Wednesday, September 12, 2012

விடை கேட்டு வருகிறேன்,வாசல் திறவுங்களே...!


விடை  கேட்டு 
விரல் அசைத்து
விலகப்போகிறேன்.-வாசல் திறவுங்கள்.

நான் "அதிசயா"-"மழை கழுவிய பூக்கள்"  தான் விலாசம்.
அன்றொரு நாள் பொறி ஒன்று விழுந்த வேகத்தில் எம்பிப்பறந்தவள்
அதனால் தான் வானங்கள் எனக்கும் வசப்பட்டது,
வார்த்தைகள் வரிக்குள் சிறைப்பட்து.
அறிந்திரா முகங்களோடு அணுஅணுவாய் நெருங்கி
சொந்தமென்று தேர்ந்துகொண்டேன.
சேர்த்துக்கொண்டீர்.

இதுவரை இங்கு வாழ்ந்தது மெய்தான்-இனியும் 
வாழ்வேன்  சிறு இடைவெளியின்  பின்
அதுவரை
நான் போகிறேன்..... சாகிறேன்.......!
மூன்று திங்கள் முடிந்து விட்டால் மறுபடியும் 
மூச்சிரைக்க ஓடி வருவேன்.
அன்று
முத்தங்கள் நான் கேட்கவில்லை
முகங்களையாவது காட்டுங்கள்.

இருபதுகளில் இன்னொரு முறை 
இங்கு நான் பிறந்ததால்
ஒழுகிவிடாத உறவொன்றை 
உயிர்கரையில் உணர்கிறேன்.
இவ்விடத்தை மிகவே சிநேகிக்கிறேன்.
இப்படியே என் பொழுதுகளை நீட்டி விடவே வாஞ்சிக்கிறேன்.

நின்றுவிடாமல் என்னை நிரப்பிய நேசத்தூறல்களே
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!
 (http://athisaya.blogspot.com/2012/07/blog-post_16.html)
நிலவொன்றில் நனைந்தபடி
இரவின் உபாசகியாய்
ரம்மியமான பொழுதொன்றில் இதை எழுதினேன்....!

 இன்னும் சொல்லுவேன் சத்தமாய்
 (http://athisaya.blogspot.com/2012/08/blog-post_17.html)
என்னை மிகவே பலவீனமாக்கி
விரட்டி அடித்து பின்
பேராற்றலாய் பெருங்கடலாய் என்னுள் தைரிய்ம்விதைத்த பதிவு..!

இப்படியாய் இங்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றாய் பின்னணிகள்..
தப்பான தாளமிட்டும் 
நேரம்பிந்தி மேடையேறியும்
சபைமரியாதையில் குறைவிட்டும் தவறியிருக்கிறேன்.
என் பிரிதலின் பொருட்டு 
என்னை மன்னித்து விடுக நேசங்களே!!.
அதிசயாவை அங்கீகரித்த 
என் உலகின் அதிசயங்கள் நீங்கள்.

பலமான காற்று ஒன்றில் 
அவசியமாய் அசைக்கப்படுவதால்
மிதந்து கொண்டிருக்கிறேன் அமைதிவெளி 
ஒன்றை நோக்கி...,
கொஞ்சம் கண்ணீரும் 
மிகுதி பாரமுமாகி விடை கேட்கிறேன்.
இது முடிவல்ல தொடக்கம் தான்
ஆயிரம் சொல்லை ஆதாயம் என்று ஆக்கினாலும்
 "சொந்தம்" என்பதில் ஏதோ சுகம் சுகிக்கிறேன்.

"நான்"
முடிந்த பின்னும் இங்கு தான் வாழ்வேன்.
வேர்வழி வெளிச்சத்துகளாகி
மீண்டும்
ஒளிப்பூக்களோடு உங்கள்
வாசல்களில் வருவேன்.
வரிசைப்படுத்த இயலாத என் சொந்தங்களே
இன்று தள்ளி நின்று அழுது பார்க்கிறேன்.
பொழுதுகள் பூப்பெய்தும் அந்தி ஒன்றில' வருவேன்
விருந்தாளியாய் அல்ல 
உரிமைக்காரியாய்..
கேட்டுவிடாதீர் யார் நீ என்று.

நேசங்களை நினைவுகளில் சுமந்து
பயணப்படுகிறேன்.
மலைகளில்  மூச்சி முட்டி திரும்பும் கணங்களிலெல்லாம்
நிறைத்துக்கொள்கிறேன் இந்த நாள் நேசங்களை எனக்காய்..!

சின்ன விரலை உதற மறுக்கும் குழந்தையாய் மனம் 
இங்கேயே நிற்கிறது.
பலவந்தமாய்  பக்குவமாய் விரல் விலக்குகிறேன்..!
ஒற்றைப்புன்னகையோடு தலைதடவுங்கள்.
நிம்மதியாய் போகிறேன்-நான்
உங்கள் சொந்தம் அதிசயா...!


உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!


என் கல்வித்தேவைக்காய் வேற்றிடம் செல்லவிருப்பதால் சில காலம் பிரிவை அனுமதித்துள்ளேன்.மீண்டும் சந்திக்கும் பொழுதுகளிற்காய் காத்திருக்கிறேன்.சந்திப்போம்என் இனிய சொந்தங்களே!!!!!!

(ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேற பொம்மை ஒன்று வாங்கிடுங்க.:)

அன்புடன்
-அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...