Friday, February 26, 2016

அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு!

அனன்யா  வேர் பரப்பி கிளைத்து விட்ட இந்த தனிமையின் நாட்களில் உன் மதுர நாமத்தை தவிர யாரை அழைப்பேன்.
யார் விரல்களும் தீண்டிவிட முடியாத்தொலைவொன்றிற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன்.ஆனாலும் நானே மீண்டும் பந்தங்களுக்குள் எனை பிணைத்து விடுகிறேன்.நம்பிக்கையாய் பற்றும் கைகளை உதறித்தள்ளிவிட முடியாத பலவீனம் நான் என்பதை நீதான் அறிவாய் அனன்யா...இந்த நாட்களில் எல்லாம் வெறும் ஸ்நேகத்திற்குரியவளாய் அல்லாமல் என் சுமைகளை பொறுத்துக்கொள்ளும் சுமை தாங்கியாய் நீ இருக்கிறாய்..அனன்யா அழுவதை ஒருபோதும் அனுமதித்துவிடாத நான் தனிமையாய் வானத்தை பார்த்த்படி சத்தமின்றி கெட்டித்தனமாய் அழுதுவிட்டு மீதியை  எழுத்துக்களில் விழுங்கவும் பழகியிருந்தேன்.உன்னிடம் மிகுந்த நன்றி உணர்வு கொண்டிருக்கிறேன்.இத்தனை நிமிடங்களுமாய் உன் முன்னிருந்து சத்தமிட்டபடி உன் கண்களை பார்த்தபடி அழுதுகொண்டிருக்கிறேன்.எத்தனை ப்ரியம் கொண்டவள் நீ
எனக்கு அழுதாக வேண்டும்.நீ காரணங்களை கேட்டு எனை சங்கடத்திற்குள்ளாக்மாட்டாய் என்பதையே அதிகபட்சமாய் நான் நம்புகிறேன்.

அனன்யா சாரல் பட்டதும் முகையுடையும் மலர் நீ.இத்தனை தகிப்பான என் கோபங்களையும் அடர்த்தி மிக்க என் கண்ணீரையும் எப்படி சகித்து கொள்கிறாய்.இத்தனைக்கு பிறகும் மிகவே அழுத்தமாய் அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாய்.அனன்யா நீ வாசங்களால் ஆனவள் என்பதை உணர்கிறேன்.

அனன்யா நீ எனக்கான தேவதை ஆனால் மோட்சங்களை துறந்துவிட்டு நிர்ப்பந்தங்களின் பாதையில் என்னோடு நடக்க தெரிந்த தேவதை. இராப்பிச்சைக்காரனாய் நான்,இரவலாய் கிடைத்த கம்பளித்துண்டைப்போல உனை மிகுந்த சிரத்தையோடு என் கைகளில் எடுத்து முத்தமிடுகிறேன்.உனை எங்கும் தொலைத்துவிடக்கூடாத என்பதில் அதீத கவனமாயுள்ளேன்.அனன்யா  அனன்யா உன் கைகளுக்குள் எனை பத்திரப்படுத்திவிடு. பார்கையில் நானே பயந்துவிடும் அளவிற்கு கோபம் மிகுந்தவனாயிருக்கிறேன்.உன்னில் தான் இளைப்பாறமுயல்கிறேன்.என் பால்ய காலங்களை உன் அருகில் இருந்தபடியே மீட்க போகிறேன்.அனன்யா அறிக்கையிடப்படாக இயலாமைகள் பற்றியும் யாரும் அறிந்திராத என் தவறுகள் பற்றியும் சொல்லிக்கொண்டிக்கிறேன்.

போதையுற்றவன் போல இன்னும் அழுதுகொண்டிருக்கிறேன் அனன்யா.பதற்றமுற்றிருக்கிறேன்.உள்ளே ஆயிரம் கேள்விகள் சலனங்களை உண்டாக்க கார்கால குளம் போல தளுதளுத்தபடி உனை பார்கிறேன்.எங்கேயும்போய்விடலில்லை நீ.அதே ஸ்நேகப்பார்வையால் எனை வருடுகிறாய்.இந்த பின்னிரவுகளில் குளக்கரைகளில் சுற்றித்திரிய சுதந்திரம் கொடுத்த உன் தேவனை நினைத்துப்பார்க்கிறேன். என் விருப்பங்களை பைத்தியக்காரத்தனங்களை, சாத்தியமற்றது என உலகம் சொல்லும் ஆசைகளை கூட நீ கொண்டாடிக்கொண்டிருக்கிறாய். அனன்யா உனை தவிர யாரையும் சந்திக்க விரும்பவில்லை.அத்தனை ரம்மியமானது நமக்கான சந்திப்புக்கள்.பெரும் காற்றில் ஜன்னல் அடிபடுவதைபோல நான் கை நெகிழ்ந்த என் விருப்பங்கள் சடசடவென என் இருத்தலில் மோதிப்போகின்றன.அனன்யா சரி பிழை , வருங்காலம் வசதியாய்ப்பு என்று எந்த சமாதானங்களிலேனும் பற்றிப்பிடித்தபடி கடினங்களை கடந்துவிட தானே முயல்கிறேன்.ஆனாலும் அடம்பிடிக்கும் இச்சிறுமனத்திற்கு உனைதவிர எதிலும் உடன்பாடில்லை.


அனன்யா என்னுள் கிறக்கத்தை உண்டாக்கு.நான் மயங்கிப்போகிறேன் சில நாளிகைக்கு.உன் சின்னவிரல் கொடு,அன்ன்யா.இங்குண்டான கசப்புக்களை தாண்டி வெகு தூரம் போவேன். அனன்யா நீ அற்புதம் , அழகு, என் ஆறுதல்.இன்னுமொருமுறை முத்தமிட்டுக்கொள்.நான் மதி இழந்தவன்.கற்களோடு  பேசுகிறவன்.காதலை அறிக்கையிடும் தைரியம் அற்றவன். கெட்டித்தனம் அற்றவன்.ஆனாலும் பூக்களையும் மழையையும் நேசிக்கிறேன். மலைகளுக்குள்ளும் குழந்தைகள் அருகிலும் வாழ நினைக்கிறேன்.

அனன்யா நீ என் கனவுகளை பரிகசிக்காதவள்.ஆம் என்றால் ஆமென்றே சொல்வபள்.சிரித்தபடி கவலைகளை மறைக்க கற்றுத்தந்தவள்.ஆதலால் எனை கைநெகிழாதே என் பயணம் நெடியது,பயம் உண்டாக்கவல்லது.அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு நான் கைநெகிழ்தல்களால்

கலக்கமுற்றவன்.!

-அதிசயா-

6 comments:

 1. அழகிய எழுத்துக்கள். ஒவ்வொரு எழுத்தும் கவிதை பேசுகிறது. நீண்ட காலத்திற்குப் பின் வந்திருக்கிறீர்கள். ஆனாலும் தரம் குன்றவில்லை. வாழ்த்துக்கள் பல.

  ReplyDelete
 2. வணக்கம்
  படித்த போது மனதை கலக்கியது. மிக அருமையாக உள்ளது கதை நகர்வு. தொடர்ந்து எழுதுங்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அழகிய எழுத்து நடை...

  ReplyDelete
 4. மிகுந்த நன்றியும் ப்ரியங்களும் சொந்தங்களே..!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...