த்து
இப்போது ஒரே ஒருமுறை நிரம்பி நெருங்கு. 
இனி நாம் கடந்து போவோம்.
உணரதாவற்றை  துறப்பது மெய்நிலைத்துறவாகாது..
ஆதாலால் இப்பிரிவிற்கு முன்னேனும் ஒருமுறை என் கழுத்தோரம் கட்டிக்கொள்..
பார்த்தீபா இச்சை அற்ற இத்தழுவல் ஒரு தீபோல உனை நெருங்கட்டும்..
உன்னில் துயர்காய வந்தேன் பார்த்தீபா.. 

நேரப்போகும் இவ்வாழ்வில் ஏதேனும் ஞாபக இழை பற்றி நீ உள்ளேறி விடுவாய்..
எனை சூழ்ந்தே அசைவாய்..
ஆனாலும் பார்த்தீபா அப்போதைய என் சந்தோசங்களேனும் அடர்ந்த கண்ணீரேனும்
உனக்கு சங்கடத்தையே உண்டாக்கும்
ஆதலால் காற்று வாசம் கொள்ளும் பொழுதுகளின் 
இப்படியாய் இனி என்னருகில் நெருங்காதே 
ஒரு குமிழி போல் நான்.
மற்றொரு தீண்டலில் நிச்சயம் உடைந்து போவேன்.
குறிப்பெழுதி வை.
இன்னொரு தரம் இதை சொல்லுமுன் 
என் இறுக்கங்கள் தளர்ந்து போய்விடும்.
பின் மீண்டெழுதல் என்பது அபத்தம்.
கிறக்கத்தை உண்டாக்கும் சிநேகத்தின் பிம்பங்கள்
பின்னாளில் பெரும் நிழல் போல துரத்தும்..
பார்த்தீபா அப்போது பகிரங்கமாய்  ஒதுங்க முடியா அந்நிழல்
சிறுபிள்ளை தன் நிழல் பார்த்து மருள்வது போல பயமுண்டாக்கும்..
நிழலாய் தொடராதே பார்த்தீபா
அந்நாளில் மருட்சியை தாங்கும் மனத்திறம் கொண்டிரேன் 

இனியும் நீயில்லா அவ்விருக்கைளில் அந்திப்பறவை வந்து அமரும்..
சருக்கின் ஓசையெல்லாம் நடுநடுங்க உடைதலுறும்
பின்னும்  மற்றொரு நேசத்திற்காய்அவ்விருக்கையில் இலைதுளிர்க்க ஆரம்பிக்கும்.. 
பார்தீபா உனை நானும் உணர்ந்தேன் என இதன்பொருட்டு அறிந்துகொள்.
இறுதியும் முதலுமான தழுவலில் தான் இதை சொல்ல முடிந்தது..

கண்ணீரையும் மீறி சந்தோஷிப்போம்
கானல் கானல் என்று உயிர்வற்ற கதறி மனப்பாடம் பண்ணியபின்னும்
நிர்க்கதியான நம் பாதங்களை சூழ்ந்துகொள்ளும்
இந்நேச அலையிடம்பூக்களை நீட்டுவதா 
அன்றேல்வெறிபிடித்தவள் போல் தலைதெறித்து ஓடுவதா??நீயிருக்கையிலே, 
நீபார்க்கையிலே நமக்காய் அழுது விடுகிறேன்.
தண்ணீர்வரப்படிகளிலும் தனிப்பயணங்களிலும்
சிரிக்கும் உன் கண்கள் கொண்டு எனை தண்டித்துவிடாதே...
எப்போதும் எனை பார்க்காதிருக்க சாபமிட்டு போ..!  
பார்த்தீபா தித்திப்பான வில்லைகள் போலிருக்கும் 
அணைப்பின்கசப்பான துயரங்களை உன் துணையின்றியே தாங்கியாகவேண்டும்.

முள்போல் மெலிந்த கருத்தமாவின் விரல்களிலும்
பொன்மஞ்சள் முடியுடை நகர்ப்பெண்ணின் இடையிலும்
வீட்டிற்கு மூத்தவளின் கழுத்தோர உரோமங்களிலும்
நேசத்தின் வாசமொன்று வாடையாய் மாறியிருக்கும்

பார்த்தீபா அழுத்தமாய் அதீதமாய் அணைத்துக்கொள்.
நீ வேர்பிடித்திருக்கிறாய்..
உனைக் கழுவமழையென இறங்கும்இக்கண்ணீரை  மறைக்கமாட்டேன் காண்....
என்  பாதத்தில் உனை இட்டுவலி களைய கனவு கண்ட காலங்களில்
கைகோர்ப்பின் கதகதப்பு பற்றிய சிலாகித்த இரவுகளிலும்
முத்தமிட்டபடியே கடப்போம் எனநினைத்த சச்சரவுகளிலும்
கண்ணீரெனும் எரிதிரவம் இட்டுவிடு.

இத் தழுவலில் வகிடுவழி பிரிந்து கொள்ளும் கேசம் போல
நம்மிலிருந்து விலகிப்போவோம்.
இன்னுமின்னும் வாசற்படியருகே கண்ணியத்தை கட்டி வைத்திருக்கிறேன்.
மலரானானும் நுகமானாலும் எனக்காய் உடைக்க வலுவற்றவள் நான்..
பின்னும் இங்த இறுதி தழுவலை விட உனைச்சேர வழியில்லை..

தழுவி விடை கொடுக்கும் தைரியங்களை
நிதானமான ஒருநாளில் வகுப்பெடுத்திருந்தேன் 
பார்த்தீபா  இத்தனை அடர்தியாய் உன்மீது படர்ந்திருந்தேன்
மலைமுகட்டில் இறகு உதிர்த்தும்  கழுகைப்போல
என்னிலிருந்தான உன் சாயல்களை பிடுங்கி எறிகிறேன்.
காண் அதையும் காண்


அத்தனையும் கண்டபின் உன்அணைப்பிலிருந்து
என்னைதளர்த்தி விடு.
நடுங்கும் இவ்விரல்களை சொடுக்கு எடுத்தபடி புறப்படும்
இக்குற்றக்காரியின் மனக்கோணல்களை மன்னி..! 
பார்த்தீபா....,
அனன்யாவை மறுதலிக்கும் மனத்திற்காய் பிராத்திக்கிறேன்.
இணையாய் ஆற்றமுடியா என் நேசத்தின் ஓலங்களை ஒப்புவிக்கிறேன்.
பார்த்தீபா என் சுவடு மறைத்த உன் சாலைகளில் கைகுலுக்கிக்கொள்ளாதிருப்போம்.
எந்த சாலையும் மீண்டும் உதிப்பதற்கு துளி அழுகையே போதுமாயிருக்ககூடும். 


-அனன்யா- 

2 comments:

  1. வலியை உணர முடிகிறது வரிகளில்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...