Monday, December 12, 2016

அனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்


முயன்று முயன்று சொல்லாது தோற்றுப்போன ஆசைகளிலெல்லாம் கடைசியில் சூடான பெருமூச்சாய்  நீ தான் வந்து விழுகிறாய்.உன்னிலிருந்து எனைப்பிரித்துதெடுத்துவிட்டுபெரும் இறுமாப்புடன் தனித்திருக்கிறேன்.ஆனாலும் அனன்யா உன் பொன்பாதங்களை தொழுது, என்னிரு உள்ளங்கைகளில் உன்னை தாங்கியதும், வழக்கங்களையெல்லாம் புறக்கணித்து வேண்டிய  போதெல்லாம் நெருங்கியிருந்த நினைவுகளும் தகிக்கும் இந்த இரவுகளில் பேரலையாய் உள்ளே எழுந்து எனை பெரிதும் அலைக்கழிக்கின்றது.
நான் மிகவே நேசித்தவளே என் பற்றியதான படிமங்களே எனக்கு  முக்கியம் என்று உன்னிடம் அடிக்கடி உன் முகத்தெதிரே சொல்லியிருந்தேன்.பின்னும் நீ நேசித்தாய்.என் நேசத்தை வெளிப்படுத்திய போதெல்லாம் நீ வெண்ணிற மேகமாய் திரளத்தொடங்கினாய். ஆனாலும் நம் ஏதேனின் தோட்டங்களில் முளைக்கத்தொடங்கிய சர்ப்பங்கள் ஒவ்வொன்றாய் உன் குதிக்காலை தீண்டிய போதெல்லாம் உனை காத்துக்கொள்ள தவறியிருந்தேன்.நீ என் வாழ்க்கை முழுதும் வழித்துணை வந்தால் என் பயணங்கள் சுவாரஸ்யமாயிருக்கும் என்பதை சொல்லக்கூட திராணியற்றவன் நான்.இப்படியாய் நம்  நேசிப்பின் ஆழங்களில் நானே மண்மூடி நிரப்பிக்கொண்டிருந்தேன்.அவை தூர்ந்து போவதை கண்ணெதிரே கண்டும்,என் 'தெளிவாயிருக்கிறேன், என் பிம்பங்களை காத்துக்கொள்கிறேன்' என சுயசமாதானம் செயது கொண்டேன்.
நான் உனை நேசித்தேன் என்பது எதன்பொருட்டும் எங்கும் அறிக்கையிடப்படாமல் காத்துக்கொண்டேன். உன்னிலிருந்து விடுபட்ட சுதந்திரத்ததை ஒரு விடுதலையை போல கொண்டாடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அனன்யா இந்த சுதந்திரமே பெரும் துயரமாகிப்போனதே..இத்தனை இடைவெளிகளின் பின்னும் தனித்த இரவுகளில் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒன்றில் என் தேடல் நீயாய் இருப்பாய்,அன்றேல் நான் தேடுவது எது என்பதை நீ அறிந்தேனுமிருப்பாய்.

அனன்யா என் இதயத்தின் துயரமே,
இப்படியாய் ஒரு அந்தியில் உன் கைகளை இறுக கோர்த்தபடி நமக்குப்பிடித்தபடி பௌர்ணமி கடலை பார்த்துக்கொண்டே உன்னிடம் என் காதலை சொல்லக்கிடைத்திருந்தால்....

அனன்யா இங்கிருந்து எங்கேனும் தொலைவிற்கு போய்  மலையடிவாரங்களில் உன்னோடு வாழலாம் என்று கற்பனை செய்து ஆனந்திக்க விரும்பவில்லை.திருவிழாவில் தொலைந்த பிள்ளை தாயின் நெஞ்சில் புதைந்து அழுவதை போல இந்த நொடியே உன் நெஞ்சில் புதைந்து அழவேண்டும்.இத்தனை தூரம் என் அனன்யா உன்னை மீண்டும் நெருங்கமுடியா தொலைவிற்கு புறப்பட செய்துவிட்டேனே. இந்த இரவின் மாடியின் உச்சியில் நின்று பார்க்கையிலே ஔி உருண்டையாய் நீதான் இந்த நகரமெங்கும் வியாபித்திருக்கிறாய்.ஒரு தடவையேனும் உன்னிடம் கேட்டிருக்கலாம் அனன்யா.அன்றேல் ஏதும் பேசாமல் கோர்த்திருந்த நம் கைகளை திருப்பி ஒருதடவையேனும் நான் முத்தமிட்டிருக்கலாமே.

இத்தனை வருடங்களின் பின் இப்படி ஒரு இக்கட்டிற்குள் உனை பற்றி நினைக்கிறேன்.சீக்கிரம் இன்னும் வேகமாக உனை பற்றி நினைத்து  முடித்துவிட வேண்டும்.உனை சீக்கிரம் அனுப்பியது போலவே என்னையும் நான் அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது.அனன்யா அடர் மழையும் இரவும், ஒரு கோப்பை கோப்பியும் தருகின்ற கவிதைகளைவிட உன் மீது கொண்ட வேட்கையும் நேசமுமே எனக்கு கிளர்ச்சிமிகு கவிதைகளாயிருந்தன.அனன்யா யாரையும் போல இல்லாத உன்னை யாரால் பிரதி செய்ய முடியும்  சொல்.
இத்தனை நாட்களாக அனன்யா  அனன்யா என புலம்பியபடி நான் கேட்ட கேள்விகளுக்குகெல்லாம் உனக்கு பதில் தெரிந்திருந்தும் திறக்கப்படா மிருதுவான உதடுகளோடு, மிக சாந்தமாக இருந்தாய். வலி என்று தெரிந்தும் வருடாத உன் விரல்களின் புறக்கணிப்பே எனை அச்சுறுத்துகிறது.அனன்யா உன் வாசலில் பொறிக்கப்பட்ட நம் பாதங்களை பார்க்வென நீயுமறியா நேரத்தில் காற்றாய் வருவேன்.இத்தனை காலத்து வாய்ப்புக்களையும் உனக்காக தவிர்த்துவிட்டு  என்றேனும் ஒருநாள் உனை காண்டடைவேன் என திண்ணமாய் நம்பினேன்.தேடி வந்த மாலை ஒன்று தோள் அமரப்போகிறேன் என்கிறது.அன்பே  வாசல்கள் யாவற்றையும்  அடைத்துவிட்டு  வலுவாய் சிரிக்கும்  காலத்திடம் மண்டியிட்டு மன்றாடினாலும்  மனமிரங்காதே..

அனன்யா நீலக்கடல் நின் நினைவு,அலைக்கழிக்கிறது.நான் நினைப்பதை இப்போதே ஒப்பித்துவிடுடோமென்றால் இரைச்சல் மட்டும் தான் ஒப்பிக்க முடிகிறது.அனன்யா என் அனன்யா மிகவே தனித்திருக்கிறேன் இந்நொடியில்..இனியும் ஔிந்து கொள்ள இடமில்லை.காப்பாற்றும்படியான வார்த்தைகளுமில்லை.எத்தனை தொலைவு வரை தான் ஓடுவேன் சொல்?  :(
எனை தேற்றத் தெரிந்தவளே ,
எல்லா அனுமானங்ளின் பொருட்டும் எனக்கான சங்கடங்களின் பொருட்டும் எனை அணைப்பதாய் பாவித்து தேற்றிவிடு.நானும் உன் மெல்லிய விரல்கள் என் கேசத்தின் ஊடு படருவதாய் நினைத்துக்கொள்கிறேன்.எப்படிமக்கான இந்த வார்்தைகளை முடியவைப்பனெதெரியாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.அனன்யா நீ ஒருமுறை கருணை கூர்ந்து எனை கடந்துபோகையில் விரல் நுனியால் முட்டிவிட்டேனும் போ.நீ தீண்டா வாழ்வனைத்தும் துயரின் அடர்ந்த நீலமாய் எனை அலைக்கழிக்கும்.

1 comment:

  1. மழை நன்றாகவே பெய்கிறது

    http://www.viyanpradheep.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...