Wednesday, July 8, 2015

சுஜாதாவை அணுகல்-சரித்திரத்தின் சபதத்தோடு இரு காதல்



பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்!
சுஜாதாவை முதல் முதலில் அணுகியிருக்கிறேன் இனி மெல்ல அவர் வார்த்தைகளின் விரல் பிடித்து அழகாய் அறிந்து கொள்வேன்.
"சுஜாதா" இந்த பெயருக்கான நேசிப்பு வட்டம் மிக விசாலமானது.ஒவ்வொருவரும் தனக்குரியவராக கொண்டாடும் இந்த ஆளுமையை அனுபவிக்க வாய்த்தஅவரது முதல் நூல் "ரத்தம் ஒரே நிறம்"
இது விமர்சனம் அல்ல என் விளக்கம் மட்டுமே.


அவரது இரண்டு சரித்தில நாவல்களில் ஒன்று இது.ஆங்கிலேய ஆட்சியில் நிஜமாய் குருதி பீறிட்ட "சிப்பாய் கலகத்தை"அதாவது ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்த இந்திய சிப்பாய்களின் கலக வரலாற்றை ஆதாரமாக்கி கூடவே  வைராக்கியமே நிறமாகி நினைவாகி ஓடும் முத்துக்குமரன் எனும் இரும்புத் தமிழனை கதையிடை செலுத்தி ,வெள்ளெயன் மீது அவன் கொண்டதீரா வெறுப்பையும் முறுக்கேறி புடைத்த புயங்களையும் உந்துசக்தியாக்கி விறுவிறுப்பு வேகத்துடன் பின்னப்பட்டது தான் இந்த சரித்திர நாவல்.

பக்கங்களை பாய்ந்து பறந்து புரட்டா வண்ணம் எனை போல் சாமானியனையும் நிதானமாக ஓரு காதல் தைத்துப் போகிறது.தந்தையை கொன்ற வெள்ளெக்கார துரையை கொன்றே தீருவேன் என விதி செய்த சிலம்பக்காரன் முத்துவிற்கும் ,வித்தையோடு வசீகரமும் சரிவிகிதம் நிரம்பிய சொன்னால் இனிக்கும் பூஞ்சோலைக்குமாய் ஒரு காதல்.இந்தக் காதல் தான் அவனை தப்புவித்து பல தடவை ஆயுள; நீட்டியது.இறுகிய வரப்பின் மேல் ஈரம் குழைத்து ஓடும் சிறுவாணி போல்.

இன்னொரு காதல். அதை இப்படிச்சொல்வேன். இப்போதுதான் விரிந்த மல்லிகையும் அதன் இதழ் ஓரம் கசியும் பியானோ இசையும் போல.இது சீமாட்டி எமிலி மற்றும் கப்டன் ஆஷ்லி வரைந்த காதல்.மிக மிருதுவாய் ஆஷ்லி இழைத்த காதல்.இந்த மென்மைகக்குள் ஒட்டிக்கொண்ட தாமதத்தால்  கேசேராது தொலைவான துயரக்காதல்.


சுவாரஸ்யம் என்னவென்றால்எமிலி சிறைப்பட்ட தங்கச்சிறைக்கூடம் மக்கின்ஸி அதாவது முத்து கொல்லத்துடிக்கம் துரை.பலதடவை முத்துவை துரையிடமிருந்து காப்பாற்றியது எமிலியை மென்மையாய் ஸ்நேகித்த ஆஷ்லி.

சிப்பாய் கலவரத்தை அடக்க சென்னையிலிருந்து புறப்பட்ட ஆங்கிலேய மற்றும்  ஆங்கிலோ இந்தியப்படைகள். ஈற்றில் வரலாற்றின் சுவரோரம் முற்றுகையிடப்படுகையில் ஆங்கிலேய ரத்தம் ஆறானது என்றால் இந்தியக்குருதியும மற்றொரு புனலாகி விரிகிறது.முத்துவின் சபதம் வெல்கிறது.துரை கொல்லப்படுகிறான்.பூங்சோலையின் காதல் தனிமையின் பெரு விசும்பாய் கனக்கிறது முத்துவும் மற்றொரு பிணமாய் சபதத்தின் முடிவருகில் மாண்டுபோனான்.

வரலாற்றின் குரூரங்கள், வழி நெடுகிலும் கலகமாய் கண்ணீரமய் நீள்கிறது.யார் குருதி என்று அறியா அடத்தியான ரத்தம் இன்னும் எங்கள் கால்களில் பிசுபிசுக்கிறது.அது கண்டங்கள் தாண்டி நிலங்களை ஊடறுத்து தேசத்தின் சாலைகள் எங்கிலும் அதற்கென்ற  பிரத்தியேக கதைகளுடன்  வடிந்தபடிதான்இருக்கிறது.எதுவாயின் மறுப்பின்றி ரத்தம் ஒரே நிறம்.

சுஜாதாவை என்னுள் அனுபவித்த தருணம்  மீண்டும் இதமாய் இறுக்கமாய் தொடரும் அந்த  பியானோ மல்லிகை வாசம் தான்.எமிலி என்னும் அந்த வாசம் ஆஷ்லியை தவிப்போடு இறுக அணைக்கிறது.எங்கெங்கோ அலைந்து வந்த  நதியொன்னு நீக்கமற நிரந்தரமாய் சமுத்திரத்துள் அடங்குவது போலொரு அணைப்பு.இங்கு எமிலி மாற்றான் மனையாள் ஆன போதும் ஒரு வாசகிறாய் எனக்குள் முகம் சுழிக்கும் எண்ணமோ இந்த   கண்ணியக்காவலாளியிடம் தோன்றவில்லை.

நானும் அவர்களோடு சேர்ந்து அந்த அணைப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன்.
இந்த நாவலின் காட்சிப்புலத்தின் முற்பகுதியின் சாயலை இன்று உணர்ந்தேன் மதராசப்பட்டினம் திரைப்படைப்பில்.



நன்றிகளுடன்
-அதிசயா-

5 comments:

  1. நல்ல விமர்சனம்...

    தொடர்ந்து பகிருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொந்தமே

      Delete
  2. விமர்சனம் இல்லா விளக்கம் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சொந்தமே
      சந்திப்போம்

      Delete
  3. அருமை. வாசிப்பது ஒரு கலை என்றால் வாசித்த அனுபவத்தை எழுத்தில் வடிப்பது பிறிதொரு கலை. இரண்டையும் நேர்த்தியாய் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வலைத்தளத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம். சுஜாதாவின் பல படைப்புகளை வாசித்திருக்கிறேன். ரத்தம் ஒரே நிறம் - இன்னும் வாசிக்கவில்லை. வாசிப்பு அனுபவத்தை பகிரும்போது வாசகனுக்கு அந்த நூலை வாசிக்க தூண்டுதலை வழங்குவதாக அமைய வேண்டும். அந்தப் பண்பு இதில் துளியும் பிசகாமல் இருக்கிறது. நீண்டகாலம் எழுதாமல் இருந்தாலும் உங்கள் எழுத்துக்களில் துருப்பிடித்து விடவில்லை. வாழ்த்துக்கள் சொந்தமே. த.ம. 1

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...