Monday, June 23, 2014

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

எனதன்பே..
நீள் பாதையில் நனைந்தபடி பயணப்பட்டிருந்தேன்..!
இக்கடல் பாதையில்
வளையங்களை தோன்றச்செய்கிறாய் நீ..
வெறுங்காற்றை தான் உயிர் என்று நிரப்பியிருந்தேன்-என் காவலனே
பெருங்காற்றில் தான் மீண்டுமொரு உயிர்பெறுகிறேன்..
இது பளிங்குக்கனவுகளையும்
ஆதிக்காதலையும் ஒத்திருக்கிறது.

பெரும் துடுப்பு ஒன்றை வலித்தபடியே
நிதானப்புன்னகையை என் திசை நோக்கி விரித்துவிடுகிறாய்.
இப்போது இரு கைகைளையும் அகல விரித்து
என் தேசத்திற்குள் உனை நிரப்புகிறேன்.

ஈரத்தின் துணிக்கைகளில் ஒவ்வொன்றிலும்
உன் காதலின் தூறல் சொட்டிக்கொண்டிருக்கிறது..!
இதுவரையும் உன்னை அணைத்துக்கொள்ளவில்லை.
கண்ணியத்தின் இந்த இடைவெளிகளையும்
அணுவும் மீதமின்றி காதல் காதல் காதலே நிறைத்திருக்கிறது..!

இடது தோளில் உன் பயத்தின்தவிப்புக்களையும்
அதன் கேசங்களில்
என் நியாயத்தின் தீர்த்தங்களையும் பரிமாறிக்கொண்டிருக்கிறேன்..!

நீல நதி இது நிலவில் குளிப்பது போல்
இவ் ஓடம் முழுவதுமாய் கரைந்திருக்கிறது உலகக்காதலின்
இரகசிய கண்ணீர்..
இதுவரையும் நிதானப்புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துகிறாய்
காதலே..!

மயிர்க்கான்களில் ஒட்டிக் கொள'கிறாய் என்காதலே..!
நுரையும் கரையும் தொட்டுக்கொள்ளும் இடைவெளிகளில்
நாற்காலி ஒன்று அமைத்துக்கொள்வோம்..!

..

எனக்காய் ஒரு கிளிஞ்சல் மட்டும் பத்திரப்படுத்தி வை.
ஏகாந்த பயணத்தின் இரவு
ஒன்றில் மீண்டும் உனக்கான படகை அனுப்புவேன்..

பின்னொருநாளில் நரைத்த என் காலங்களில்
அக்கிளிஞ்சல் கொண்டு ஏதேனும் தோற்றம் உண்டாக்கு.
காதோரத்து வெள்ளிக்கம்பியில் கூட முன்னைநாள்
ஊஞ்சல்களின் தடம் இருக்கும்.
ஒருவேளை நம் காதல் அன்று அவ்விடத்தில்
மீண்டும் பிள்ளைப்பயணம் புறப்படலாம்.

நீ அறிந்திருப்பாயா...
ஜிப்ரானின் காதலி கூட ஒரு காலத்தில் ஏகாந்த பயணியாக இருந்திருப்பாள்.

நான் இனி தனிப்பயணம் போய் வருகிறேன்.-அதுவரை
நம் காதல்
வளர்ந்து நனைந்திருக்கும் பெருவெளியில் உட்கார்ந்திரு

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

Tuesday, June 10, 2014

நான் நூலாகிக்கொண்டிருந்தேன்-நீண்ட மொழிபெயர்ப்பிற்காய்.....................................................................................................................

இருள் கரு நின்று புறந்தள்ளப்பட்ட
பச்சிளம் புலர்வொன்றில் நான் நூலாகிக்கொண்டிருந்தேன்.

நெடிந்து விரிந்த முன்னைநாள்சோகம் ஒன்றை
மீள்நிரப்பி அதற்காய் வருந்திக்கொண்டிருக்கையில்...
சமாதானம் எதைனையுமே முன்னிறுத்தாமல்
முற்றுமாய் ஆழ அனுபவிக்கிறேன்..
உயிர் வலி இது என...!

பேருந்தேசத்து ராஐ◌ாக்களே
இப்போது உம்மைப்பற்றிய உயர்வுநவிற்சிகள் புனையேன்..
சேனாதிபதிகளே உம் ஈட்டி வெளிச்சங்களுக்கு சூரியத்தேரினை அழைப்பதாயுமில்லை..
சருகுப்பூமி ஒன்றில் சுதந்திர நிலவு குடிக்கிறேன்..
இப்பொழுதில் நான் நானாவே...!

இந்நிலையில் என்இயலாமையின் பக்கங்களுக்கு
வெளிச்சம் பூசுகிறேன்.
ரகசியமான தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன்..
அப்பா எனக்கும்
எனக்கும் ஓர் காதல் இருந்திருக்கக்கூடும்.

தேநீர்ப்பொழுதுகளில் மிதந்திருந்த தனிமைகளையும்
நெடும் பணயத்தில் எனக்குள்கேட்ட புல்லங்குழல் கீதத்தையும்
விட்டு விட்டு கட்டி பட்ட இருதயத்து ஈரங்களையும்
உங்களிடம்தருகிறேன்.

பேசாப்பொருள் பற்றி என்னோடு விவாதிக்க விரும்புகிறேன்.
விலைமகளின் கண்ணியங்கள் பற்றியதாய்..
தழுவுதல்களுக்குள் இருக்க்கூடிய காமம் பற்றியதாய்..
கோமாளிபொருவன் சுமக்கின்ற பெருங்கண்ணீரைப்பற்றியதாய்..
பிரம்மச்சாரிகள் நடுங்குதல்கள் பற்றியதாயேனும்..

என்அகத்தினுள் உள்ள திருடனை தண்டியுங்கள்.
சிந்தனை திருடனாய்
கனவுகளின் திருடனாய்
ரகசியங்களின் திருடனாய்
எப்படியேனும் உம்மிடம் எதையேனும்திருடியிருந்தால் தண்டியுங்கள்.

வன்முறை பற்றியும் சொல்லியாக வேண்டும்.
உள்ளே ஒருவேள்வி வளர்ந்திருந்தது-அது
முற்றுமே வன்முறையை பற்றியிருந்தது..
நான் எரித்தலை விரும்பினேன்..
முன்வரிசைப்போர் வீரனாய் சூறையாடல்களை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
இக்கலவர காரியை கைது செய்வாயினும் சம்மதமே..

இனி நான் ஒளித்துகள் பிடித்தபடி விண்மீன் தேசம்
செல்லப்போகிறேன்..
அட்டைப்படம் ஒன்றில் இக்காட்சியை பொறித்திடுக.

இப்புறப்பாடுகளிலும் மீண்டும் வந்திறங்கலிலும்
எவர்செல்வாக்குமிருக்கவில்லை.
இக்குளிருக்கு தேநீர்கதகதப்போ
மனித வெப்பங்களோ தேவைப்படவில்லை.

மர மறைவில் நின்றுகல்லு வீசாதீர்.
சோலை சுகந்தங்களை விடவும் கல்லெறிதல்களை நேசிப்பேன்.-அது கண்ணெதிரில் நிகழ்தப்பட்டால்..

இக்கணத்தில் தள்ளி நின்று எனைப்பார்கிறேன்..
நானெனும் என் பிரதி இப்போது அடர்தியாய' இருக்கிறாள் சலனமற்று.

இப்படியாய் சிலபின்னிரவுகளில்
நான் குற்றஅறிக்கை செய்து கொள்கிறேன்..
எனை நானாகவே சந்தித்துக்கொள்கிறேன்.

நீண்டதாயினும் இது நிர்மலமானது.
இப்பாத்திரத்தில் மதுவை ஊற்றுங்கள்
பாலையும் ஊற்றுங்கள்..
கண்ணீரையும் நிரப்புங்கள்..
எதுவானாலும் ஒற்றை இயல்பை மட்டுமே எனக்காக்கிக்கொள்வேன்.

இவ்விரவில் மிக நேர்தியாக எனை பதித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் நுலாகிக்கொண்டிருக்கிறேன்..
எண்ணப்படி இதனை மொழிபெயத்துக். கொள்ளுங்கள்.
ஆனால் அதிகம் இரைச்சல் எழுப்பாதீர்கள்.

நான் மௌனங்களைளே மொழிபெயர்க்க காத்திருந்தேன்.

-அதிசயா-

Wednesday, June 4, 2014

அவமானங்களை கொண்டாடுகிறேன்...!தரிப்புகள் எது என்று தீர்கமாக தெரியாத தள்ளாட்ட பயணம் ஒன்றின் தளம்பல் படகோட்டிகள் நாங்கள்.பேரலைகளை கண்டு திகைத்தாலும் ஏதோ பிடிமானத்தை பற்றியபடி தூரத்தெரியும் சிகரம் ஒன்றிற்கான தேசம் பற்றி வலிந்தேனும் பயணிது சில தேசங்களை  வென்றுவிடுகிறோம்.

வெற்றியின் அடையாளதாரர்களாக நாம் இருந்தாலும் அக்கிரீடத்தின் உரிமைகளை பலபேருடன் பங்கிட்டுக்கொள்கிறோம்.'உன்னால் தான்...உனக்காகவே தான்..'இப்படியான் அறிக்கைப்படுத்துகிறோம்...'

ஒத்துக்கொள்ள மாட்டேன்.சில நேசங்கள் நெருக்கங்கள் வெற்றிக்கான  தொடக்கமாக இருப்பினும் நாள்பட்ட தோல்வியின் நெருடல்களும் அவமானம் கீறிப்போன பெருங்காயமும் எக் கிரீடங்களுக்கான பங்காளிகள் என்பேன்.அதற்காக  நேசிக்கிறேன்.

காத்திருந்து கண்வலித்து சித்தம் உக்க சிந்தனை வயப்பட்டே பல தேசங்களை கடந்திருக்கிறேன்..துடுப்பு வலிப்புகளின் போது இரு காதுகளை இறுக பொத்திக்கொள்வதற்காக பல தடவை துடுப்பை கைநெகிழ்ததுண்டு.படகோட்டி மாவீரன் வருவான் என்று கரை பார்த்து கண்கசிவதை விட என் கடல் பெருங்கடலாயினும் சுய பயணத்திற்கான  தீர்மானங்களுடன் நுரை தொட்டு நீந்திப்பார்த்தேன்.கடல் கோபமாயிருந்தாலும் அடத்தியில் நிதானம் புரிந்தது.

எல்லாக்கணங்களும் அதீத சிரத்தையுடன் நகர்த்தப்பட்டாலும் பேரலையாய்..பேய்ப்புயலாய் இந்த தோல்விகள் துரத்தும்.
வெள்ளி அலையில் துள்ளி விழும் மீனினம் போல இந்த வாழ்வும் அவ்வப்போது ஆனந்த நர்த்தனம் புரிகிறது.

தொலைதூர பயணி முகவரிஅற்ற சத்திரத்தில் இதமாய் ஓய்வெடுத்து மீண்டெழுவது போல இன்னதென்று அறியப்பாட இந்த நர்த்தனங்களின் மடியில் கையணைத்து
 இளைப்பாறியதுண்டு.
சமர்ப்பணங்கள் தாண்டிய தேசங்களையே நான் விரும்புகிறேன எப்போதும்.ஆனால் நன்றிகளுககும் மானசிக வணங்குதல்களுக்கும் நிச்சயம் இடம் கொடுக்கிறேன்.


 வேட்கைகாரியின் ஓர்மங்களை மிகவே ஒத்த மனோநிலை இது.கர்வம் சுமந்த துரித வேகமாயினும் நிதானங்கள் ஒருபோதும் தப்புவதில்லை.இப்பயணத்தின் எல்லைகளில் தேசங்கள் மட்டுமல்ல சில நேசங்களும்  வெல்லப்படுகின்றன.


.பெருங்கடல் கடந்து சிறு தேசம் ஒன்றை சுவீகரிக்கையில் ஒரு படைத்தளபதி போல அல்லாமல் யுவராணியாகவே எனை கண்டதுண்டு.தோல்விகளையும் கூர்கற்களையுமே என் சேனைத்தளபதிகள்.கிரீடம் சூட்டப்படும் கணங்களில் ஆகாயம் நோக்கி வெளிச்ச பாணங்களை  அனுப்புகிறேன்.அங்கிருந்து சொரியும் ஏதேனின் பூக்களோடு கொண்டாடுகிறேன் என் தோல்விகளின் வலிகளை.இங்கிருந்தே என் மகுடத்திற்கான ராஜ அலங்காரங்கள் புறப்படட்டும்.

-நேசங்களுடன் அதிசயா-

Tuesday, June 3, 2014

மழை கழுவிய பூக்கள்: நேசத்துறவு

மழை கழுவிய பூக்கள்: நேசத்துறவு: இனிமேலும் நேசத்தரிப்பிடங்கள் பற்றி நினைப்பதாயில்லை. நீண்டதாயினும் நெடுந்துயர் சுமந்ததாயினும் இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து...
Related Posts Plugin for WordPress, Blogger...