Thursday, May 31, 2012

கட்டிளமையும் கண்ணாமூச்சியும்...!(இது காதலா காதலா??கவனிக்குக!!!)

       உறவுகளுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்!


 ஒவ்வொரு மனிதனும் ஒரு பயணம்.இந்த பயணங்களெல்லாம் ஒரு நிரந்தர  உறக்கத்தோடு முடிந்து போகும்.ஆனால் அந்த பாதைகள் அவரவர் பெயர் சொல்லிக்கொண்டே காலங்களோடு நிலைத்திருக்கும்.
    
     'சாமங்கள் முடிந்த பின்னால் சந்திரன் எஞ்சி நிற்கும்
    ஈமங்கள் முடிந்த பின்னால் ஈரங்கள் எஞ்சிநிற்கும்
    நாமங்கள் முடிந்த பின்னால் ஞானங்கள் எஞ்சிநிற்கும்'

                                                                                                              (வைரமுத்து)
  
      நான் என் பயணங்களைக்காட்டிலும் எனக்கான பாதைகள் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவள்.என்னுள் இருந்த 'அவளை' கண்டெடுக்கச் செய்த என் பதின்ம வயதுகளை மிகவே நினைத்து இப்பதிவை இடுகிறேன்.
 
    பாதைகளிலே ஏணிகளின் இடுக்குகளில் பாம்புகளையும்,பட்டாம்பூச்சிகளின்; இறக்கை பின்னே மயிர்கொட்டிகளையும் ஒழித்துவைத்திருப்பது கட்டிளமைச்சாலைகள்.
   
       சற்று முன்னர் நான் தாண்டிய இச்சாலைகளின் சாயல்களையும் இன்று கண்டு அனுபவிக்கும் அதன் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுதல்களையும் படிமங்களாக்கி பதிவிடுகிறேன்.
 
         கண்ணாடிகளை நேசிப்பதும், காதல் பற்றி ஆராயச் சொல்வதும்,உள்ளே ஒழிந்திருக்கும் பேராற்றல் ஒன்றை தேடித் தருவதும் இக்காலம் தான்.என்னிடம் கேட்டால் பேனாக்களோடு; சொந்தம் சொல்லித்தந்ததும்,காகிதங்கங்களோடு பேசச்சொன்னதும்,கண்ணில் விழுந்ததையெல்லாம் குறிப்பெடுத்து வை, என்றதும் கட்டிளமைக் காலங்கள் தான்.

    என் சாலைகளிலும் எத்தனையோ சுவாரஸ்யங்கள்,துன்பங்கள் சுகம் விசாரித்துப் போனது.ஒழிந்திருக்கும் சபலங்களெல்லாம் ஒன்றாய் ஓடி வந்து அரும்பிய சிறகையெல்லாம் அழுத்திவிட்டு,இயந்திரச் சிறகையெல்லாம் என் தோள்களில் பூட்டிவிட்டு 'எம்பிப்பற'  என்று விரட்டிப்போனது.இரகசியமாய் முயற்சித்தேன்,ஆழங்களில் பலமாய் அடிபடும்படி விழுந்தேன்.அந்த ஒவ்வொரு விழுக்காடுகளும் எனக்குள் அடர்த்தியான தெளிவையும்,தெளிவான ஞானத்தையும் பூசிப்போனது.
  
         வெறும் பருவத்து ஈர்ப்புகளையெல்லாம் 'காதல் காதல்'என்று சட்டை பிடித்தது வயது.ஆரம்பத்தில் சித்தம் தடுமாறிய போதும் விரைவாகவே தணிக்கைக்கு பழகியது மனது.எனக்குள் முளைத்த அந்தத் தெளிவுகளை என் பள்ளித்தோழரிடமும் விதைத்துப் போனேன்.களங்கமேதுமின்றி எம் கட்டிளமை விடைபெற்று என்னிடமாய் சிரித்துப்போனது.
  
          ஆனால் இன்று நான் காணும் கட்டிளமைக் கலாச்சாரம் வேறு.மனதிற்கு எத்தனை சமாதானம் சொன்னாலும் இந்ந மாறுதல்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது.
 
          என் போலவே சூழலில் வளர்க்கப்பட்டவர்கள்,தெளிவு படுத்தப்பட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டவர்கள் கூட சலனங்களை வெல்ல முயற்சிக்காது தோற்றுப்போகிறார்கள்.

    பதிமூன்றுகளில் உருவம்பெறும் சில அகச்சிந்தனை மாயைகளுள் இலகுவில் மாட்டிக்கொள்கிறார்கள்.அனுபவக்கல்வி தான் சிறப்பான ஓர் அடிப்படையை உருவாக்கும் என்பது பொதுவான உண்மை.ஆனால் பதின்ம வயதுகளின் தொல்லைகளில் மாட்டிக்கொள்பவர்கள்  மீண்டும் மீண்டுமாய் கைகளில் விளக்கேந்தியபடியே சாக்கடைக்குள் விரும்பிப் போகிறார்கள்.திடீரென எம் பிரதேசங்களில் புகுத்தப்பட்ட நாகரிகம்,நுகர்வுச்  சுதந்திரம் என்பன இதற்கு காரணமாய் அமைந்த போதும் இது இன்று உலகளாவிய ரீதியில் பெரும் சவாலே..!பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கண்ணியத்மன்மை தொடர்பான பெரிய பயமும் நிம்மதியீனமும் ஏற்பட்டிருப்பதை நானும் கண்டு நொந்ததுண்டு.
  
         பெற்றோர் உறவுகள் பெரும்பாலும்; தமது வீட்டின் பதின்ம வயதுப் பிள்ளைகள் மட்டில் மனம் திறந்து பேசத் தயாராகவே உள்ள போதும் பிள்ளைகள் ஏதும் பேசுவதாக இல்லை.தேவையான அளவு கண்காணிப்பும் அரவணைப்பும் கிடைக்கின்ற போதும் அவற்றை தாண்டியும் சிறப்பாகவும்,புத்திசாலித்தனமாகவும் தவறுகள் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.வெளியே எங்கோ 'அந்த' ஒன்றைத் தேடுகிறார்கள்.

          நான் பாடசாலையிடம் விடைபெற்று சொற்ப காலங்களிலே கண்டு அதிர்ந்த உண்மை இது.என் ஒத்த நண்பிகளிடம் தவறான பாதையில் ஒருவர் போகிறார் எனத்தெரிந்தால் நகைச்சுவையாகவும்,அன்பாகவும் தேவையேற்படின் கண்டிப்பாயும் சொல்லி சரியான பாதையில் நடத்தக்கூடிய ஆரோக்கியமான,தற்துணிவான,சிறப்பான நட்பு வட்டம் காணப்பட்டது.ஆனால் இன்று,கூடவே இருந்து சிறப்பான ஆலோசனைகளை வழங்கி விரைவாக அவர்கள் போக விரும்பும் இடத்திற்கு கொண்டு சேர்த்து 'நல்ல'நண்பர்கள் என்று பெயர் பெற்றுத் தம்முள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
 
         சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது இவர்களுக்கு ஏற்படும் ஆத்திரமும் ஆதங்கமும் அளவு தாண்டியது.இந்தத்தருணங்களில் சோகமயமான சில திரையிசைப்பாடல்களை கேட்டபடி,அக்கதை மாந்தர்களை தாமாக கற்பனையில் வரித்து,அந்த சோகங்களுக்குள் விழுந்து அதிலிருந்து வெளியே வர விரும்பாதவர்களாக எல்லோர் மனங்களையும் காயப்படுத்துகிறார்கள்.மற்றொரு கோணத்தில் பார்க்கின்ற போது,வயதில் பெரிய சில நபர்களிடம் ஏற்படும் ஈர்புகள் மேலும் அவர்கள் சிந்தனையை திருப்பிப்போகிறது.

         தமது முயற்சிகள் தடைப்படுகையில் அத்தனை தோல்விகளையும் வெறுப்பாகத்திரட்டி ஏதேதோ செய்து தமது கோரிக்கைகளை வென்றெடுக்கப்பார்க்கிறார்கள்.
 
      குழந்தைத்தனமும் துடுக்கும் விடைபெற்று விடாத இந்தப் பருவங்களில் குழந்தை பற்றிய சிந்தனைகள் இவர்களிடம் வேர்விட்டு இவர்களை சீரழிக்கிறது.நான் சந்தித்த நபர்களை பொறுத்தவரை இவர்கள் ஒருவித போதையில் இருப்பவர்களைப் போல தமது சிந்தனைகளுக்குள்ளே தம்மை எல்லைப்படுத்திக் கொண்டுள்ளது, மீள விரும்பாதிருப்பது, மன வேதனைக்குரிய நிதர்சனம்.அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளே இவற்றில் மாட்டி மீளமுடியாது தவிக்கிறார்கள்.அதிலும் அருவருப்பிற்குரிய உண்மை என்னவென்றால் இந்நாளில் திருமணமான ஆண்கள் பால் ஈர்க்கப்படுவதும் மலிவாகிவிட்டது.


    சில கட்டிளமை ஈர்புகள் பின்னாளில் காதலாகி,கல்யாணத்தில் முடிவதும் உண்டு.ஒத்துக்கொள்கிறேன்.இருந்த போதும் இப்பருவம் வாழ்க்கைத் துணை தேடும் பருவமேயல்ல.அறிவார்ந்த சிந்தனைகளாலும்,சில ஆக்கபூர்வமான எண்ணங்களாலும் இவர்கள் தம்மை வளப்படுதிக்கொள்ள வேண்டும்.இப்பருவம் சொல்லும் துடிதுடிப்பையும் பரவசங்களையும் சரியாகப் பயன்படுத்தி வழுவற்ற ஓர் சாலையை அமைக்துக்கொள்வது அவர்களின் கடமை.இதற்கு பெற்றோர் பெரியோர் நட்பு வட்டம் என்பன ஆரோக்கியமாக அமைய வேண்டும்.முயலுங்கள்...!
  
       சிறப்பான கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்குவோம்.வளமான எமது கலாச்சார பின்னணிகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.தவறுகளை நியாயப்படுத்துவதை விடுத்து எம்மை மாற்றுவோம்.

     
                         'வயதுகள் வரண்டு போய்
                         கனவுகள்    கடந்து போய்
                         பயணங்கள் முடிந்துவிட்ட கணங்களில்
                         பாதைகளை எண்ணிப் பரவசப்படுவோம்.'


பாதைகளின் இடைவெளியில்,

                                                                                                                                                                                           -அதிசயா-

   
                                                                     

Sunday, May 27, 2012

நட்புநிலை உடைவுகள்..!வணக்கம் நேசங்களே!

தலைதடவிப்போன உங்கள் பாசங்களுடன் மற்றொரு அனுபவப் பகிர்வோடு உங்கள் வாசல்களில் வருவது மிகவே மகிழ்ச்சி..அது என் தனிப்பபட்ட அனுபவமே,இருப்பினும் சில வேளைகளில் பொது அனுபவமாயும் அமையுமென எதிர்பார்கிறேன்..நெருடல் இருப்பின் பொறுத்தருள்க..
   
பதிவுலகில் 'அதிசயா'எனும் அடை மொழியுடன் அறிமுகமானவள் நான்..எனக்கென்று என்னுள்ளேயும் சில அடையாளங்களை தெரியப்படுத்திய என் எல்லையற்ற பாசத்திற்குரிய இரு நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.


பிறப்பால் வாய்த்த சொந்தங்களை காட்டிலும்,காரணமின்றி வாய்க்கும் விதி வரைந்த சொந்தங்கள் நண்பர்கள்.என்னைக்கேட்டால் எனக்கு வாய்த்த அந்த இரண்டுமே அற்புதமான தெய்வீக பரிசுகள்.அடிக்கடி நினைத்து சிலிர்த்துக்கொள்வதற்கென்று என்னிடமாய் உள்ள திருப்தி கரமான அடைவுகளில் பெரும்பான்மையானது  அந் நினைவுகளே.

பொதுவாக ஆண்-ஆண் நட்பு,பெண் -பெண் நட்பினைக்காட்டிலும் ஆண்-பெண் நட்பின் பிணைப்பின் இறுக்கத்தன்மை மிகவே அதிகம்(நான் உணர்ந்தது.மாற்று கருத்திருப்பினும் மன்னிக்கவும்)இயற்கையாக உள்ள எதிர்பாலினக்கவர்ச்சியும் இதற்கு ஒரு காரணமோ தெரியவில்லை.

இவ்வாறு நமக்கு நாம் வரித்துக்கொள்ளும் உறவுகள் இறுதி மூச்சு உள்ளவரை அருகில் தொடர வேண்டுமென்பதே இயல்பான மனித எதிர்பார்ப்பு.ஆனால் பல நேரங்களில் இவ்வுறவுகள் ஆட்டம் கண்டு உடைந்து போவதும்,சில தருணங்களில் மட்டுமே இவ்எதிர்பார்ப்பு உணமையாவதும் மனம் நெகிழும் வேதனை.இவ் உறவுநிலை உடைவுகள் ஏன் நிகழ்கின்றன???ஆண்-பெண் நட்புச்சாலைகளில் காத்திருக்கும் சலனங்கள் ஏரானம்.

    மற்றவர் பார்வையின் தவறான ஓட்டம்

    நட்பினையே ஒழிந்திருக்கும் காதல் போன்றதான ஈர்புகள்;..;

நட்பு காதலாதல் சரியா தவறா என்றால் அதை விவாதிக்கவே ஒரு தனிப்பதிவு தேவை.(நா சொல்ல வர்றது வேறய பத்திங்கோ...).
ஆரம்பங்களில் இனிதாக போகும் இச்சாலைகளில் படிப்படியாக ஏற்படும் இடைவெளிகள் ஒரு எல்லையில் இருட்டிலும் கண்ணீரிலும் போய் முடிகின்றன.


இதையெல்லாம் வென்ற பின்னும் சில தனிப்பட்ட புரிதலின்மைகள் ஏற்பட்டுச் சோதிக்கும்.

பொதுவாகவே சிலர் தங்களிpன் நட்பின் மீதுள்ள அதீத நேசங்களால் அந்நபர் தனக்கு மட்டுமே உரியவர் என மட்டுப்படுத்துவதும்,தன்னையறியாமலே அவ்எல்லையை தன் துணையின் மீது திணிப்தும்,அதற்கொப்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் மனக்கசப்பை ஏற்படுத்துகின்றன.அத்தகைய நிலை பின்னர் சரி செய்யப்பட்டாலும் தொடர்ந்து தனது மற்றைய நட்புப்பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தையும் ஒருவித பயத்தையும் ஏற்படுத்தி செயற்கையான ஓர் நினைவோட்டத்தை ஏற்படுத்தி,பலமான இடைவெளியை விரித்துப் போகின்றன.

நட்பு என்பதே எதிர்பார்பற்ற ஓர் உறவு.ஆனால் சில சமயங்களில் எதைச்செய்தாலும் தன் நட்பு தனக்குத் துணையிருக்கும் என்று எதிர்பார்பது மிகமிகத்தவறான முடிவு.தவறு செய்கையில் தடுப்பதே மெய்யான நட்பின் தன்மை.ஆனால் சில சமயங்களிலே இத்தகைய தடுத்து நிறுத்தல்களும் நட்பு முறிவிற்கு காரணமாகின்றன.ஒரே விதமான தவறுகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.அதுவும் மறைமுகமாக...அது சுட்டிக்காட்டப்படும் தருணங்களில் ''ஏற்கனவே உனக்குத்தெரிந்தது தானே'' என நியாயப்படுத்தப்படுவதும்,''நண்பனுக்காய் இதை செய்ய மாட்டாயா?''என ஒருவகை பேரம் பேசப்படுதலும் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்படவேண்டியதே..!

நட்பினுள்ளே சிறிய நெருடல்கள் முளைக்கும் போதே,உணர்வின் எல்லைகளில் நின்று அதை பற்றி சிந்திக்காமல்,அறிவுபூர்வமாக உறுதியான முடிவுகளையும் சில தெளிவுகளையும் ஏற்படுத்துங்கள்.முரண்டு பிடித்தால் சில காலம் தனித்திருந்து சிந்திக்கும் வரை அவகாசம் வழங்குங்கள்.அதன் பின் ஏற்படும் புரிதலானது நிரந்தரமாகதும் தூய்மை மிக்கதுமாகவே அமையும்.
கண்களுக்கும் கண்ணீருக்கும் மதிப்பளித்தால் கடைசிவரை இரவுகளும்,அழுகைகளும் தான் மிச்சமாகும்.எவ்வளவு நெருக்கங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் அத்தனையையும் வெறுப்பாய் உமிழ்ந்து,எதிரிகளாய் பார்க்க வைக்கும் தண்டனை மிக மிக கொடிது.

                        'தான் நேசித்தவர்களால் நிராகரிக்கப்பட்டவளும், 

தன்னை  நேசித்தவர்களை நிராகரித்தவளும்'


இவ்வரிகள் அடிக்க ஞாபகவெளிகளை நிறைத்துப்போனாலும்,இறுக்கமான மனதுடன் எனக்கான பதில்களுக்காய் என் கனவுகளையும ;இந்த ஈரமான நினைவுகளையும் கோர்த்து வைத்துள்ளேன்.
'அதிசயா'ஒருகரத்தால் தண்டனை அனுபவித்துக்கொண்டே மறுகரத்தால் தண்டனை வழங்குகிறாள்.தண்டிக்கப்படுவது,தண்டனை கொடுப்பது இரண்டுமே ரணமானது என்பதை இப்போதெல்லாம் ஒரே சமயத்தில் அடிக்கடி உணர்கிறேன்.

நான் பெற்ற இரு உறவுகளில் ஒன்று உறங்குகிறது.மற்றயது உறங்குவது போலச் செய்கிறது..நம்பிக்கையோடு வாசல் தட்டுகிறேன்.,நேசங்களுக்காய் இல்லையெனினும் தொல்லைகளுக்காயாவது விழிகள் திறக்கப்படலாம் என்று..:(

என் எழுத்துகள் உங்களை புண்படுத்தினால் மன்னிக்கவும்..

சொல்லிவிடு,இல்லை உருகியே வற்றிவிடுவேன் என உணர்வுகள் கெஞ்சியதால் சொல்லி விட்டேன்..!

நிதானமாய் உங்கள் நட்புச்சாலைகளில் தொடர வாழ்துக்கள்!!!!

                                                                                                                               காயங்களுடன்
                                                                                                                                   -அதிசயா-

Saturday, May 26, 2012

அனுபவமெனும் என் அற்புதம்..!


வணக்கம் நேசங்களே...!


இதுவரை கவிதை எனும் நினைவுக்குழந்தைகளோடு மட்டும் அடையாளமான நான் ,இது முதல் மற்றும் சில நினைவுப் பதிவுகளுடன் உங்கள் வாசல் வருகிறேன்.இப்பதிவுகள் என் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும்; நான் எனக்குள் உணர்ந்தவைகளே..ஏதேனும் தவறுகள் நெருடல்கள் காணப்படின் இந்தச்சிறிய சகோதரிக்கு தெரியப்படுத்துற்கள்.

வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்..!           அனுபவங்கள்  எவ்வளவு  அற்புதமானவை.எல்லைப்படுத்தப்பட்ட சிறிய வாழ்வில் அவசியமான விடயங்களை மிக அழகாகச்சொல்லித்தருகிறது.கண்
சில அற்பமான விடயங்களுக்காக அங்கலாய்த்து, மனம் மிகவே அலை பாய்ந்து,ஐயோ ஆபத்து! என சுயமாக எச்சரித்து, அட வாழ்ந்து தான் பார்ப்போமே எனத்துணிந்து,முரண்டு பிடித்து......
        
      ஓவ்வொரு நொடியுமே எதையாவது சாதித்துவிடத்துடித்து,சிலபல கற்பனைகள் சுமந்து ,கனவுகளில் கீறல் பாடமல் காயங்களை நம்மேல் சுமந்து,வாழ்லின் ஒவ்வொரு அசைவிலும் சிலிர்த்து,எல்லாம் முடிந்த பின்னர் 'அட இவ்வளவு தானா??' எனச் சலித்துஇந்த ,வாழ்வு சொல்லும் அனுபவங்கள் அற்புதம்.!
        
        வலி சுமப்பதும்,அவமானம் தாங்குவதும் வேதனையாக தெரிகின்ற போதும் அத்தனையும் முதிர்ந்து அனுபவமாகையில் எத்தனை எத்தனை உறுதி.!      

          என் சந்தோசங்கள் என்னை திருப்பதிப்படுத்துகின்றன,தோல்விகள் என்னை துணிவுள்ளவளாக்கின்றன.'அந்த நினைவுகளில் மீண்டும் வாழ்ந்து பார்க்கையி;ல் அத்தனை வலிகளையும் அப்படியே ஆழமாக சொல்லித்தருகின்றன.   

        ஒவ்வொரு சம்பவங்களின் பின்னணியிலும் நான் எனக்கு நெருக்கமான பலவற்றை இழந்திருக்கிறேன்.நான் நேசித்த நினைவுகள்,நான் தேடிக்கொண்ட மனிதர்கள்,எனக்காகத் தரப்பட்ட சந்தர்பங்கள்....>,
இவற்றிற்காய் மௌனமாய் மட்டுமே அழுததுண்டு.இருந்த போதும் இருமடங்கு திருப்தியுண்டு,அவை எனக்குப்பரிசளித்த பாடங்களுக்காய்.ல சொந்தங்கள் பிறப்பால் வந்தவை..சில விதியால் இணைந்தவை..சில நானே தேர்ந்து கொண்டவை..இவை மூன்றும் இணைந்ததாயும் சில சொந்தங்கள்..!
    
         சில சமயங்களில் வாழ்க்கை புரியும் நர்த்தனம் புரிவதில்லை.?அது -ஷாத்விகமா?ஹாஸ்யமா??.ஒரே விடயத்தையே சொன்னாலும் ஒவ்வொரு தரமும் சொல்லித்தரப்படும் விதங்கள் புதுமை....!!
  
         வாழ்வில் சில மனிதருக்காக பரிதாப்பட்டதுண்டு, சில மனிதரை பார்த்து விழி உயர்த்தி பிரம்மித்ததுண்டு.இனி இந்த முகங்கள் இனியும் வேண்டாம் என்று வெறுத்ததும் உண்டு.உணர்வுகள் எல்லாம் வற்றி விட்ட பின்னும் சில முகங்கள் மட்டும் மரிப்பதில்லை.இவர்களை பற்றி சொல்வதென்றால் தமிழே! என்னை மன்னிக்க வேண்டும்,உன் வளம் போதாதிருக்கிறது!
   
         நானும் சிலரைகாயப்படுத்தியிருக்கிறேன்.காயப்படுத்துகிறேன்.ஆனால் அடுத்தவர் மீது கீறிய போதும் பலமாய் வலிப்பதெல்லாம் ஏனோ என் வரிகள் தான்..:(  காலங்களுக்கு அக்காயப்படுத்தல்கள் அவசியமாயிருந்தது.அப்போதெல்லாம் சுயத்தில் சுயநலக்கொள்கை பேணவில்லை.பிறர்க்காய் சுய வலி ஏற்றேன்,இருந்தும்   நிராகரிக்கப்பட்டேன்.
      
        தவற விட்ட ஒவ்வொரு தருணங்களையும் மீண்டும் அத்தனை வலிகளோடும் வாழ்ந்து பார்கையில் அனுபவம் எனும் அற்புதம் பாசமாய் என் தலை கோதிப்போகிறது.!

   

''வலிய இந்த இதயம் வாய்த்ததெல்லாம் அனுபவம் எனும் ஒரேஒரு அற்புதத்தால் மட்டுமே''. 

 

நேசங்களே!கொஞ்சமாய் தூசு தட்டி,உங்கள் நினைவுப்பரண்களில் ஏறிப்பாருங்கள்.எத்தனை அற்புதம் காத்திருக்கிறதென்று.

                                                                             


 புன்னகையுடன்
                                                                                                                                                            -அதிசயா-

Wednesday, May 23, 2012

அவளுக்காய் வழக்காடுகிறேன்.... .!


எனக்குள் ஒருத்தி இருந்தாள்
ஒரு தீயாய்..!
பதினான்குகளில்  எனக்குள் மூச்சு விடத் தொடங்கினாள்-இந்த
இருபதுகளில்  விழுதுகளை அனுப்பி  விசாரிக்கும்  அளவிற்கு
என்னுள் விரிந்து விட்டாள்!!!

எனக்குள் பன்மை செய்தவள்-என்னில்
பரந்திருந்தவள் இன்று
தனித்திருக்கிறாள்..!
எதையோ வெறித்திருக்கிறாள்..,
நெடுநேரமாய் விழிகளை தரையில் உருள விடுகிறாள்.,
எப்போதும் போல் நிலவில்  குளிக்கிறாள்
அங்கும் அழுவதற்கென்றே இடைவெளி தேடிப்பார்க்கிறாள்...!

இதோ,
என்னிடமாய் தலை அசைக்கிறாள்..,
உப்பாய் கரிக்கும்ஒருகரத்தால் என் விழி மறைக்கிறாள்,
மறுகையால் தனக்கே திரையிடுகிறாள்.,
இப்படியாய் பேசுகிறாள் இறுக்கமான அவவள் குரலில்..!

எனக்காய் வழக்காடுகிறேன்!
என்னுள் நிறைத்த உணர்வுகளின் தீர்ப்பு மன்றம் இது.
நீ அறியாததில்லை,இருந்தும் சொல்கிறேன்..!
நியாயங்களின் வேலிகளில் என்னை றிறுத்தி,
பாசங்களின் விழிம்புகளில் என்னை  இறுக்கி,
நிர்மலமாய் ஓர்
நிரந்தர உறவானேன்...
விரட்டி வந்த  சபலங்களையெவ்வாம் வென்று  நின்றேன்..!

நட்பு!! ,காதல்!!,பந்தம்.!!.
விருப்புரிமைக்கோரிக்கையுடன் விநோதமாய் சிரித்தது.,
சம உரிமை சம உரிமை  என்று கோஷமிட்டேன்
இன்று வாழ்வுரிமை இழந்து கடைசிப் பகலில்..
விரல் விளிம்புகளில் ஏதோ
ஓதோ ஒட்டி உலர்கிறது..
நீ தேவதை அழுதுகொண்டிருந்தாள்..

அதற்கு மேல் பேசாது ஆவி வற்றிப் போகிறாள்...
கடைசி ஆசையாய்  சைகை தருகிறாள்..!
யாருக்கும் செய்தி அனுப்பாதே..
இருமுறை சாக வைக்காதே  கெஞ்சுகிறாள்.

விதி வெளிகளில் சிந்திக்கிடந்தவளை
அள்ளிச்சேர்த்து  ஒட்ட வைக்கிறேன்..!
ஊனாமாயாவது  என்னுடனே வாழ்ந்து கொள்ளட்டடும்  என்று..
அவள் ஒருத்தி
என்னுள் இருந்த  ஒரு தீ!!!!!!!!
அவளுக்காய் வழக்காடுகிறேன்!

Monday, May 21, 2012

தண்டவாளக் குறிப்புக்கள்


நான் தண்டவாளப்பாதைகளின்  ரசிகை..!
   
ரயில் பயணங்களில் பறப்பதை விடவும்

தண்டவாள இடுக்குகளில் தொலையவே விருப்பம்!!


                                              
தண்டவாளப்பாதை  இது இரகசியக்காதலகளின் சாலை!
       பேசாமல் போய்விட்ட பெருங்காதல்  அத்தனையும்  அருகிருந்துபேசிக்கொண்டு,
       உலோகங்களை உருக்கி விடும் கண்ணீரில் உடைந்தொழுகி,
ஒன்றாகும் எத்தனத்தில் இறுக இறுக அணைத்த நேசங்கள் சுமந்து,
     விரல் நடுங்கும் மோகங்கள் கடந்து,
விழி நான்கில் நிலவொழுக,
      விரல் வெப்பங்கள் அறிமுகமாவது இங்கே தான்..!

                                                                                   
சிலருக்கு நிம்மதிக்கரை தண்டவாளச்சாலை!
       போதையின் வெப்பம் வான் முட்ட 'கேள் மனமே'
என்று சாயச்சொல்வதும்,
       வாய்விட்டழுத வார்தைகளையெல்லாம் தனக்குள்ளே விழுங்கிவிட்டு,
விரல்களுக்கு சொடுக்கெடுத்து நடைவண்டியாகி,
     சிந்திவிடத் துடிக்கின்ற சில உயிரை துடைத்தெடுத்து,
துணையாகும் நிம்மதிக்கரை இதுதான்..!
                                              
தத்துவங்களின் தாய்வீடு தண்டவாளங்கள் என்பேன்!
    ஏகாந்தங்களை வெளியெங்கும் விதைத்து,
ஓட்டங்களின் இடைவெளியில் வெறுமை பூசி,
    தன்னிலும் வலியதை தன்மேல் சுமந்து,
ஓன்றாகி இரண்டாகி மீண்டும் ஒன்றாகி புணர்தலின் விதி சொல்லி,
     தத்துவங்களின் தாயகமாகிறது..!
                                                 
வயதுகளின் பிள்ளைநாள் தண்டவாளங்கள்!
       அங்குமிங்கும் பார்த்து ருபா குற்றி வைத்து,
வழுக்குதல் பரிசோதிக்க பழத்தோல் ஒட்டி வைத்து,
       ரயில் ராகத்தின் மேல் தனிராகம் பாடி,
அந்நிய முகங்களுக்கு கையசைத்து அறிமுகமாகி,
       பின்னோடும் இதயத்தை கைப்பிடித்தழைத்து,
விளையாடும் பாதை இது தான்..!
                                                  
விதி பறித்த காதல்களின் பீனிக்ஸ் தண்டவாளம்!
    கைசேராது என்றானபின்னும் கடைசிவரை அருகாய் வளர்ந்து,
தவறவிட்ட பயணங்களெல்லாம் தனக்காய் வரவழைத்து,
    அவனோடு நிழல் பயணம் போய்,
கனவுகளை நிமிர்த்தி,நினைவோடு வாழச்செய்து
    மீண்டும் பறப்பது இங்கே தான்..!
     

     தண்டவாளக்குறிப்புகள் போதி மரங்கள்..!!!!

Friday, May 18, 2012

அவள் இன்னும் இருக்கிறாள்......!

தூரத்தில் கட்டி வைத்த மரண வாடை ஒன்று
நேற்றிரவு பலமாய் என் சித்தம் கீறிப்போனது..!
சுயதணிக்கை செய்தும்
சிற்றறைகளை நிரப்பி சுவாசத்தை எரித்துப்போனது.,
நான் கண்டேன் அவளை!
இதுவரை அவள் காயங்களை தொட்டுப்பார்த்தில்லை,
ஆனால் இரவுகளில் ஆழமாய் வலித்துப்போகிறது..,

வெளிகளில் தான் தனித்திருக்கிறாள் அவள்
ஏதோ ஒர் வெளிச்சம் தேடி..
தேச புயல் ஒன்று வீசிய போது இவ்விடம் வந்ததாய் ஞாபகமாம்....

'வீடு எங்கே'? நான் கேட்டேன்,
தெருவே களவு போய்விட்டதாம்-ஆனால்
சிரிக்கிறாள்..!
அது வேதனைச்சிரிப்பு.!
கடந்து போகும் காற்றின்
இரத்த நெடி தான் சொன்னது-அவள் இன்னும் இருக்கிறாள் என்று....


அவள் பெற்றவன்
முட்டி முட்டி இறந்து போனானாம் அவள் மார்பருகில்.!
அவளை உற்றவன்
தட்டி தட்டி தேய்ந்து போனானாம் முள்ளிவேலி முடிச்சுக்களை.!


அவள் இன்னும் இருக்கிறாள்.!
நிர்வாண மௌனங்களை கக்கிக் கொண்டு,
பிணங்களின் நிறை மாத கர்ப்பிணியாய்;.,
பாதி உயிர் வற்றிவிட்ட வெளிதனிலே-ஏதோ
ஒர் வெளிச்சத்தை தேடி..

நிலவு வெளிச்சத்தில் ஓடுகிறாள்;-வைத்துப்போன
வரை படத்தை தேடி..
முகத்தை மட்டும் என்னிடமிருந்து மறைத்து விடுகிறாள்,
என்மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாய்,
அவள் இன்னும் இருக்கிறாள்
முச்சு விடும் பிணமாய்....!
தீ தின்ற தென்றலாய்..!

அதோ வருகிறார்கள் அவள்
நிலவுகளை எரிப்பதற்காய்..!
(முடியவில்லை,,
நான் நினைத்ததை முழுதாய் சொல்ல.,
இப்படியாவது சொல்ல முடிந்தது மகிழ்ச்சி.!)
.

Tuesday, May 15, 2012

காதலிக்கிறேன்-ஆதலால் காதலிக்கப்படுகிறேன்

(கவனிக்க! இது பருவ மயக்கமல்ல)

இருளோடு கலை செய்தான் ஒருவன்-அவனால்,
கருவோடு உயிர் சேர்த்தாள் ஒருத்தி,
பிரபஞ்ச வெளிகளில் என்னையும் விதைத்தான் இறைவன்,.
எனக்கு கலவை தந்த பெற்றோரே காதலிக்கிறேன்..
இது வரையும் மாய் செய்கிறாய்-இறைவா உன்னால்
காதலிக்கப்படுகிறேன்..!

பூமிக்காய் கோடு இட்டது வானம்,
இரவுகளில் வெள்ளை நட்டது நில,
நான் அழைத்ததும் வருவதில்லை இரண்டும்!
மழை ஊற்றே,நிலாக் கீற்றே காதலிக்கிறேன்..
காத்திருந்தால் கை நனைக்கிறாய்-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!


வெள்ளை என்றதும் ஓடி வரும் பள்ளிச் சீருடை,
பேனாவால் உயிர் பெறும் தொலைந்த நண்பி,
பழதாகிப்போனாலும் பரிவைத்தொலைத்ததில்லை இரண்டும்!
ஓடி வருகிறாய்,ஓவென அழ வைக்கிறாய் காதலிக்கிறேன்..
ஓவ்வொன்றாய் நினைக்கையில் சிலிர்க்க வைக்கிறாய் -உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!

வெறுமைக்குள் புதிர் பூசும் நெடுஞ்சாலை,
இடைக்கிடை முளைத்து நிற்கும் சாலைக்குறியீடுகள்,
எத்தனை தரம் பார்த்தாலும் விழிகளில் வினாக்குறி வளைகிறது!
இரவு வழிப்பயணங்களே,ஜன்னல் பெற்ற பிள்ளைகளே காதலிக்கிறேன்..
வெளிகளில் தனிக்க விட்டதில்லை-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!

மிதக்க வைக்கின்ற வெள்ளைக் கோலங்கள் முகில்கள்,
'முடித்து விடாதே'கெஞ்சும் இரவுக்கோர்வைகள் கனவுகள்,
நேரங்கள் தொலைவதைக்கூட ரசிக்க முடிவது இங்கே தான்!
வான்துப்பிய மேகங்களே,வாழச்சொல்லும் கனவுகளே காதலிக்கிறேன்..
எப்போதும் எனை ஈர்க்கும் ஏகாந்தமே காதலிக்கப்படுகிறேன்..!

வாலிபம் காட்டும் சதைக்காதலல்ல இது!
மாலையிடும் மலர் காதலுமல்ல இது!
நொடிநொடியாய்,துளித்துளியாய்
வாழ்வு பின்னும் நெசவுக்காதல் இது!
கொஞ்சம் கொஞ்சமாய் நினைவெடுத்து
அழகாய் நிறம் கலந்து
அழுத்தமாய் அறிவுரைக்கும் உண்மைக்காதல்
சைவமாய்,அசைவமாய்
உன்னையும் அணைக்கும் காதல்...!

Friday, May 11, 2012

'நான்' அறிமுகமாகிறேன்..!

பதிவுலகின் சொந்தங்களுக்கு
முதல் வணக்கம் கூறி பதிவிடுகிறேன்
அது வரை நான் அந்நிய முகம்தான்
அறிமுகமாகிறேன் ஜக்கியமாவதற்காய்...

நான் 'அதிசயா'
பெரிதாய் அடையாளங்களற்ற அமைதிப்புல்லாங்குழல்..
வெட்ட வெளிகளில் அமர்ந்து கொண்டே,
எனக்குள் மட்டுமாய் இசைத்துக்கொள்ளும்
அமைதிப்புல்லாங்குழல்.!

எனக்கு உயிர் தந்த தெய்வம்,
எனக்குள் உயிர் செய்த சொந்தம்,
விதி பெற்ற பந்தங்கள்,
சித்தங்களில் நிறைந்து விட்ட அற்புதங்கள்,
விழியை கிழிக்கும் கம்பிகள்,
இவையெல்லாம் என் இசைப்பிள்ளையாய்..!

கவிதையெனும் ஆன்மாவை அணைத்துக்கொண்டே,
காலங்கள் தாண்டி யுகங்கள் துறந்து,
கண்ணோரம் மழை கசிய,
மலை வெளிகளில் மிதந்து செல்வேன்..!

மஞ்சள் வெயில் வற்றி விட்ட முன்னிரவில்,
நிலவுடன் நனைந்து கொண்டே,
உங்கள் காதோரங்களில் கடந்து செல்வேன்..
கொஞ்சமாய் புன்னகைத்து தலை கோதுங்கள்-என்
கவிதைகளுக்கு..
நித்தியமாய் மழை கழுவும்
என் சாலைகயின் பூக்களை..!


பதிவுலகின் வாசல்களில் வெளிச்சங்கள் நட்டுவைத்த என்
பாசத்துக்குரிய இணையசகோதரனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...!
Related Posts Plugin for WordPress, Blogger...