இருளோடு கலை செய்தான் ஒருவன்-அவனால்,
கருவோடு உயிர் சேர்த்தாள் ஒருத்தி,
பிரபஞ்ச வெளிகளில் என்னையும் விதைத்தான் இறைவன்,.
எனக்கு கலவை தந்த பெற்றோரே காதலிக்கிறேன்..
இது வரையும் மாய் செய்கிறாய்-இறைவா உன்னால்
காதலிக்கப்படுகிறேன்..!
பூமிக்காய் கோடு இட்டது வானம்,
இரவுகளில் வெள்ளை நட்டது நில,
நான் அழைத்ததும் வருவதில்லை இரண்டும்!
மழை ஊற்றே,நிலாக் கீற்றே காதலிக்கிறேன்..
காத்திருந்தால் கை நனைக்கிறாய்-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!
வெள்ளை என்றதும் ஓடி வரும் பள்ளிச் சீருடை,
பேனாவால் உயிர் பெறும் தொலைந்த நண்பி,
பழதாகிப்போனாலும் பரிவைத்தொலைத்ததில்லை இரண்டும்!
ஓடி வருகிறாய்,ஓவென அழ வைக்கிறாய் காதலிக்கிறேன்..
ஓவ்வொன்றாய் நினைக்கையில் சிலிர்க்க வைக்கிறாய் -உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!
வெறுமைக்குள் புதிர் பூசும் நெடுஞ்சாலை,
இடைக்கிடை முளைத்து நிற்கும் சாலைக்குறியீடுகள்,
எத்தனை தரம் பார்த்தாலும் விழிகளில் வினாக்குறி வளைகிறது!
இரவு வழிப்பயணங்களே,ஜன்னல் பெற்ற பிள்ளைகளே காதலிக்கிறேன்..
வெளிகளில் தனிக்க விட்டதில்லை-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!
மிதக்க வைக்கின்ற வெள்ளைக் கோலங்கள் முகில்கள்,
'முடித்து விடாதே'கெஞ்சும் இரவுக்கோர்வைகள் கனவுகள்,
நேரங்கள் தொலைவதைக்கூட ரசிக்க முடிவது இங்கே தான்!
வான்துப்பிய மேகங்களே,வாழச்சொல்லும் கனவுகளே காதலிக்கிறேன்..
எப்போதும் எனை ஈர்க்கும் ஏகாந்தமே காதலிக்கப்படுகிறேன்..!
வாலிபம் காட்டும் சதைக்காதலல்ல இது!
மாலையிடும் மலர் காதலுமல்ல இது!
நொடிநொடியாய்,துளித்துளியாய்
வாழ்வு பின்னும் நெசவுக்காதல் இது!
கொஞ்சம் கொஞ்சமாய் நினைவெடுத்து
அழகாய் நிறம் கலந்து
அழுத்தமாய் அறிவுரைக்கும் உண்மைக்காதல்
சைவமாய்,அசைவமாய்
உன்னையும் அணைக்கும் காதல்...!