Saturday, March 5, 2016

நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம் போல.இப்போதும் அப்படியே தான்..

அனன்யா இன்று உனக்கொரு சத்தியம் செய்கிறேன்.என் மீது காட்டும் பிரியங்களின் பொருட்டு எனை திருமணம் செய்து கொள் என்று உனை கேட்கமாட்டேன் அனன்யா.உன் மீது மிகவே மரியாதை கொண்டுள்ளேன்.உனை யாரென்று அறியாதவன் நான்.ஆனாலும் நீ தேவதையாய் இருந்தல்வா என்னை ஆசீர்வதிக்கிறாய்.உனக்கான கனவுகள் மீது என் விருப்பங்களை திணிக்க மாட்டேன் அனன்யா.ஒரு காற்றுப்போல இப்போது இக்கணம் உனை உணர்வதே போதுமாயிருக்கிறது.
அனன்யா திருமண மாலையின் பாரங்கள் உன் மென்மையான சிறகுகளை பலவீனப்படுத்தும்.ஆதலால் திருமணம் பற்றி பேசமாட்டேன்.உன்னுடன் கூடவே வாழ்வனைத்தும் ஓர் வழிப்போக்கன் போல வந்து விடுகிறேன்.அனன்யா என் சபல புத்தியும் திடமற்ற நினைவின் பொருட்டேனும் என்னையும் விரல் கோர்த்தபடி கூட்டிச்செல்வாயா?
நீ இன்றி என்னால் இங்கு இயங்க முடியவில்லை அனன்யா.இந்த காட்டில் இப்போது பொழியும் குளிர்ந்த நிலவும் உன் உதட்டுச்சாயமும் போதும்.இரவையும் பகலையும் மாறிமாறி படைத்தபடி இங்கேயே வாழ்ந்துவிடுவோம்.பின்பு நம் கேசத்தின் சரிவு வழி வேறோர் தேசம் போய்விடுவோம் அனன்யா.என் நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம்  போல.இப்போதும் அப்படியே தான்....இப்பளிங்கு விரல்கள் போல் ஏதேனும் உண்டோ சொல்.போர்க்களத்தின் முன்வரிசையில் நின்றிருந்தேன்.நடுக்கமுறும் கால்களை நிறுத்தி வைப்பதே எனக்கு போராட்டமாய் இருந்தது.ஆனாலும் விசுவாசம் மிக்க போராளியாய் எனை காட்டிக்கொண்டிருந்தேன்.போதும் அனன்யா இனி உடைவாள் மற்றும் ஆயுதங்களை அனைத்தையும் ஸ்பரித்து நீ பூக்களாக்கிவிடு.என்னை நான் விரும்பும் உருவமாகவே இருக்கவிடு.நேசித்தல் ஒன்றே தேவை.அதுவும் உன்னிடமிருந்தே வேண்டும் அனன்யா.இச்சந்திப்புக்கள் எதுவரை நீளுமோ?இளைப்பாறுதலே உன்மீது கிறக்கமுற்றிருக்கிறேன்.ஆனாலும் என் நிதானங்களை உன் தேவ நேசத்தால் நிரப்பி வைத்துள்ளேன்.ஆதலால் சத்தியம் செய்கிறேன்.

அனன்யா  உன் போல் ஆறுதலை வேறுஎங்கும் உணரவில்லை.அடிமனதில் உறைந்து போன அச்சங்களும் பிடிப்பின்மையும் நடுநிசிகளில் அலறலாய் துரத்துகிறது அனன்யா.என்னிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அனன்யா.வீடற்றவனின் வேதனைகளை ஒத்தது இந்த தப்பியோடல் என்பது.எதுவரை அனன்யா ஓட முடியும் சொல்? யாருமே கேட்கவில்லை என்கிறார்கள்,அன்றேல் பழகிவிடும் என்கிறார்கள்.என் அனன்யா பக்கம் வா.உனக்கே கேட்கும் அனன்யா அந்த அலறல்கள்.அதன் பின்னும் இப்படியே தான் எனை நேசிப்பாய்.பின் எப்படி நீ இல்லாத இரவின் பாடல்களை ரசிக்க முடியும்.மருண்டு போய்விடுவேனே.வேண்டாம் அனன்யா என்னையும் கூட்டிப்போய்விடு.ஏகாந்தம் ஒன்றில் எனை தரித்துவிடு.அனன்யா முடிந்தவரை முயன்றுவிட்டேன் அனன்யா.எந்தப்பாடல்களிலும் பொருள் இருப்பதாய் தோன்றவில்லை.இதை சொல்லி அவர்களை சங்கடப்படுத்தவும் முடியவில்லை.அனன்யா உனை நிர்ப்பந்திக்கவில்லை.ஆனால் தயை கூர்ந்து கருணை காட்டகேட்கிறேன்.எனையும் கூட்டிப்போ..அன்றேல் நாளையும் இங்கு வா அனன்யா..

2 comments:

  1. எதைனை கருப்பொருளாக பொருள்கொள்க! கற்பனை என்று தாண்டி போகவும் முடியல அனன்யா மனதை குடையுது! மீண்டும் வலையில் பார்ப்பது மகிழ்ச்சி சொந்தமே என்று சொல்லமாடேன் [[[

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...