Friday, August 1, 2014

கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும்



வணக்கம் சொந்தங்களே.!

பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது.

திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான்  இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல் தலைமுறை.ஆரத்தழுவி அந்தநாள் கதைபேசி முற்றத்து பிலாமரத்தில் பழம் புடுங்கி இன்னும் நாச்சார வீட்டில் அந்த நிலவுகளை தரிசித்துக்கொண்டிருக்கிறது.இது நம்மவர் கதை.

எனில் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்த இரண்டாம் தலைமுறை அதாவது இன்றையையும் முந்தையதைக்கும் இடைப்பட்டதான பொது தலைமுறை எப்படி???.குளிர்தேசத்தில; அடைகாத்த குஞ்சுகளை கொண்டு தாய்பறவையிடம் வரும் பிள்ளை பறவை போன்ற  மனநிலை.ஆனால் .இருதலை கொள்ளி எறும்பு நிலை.முற்றிலும் நாகரிகமெனப்படும் அவசரங்களோடும் அதீத அறிவோடும் இருக்கும்தொழில்நுட்பக்குழந்தைகளுக்கும் அரைத்து வைத்த காரக்குழம்போடு ம் அதிகாலை குளியலிடும் நம் பாட்டிகளுக்கும் இடையில் இங்கு வந்தபின் சமரசம் உண்டாக்குவதில் சோர்ந்து போகின்றனர்.பல தடவைகளில் தோற்றும்போகின்றனர்.
பனிதேசத்து பிள்ளைகளுக்கு இந்த மிதமிஞ்சிய வெயில் ,இறுகஅணைக்கும் மனித சூடுகள்,மீண்டும் மீண்டும் கேட்கும் விசாரிப்புக்கள்,”குஞ்சு,ராசா,பிள்ள,ராசாத்தி”போன்றகொஞ்சல்கள்,சுக்குக்கோப்பி எல்லாம் பல சமயங்களில் எரிச்சல் மூட்டிவிடுகிறது இந்த வரண்ட பூமியின் வெயிலை போலவே.

தாயகத்தின் நடைமுறைச்சந்நதியின் பிள்ளைகள் எது நிஐம் என்று புரியாத குழப்பத்தில்.ஈழத்தின் வளர்ப்பு முறை இங்கு வாய்த்த வசதிகள்,இங்கு பயன்பாட்டிலுள்ள நியாயங்கள் தரம்கெட்டதா என தலையைப்பிய்த்து பார்க்கிறார்கள்.வயதொத்த இரு தேசத்தின் பிள்ளைகளுக்கிடையான உரையாடல்கள் நாளாக நாளாக நெருக்கத்தை இளக்கிறது.ஏதோவொரு தாழ்வுச்சிக்கலையும் குற்ற உணர்வையும் நாசூக்காக விதைக்கிறது.நம்மவர் மனதில் தாயகக்கனவுகள் அமிழ்ந்து போக பனித்தேசம் பற்றியதான அதீத மோகம் மேலெழுகிறது.இங்கு பிறந்தது விதியின் சாபமென எண்ணிக்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தை  விடவும’ அந்தரத்தில் இருந்து கொண்டு ஏதோ ஒரு மையம் பற்றி ஊசலாடுவது தாயகத்தின் நடுத்தட்டு இளையோரே.இவர்கள் தான் இருவகைப்பட்ட கண்ணியத்தின் இடைவெளிகளில் மாட்டிக்கொண்டு முளிக்கும் துர்ப்பாக்கியர்கள்.
மிச்சமிருக்கின்ற தாயகத்தின் சுவடுகளையேனும் காப்பாற்றி அதில் கரையேற வேண்டுமென்ற தீராவேசம் ஒருபுறம்.நாமென்ன நாகரிகத்திலும் அறிவிலும் சளைத்தவர்களா என்ற கோபம் மறுபுறம் இவர்களிடம்.எனில் என்ன செய்கிறார்கள்.??

உடனடிச் சமாதானங்களுக்கு வர இவர்களால் முடிவதில்லை.காத்திரமான பின்னணிகொண்ட குடும்பத்தின் இளையவாரிசுகளென கொஞ்சப்படும் குளிர்தேசத்து பிள்ளைகளின் ஆடைஅலங்காரங்கள் ..உணவுமுறை….இலகுவில் வரமறுக்கும் தாய்மொழி,பல்தேசியக்கம்பனி வாசல்களிலும் நாகரிக சந்தைத்தொகுதிகளிலும் என பிரத்தியேகமா அவர்கள் பேசிக்கொள்ளும் தமிழ் அல்லாத மாற்று மொழிகள் இவையெல்லாம் தாயகத்தின் இளையோரிடம் ஏதொவொரு வெறுப்புணர்வை கிளறிப்போவது தாயகத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் நான் கண்ட உண்மை.

ஆக கோடைவிடுமுறை காலத்திலும் சரி எப்போதேனும் சரி தாயகம் வரும் நம் சொந்தங்களுக்கு இனிப்புக்களை மட்டுமே எப்போதும் பரிசளிக்க விரும்புகிறோம்.எத்தேசம் வாழ்ந்தாலும் பூர்வீகம்  நம் ஈழம் தானே.நட்சத்திரங்களும் வான்பரப்பும் வேறுபட்டாலும் கூரையும் நிலவும் ஒன்று தானே.

இத்தேசம் இப்போது காடும் கரம்பையுமாய் இருந்தாலும் நேசங்களை அணைக்கும் போதெல்லாம்  நெஞ்சுருகி மாரி பொழிகிறது.தூரதேசத்தின் சொந்தங்களே இவ்விடமிருந்து உம் மகவுக்கு ஒப்பாகி நானும் ஓர் கோரிக்கை வைக்கிறேன்.நீ
ங்கள் உழுத புழுதிக்காடுகளில் தான் எங்களை இளமையை இன்னும் விதைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்கள் பொழுதுபோக்கு விடுமுறை எல்லாமே இப்போது வரைக்கும் இந்த வெயில் தேசத்தின் எல்லைக்குள் தான்.இந்தக்கைகளுக்கு தட்டச்சு செய்யவும் தெரியும் தழும்புகள் தாங்கவும் அறியும்.பொருளாதாரம் நெருக்க நைந்து நைந்து நாகரீக ஒட்டத்தில்  சரிநிகராய் ஓட முனைகிறோம் கண்ணியங்களோடு.இந்த வஞ்சனை அரசியலிலும் நீங்கள் வாழ முடியாது என்று உதறி ஓடிய தீவினுள் கௌரவமான வாழ்வொன்றிற்று உரிமை கோரவே சாகமல் போராடுகிறோம்,இன்னும் விருந்தாளிகளாய் மட்டுமே நீங்கள் வரத்துணியும் இக்காடுகளில் நேர்ந்துவிட்டதை போல் வாழ்கிறோம்கஞ்சியிட்டதை போன்ற டொலர் மடிப்புகளை விட நைந்து கசங்கிய ருபாக்கள் சிலதருயங்களில் எம்மை கௌரவமாய் நடத்துகின’’றன.இப்படியாய் தான் ஈழத்தின் இளையோரின் தன்னிலை விளக்கமிருக்கும்.

ஆக ஒருதாயின் இருமகவுகளுக்கிடையான ஈடேற்றத்தையும் புரிதலையும் பற்றியே இத்தருணத்தில் பேசுகிறேன்.இருபதுகளிலன் ஆரம்பத்தில் வாழும் ஒரு சராசரி அவதானியாய் கேட்டுக்கொள்வது யாதெனில் புலம்பெயர் தேசத்தின் பெற்றோரேஇங்கு வருவதாயினும் இல்லையெனினும் ஈழம் பற்றிய கண்ணியங்கள் இங்கிருக்கும் நடைமுறை நிஜங்கள்,நடந்தேறிய கொடுரக்கதைகள்.இதன் காலநிலை பாரம்பரியம் அனைத்தையும் செல்ல நாய்க்கு பிஸ்கட் வாங்கும் கடை ஓரங்களில் வைத்தேனும் சொல்லுங்கள்.அழகிய கற்பிதங்களை பெற்றுக்கொள்ளவும் உருகும் பாசங்களில் ஓட்டிக்கொள்ளவுமே வெள்ளை மனங்கள் விரும்பும்.எம் மொழிபெயர்ப்புகள் உம் தேசம் வருவது தாமதமாகும்.அதற்காயேனும் நீங்கள் சொல்லுங்கள்.

இன்னும் திண்ணை உடைக்காத வீடுகளிலும்,முற்றத்த மர நிழலிலும் பேராண்டிக்காய் பலகாரம் சுடும் அப்பத்தாக்களும் மச்சானின் வருகைக்காய் மருதாணி போட்டுக்கொண்ட முறைப்பெண்களும் மஞ்சள்பூவரசின் மங்கலங்களும் நாடித்துடிப்போடு இங்கே சீவித்துக்கொண்டேயிருக்கின்றன.


ப்ரியங்களுடன்
அ-தி-ச-யா



10 comments:

  1. மிகவும் உண்மையானதும் அழத்தி கூறவேண்டியதுமான விடயம்.
    அண்மையில் நான் ஒரு சுவிஸ் நாட்டு ஜெர்மன் பிரயையை சந்தித்தேன் அவரால் தமிழை பிழையின்றி எழுத வாசிக்க கதைக்க முடிகிறது இது அவரின் திருமணத்தின் பின் கணவருடனான உரையாடல் மூழம் வெறும் 8 வருடத்தில் ஆனால் யாழ்ப்பாணத்தில் 12 வயது வரை இருந்து சுவிஸ் சென்ற ஒருவரால் தனக்கும் தன் பிள்ளைக்கும் தமிழ் எழத வாசிக்க முடியாது என்கின்றனர்

    மிகவும் வருந்த தக்க விடயம்

    வாழ்த்துக்கள் தொடர

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்பு சொந்தமே
      சந்திப்போம்

      Delete
  2. மறுபடியும் அதிசயா கலக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஹாரி

      Delete
  3. ரொம்ப நாளுக்கு பிறகு பார்கிறேன் அத்சயாவை ...நலமா ..

    அழகான பதிவு ..தாய் மொழி என்பது அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று .
    என் மகளுக்கு எழுத தெரியாது ஆனால் அருமையாக பேசுவாள் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் என் அன்பு சொந்தமே
      மிக்க நலமாயுள்ளேன்்
      நன்றியும்ப்ரியங்களும்

      Delete
  4. அன்புள்ள சகோதரி அதிசயா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்பு சொந்தமே
      மிக்க நன்றியும் என் நேசங்களும்
      சந்திப்போம் சொந்தமே

      Delete
  5. வணக்கம் பாரதி
    வருகிறேன்

    ReplyDelete
  6. வணக்கம்
    மிக்க நன்றியும் நேசமும்
    தெரியப்படுத்தி வாழ்த்தியமைக்கு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...