Saturday, August 27, 2016

தீராக்காதலின் முத்தக்காரா

நேசத்தில் தோய்ந்து வழுக்கிய காலங்களில்
நின் விரல் தொட்டு உலர்ந்த மழைப்பொழுதுகளில் உன் ஈரப்பாதங்கள்..

குறையாத நம் முத்தத்தின் உஷ்ணங்கள் எனை பின்னிக்கொண்ட நாளிகைகளில்
மையலுற்றுனையே நீங்காது நோக்கியிருந்த வேளை
துடித்தடங்கும் இதயத்தின் முடுக்கெங்கும் படலமாய் முளை கட்டியிருந்த நின் வாசங்கள்...

எங்கிருப்பதென் விரலென தேடிச்சேர்கையில் காற்புள்ளிக் காற்றும் இருக்கவில்லை.
கைமுளைத்த காற்று நமை நகர இடமின்றி அணைத்திருந்தது..

உன்னை ஸ்நேகிக்க ஸ்நேகிக்க போதையாய் பொழியத்தொடங்கிய மரங்கள்..
கூடைகள் நிரம்பிய இளவேனில் இரவொன்றில் சருகிலிருந்து முளைத்த பூக்களோடு உற்சவமாய் நம் அன்பை வரையத்தொடங்கினாய்..
நீள  கனவு இழையும் வரையும் நிலவுப்பொழிவு நிகழ்ந்துகொண்டேயிருந்தது..

மல்லிகையானவனே என் வானமெங்கும் பரவி படர்ந்துகொள்
மெல்லிய காலை புலர்கையில்
கொலுசு சத்தமிடுவேன்
நம்மோடு நிலவு மறைந்துபோக
உச்சிமுகரும் முத்தங்களோடு வெளிச்சக்கனவு தொடங்கட்டும்

என் வகிடு நீ பிரித்து நீட்டி விடும் சாலைகளில் பொழுதெல்லாம் உலவிக்களிப்போம்.
பாதியும் பின் மீதியும் நீயாகி நிறைந்த பின்பு உனை சுமக்கும் காலங்கள் பேறுபெற்றவை.

கட்டுண்டு கிடக்கும் நேசிப்பின் நரம்புகளில் தடுமாறி விழுந்தாலும் பற்றி எழும் இடமெல்லாம் மீட்டும்படி இருக்கிறாய் ஸ்நேகிதா..

நேசத்தின் ஆதிமுதலே
நீ எழுதத்தொடங்கும் வரிகளை
என்மொழியில் படித்து விடும் பிள்ளைத்தவறுகளில் மறக்காமல் புன்னகைக்கிறாய்..
பின்னுமொரு கவிதை எழுதுகிறாய்

முத்தக்காரா
ஆண்வாசம் புறப்படும் நம் அறையில் ஆடைகள் நாணிக் கண்மூடும்..
எனைமூடும் மூச்சுக்கதகதப்பே...

உன்னிலிருந்து புறப்படா என் வேர்களை துண்டிக்க துணிந்த பின்னும்
வட்டமிடும் ஞாபகப்பறவையை துரத்தியடிக்காமல்
கைகளில் இருத்திக்கொள்வேன்
யாதொன்றும் தோன்றாத நீண்ட இரவுகளில்  பறவையை பேசவிட்டு இக்காட்சிகளை மீட்டிக்கொள்வேன்
முதுபெரு நரையிலும் நின் முத்தத்தை நினைக்கையில் கம்பீர காதல்வந்து காலூன்ற
தீராத தித்திப்பொன்று உள்ளூர இனித்துக்கிளம்பும்♥♥♥

அதிசயா

5 comments:

 1. அருமை. வலைத்தளத்தில் இன்னும் அதிகமாய் எழுதுங்கள். தொடர்ந்து எழுத வேண்டும். உங்கள் கவிதைகளை எல்லாம் புத்தகமாக வெளியிடலாமே?

  ReplyDelete
 2. நீண்டநாளுக்கு பிறகு ஓர் நெடுங்கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. கவிதை அருமை அந்திம காலத்தில் காதல் எல்லாம் சாத்தியம்மில்லை வருமானம் இல்லாத நிலையில் !ஹீ

  ReplyDelete
 4. அருமையான வரிகள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...