Wednesday, August 22, 2012

ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!!

கார்காலம் கதவருகில்.
துளித்துளியாய்,
சிலிர்த்துக்கொண்டிருந்தது..,
நினைவு மழை!

குளிரோடிப்போய்
இதமாய் சாய்ந்திருந்தேன்
ஒரு கடலோரத்தில்.!
சூடாய் ஒரு கோப்பை தேநீர்.
அதில் மெதுவாய் மிதந்துகொண்டிருக்கிறது
நம்மிருவருக்குமான பரவசங்கள்...! 


இயல்பாய் உன்னுள் நிறைந்து கொள்கிறேன்.
இடைவெளிகள் ஏதும் இருக்காதவாறு..,
நீ ரட்சகனாகிறாய்..
என் பவீனங்கனை விழுங்கிவிட்டு 
பலங்களை நிரப்பி 
எனக்கு ரட்சகனாகிறாய்.

சுருள்வதும் வளைவதுமாய் 
நகர்ந்துகொள்ளும் புகைபோல்
நானும்
கனதியற்று மிதந்துகொண்டிருக்கிறேன் 
உன் நினைவுப்பெரு வெளியில்.
நீ
விழுது ஒன்றில் வழுக்கிச்செல்கிறாய்
என் நிமிடங்கள் இலாவகமாய்
ஒழுகிக் கொள்கிறது உன்னோடு..!

பின்னிரவில்
வேகமாய் கடந்து செல்லும் ஈரக்காற்றொன்றில்
என் கேசம் கலைக்கிறாய்.
உடனே ஓடி வந்து
நெற்றியில் ஈரமுத்தமொன்று  பதித்துச்செல்கிறாய்.
வசதியாய் விலகிக்கொள்கிறது
நெற்றிக்கேசங்கள் ஒவ்வொன்றும்.!
இப்படித்தான்
ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!


ஈர்ப்புவிசை காற்றழுத்தம்
 இரண்டையுமே துடைத்தெறிகிறாய்.
உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.
நீயும் விஞ்ஞானிதான்."நான்" ஆகிய
பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!

வரும்வழியெல்லாம்
இதோ இப்போது அவதரித்த குட்டித்தேவதைகள்.
அத்தனையுமே பூச்செண்டுகளுடன் நீயனுப்பியதாய்...!
தேவதைகளிடம் ஏது பால் வேற்றுமை??
ஆதலால் நீ-தேவதை
என் ஆண் தேவதை!

 
 மறுபடியும் நீ கனவுக்கரையில்
திரண்டுகொள்கிறாய்.
என் வாசலை நோக்கித்தான் வருகிறாய்.
நான் தயாராகிறேன்.
மற்றொரு கோப்பை தேநீருடன்...!

இப்படியாய் தொடரட்டும்
என் தேநீர்பொழுதுகள்.

ஒருமுறை வரம் தா
உன் கோப்பைகளில்
நான் மழையாகிட!!!



நேசங்களுடன்
-அதிசயா-


Friday, August 17, 2012

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்!

மனதிற்கு இனிய பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் மிகுந்த வணக்கங்கள்!நலமாக உள்ளீர்களா???நலம்வாழ வாழ்த்துகிறேன்.


  இருளுக்குள் விரியும் ஓவியங்கள் எப்படியிருக்கும்????வாருங்கள் சொந்தங்களே இதைப்பற்றியும் பேசுவோம்.


"மாதவி மகளொருத்தி கண்ணகியானால்

கண்ணகி மகளொருத்தியும் மாதவியாய்........."


விவகாரமான விடயம் என விலகிப்போகாதீர்.இயல்பாய் பேசுவோம்.என்னை எழுதத்தூண்டிய வைரவரிகள் இவை.

 ராகங்கள் பலவிதம் சொந்தங்களே!இனிமையாய்,இயல்பாய்,அழுகையாய்,அழகாய்,கிளுகிளுப்பாய்,தெய்வீகமாய் இப்படியாய் பல இராகங்கள்.இப்போதைக்கு பேசுவோம்  இராத்திரி இராகங்கள் பற்றி!இது கலையின் வழுவா???கலைஞன் வழுவா??யாரறிவார்.யாமறிவோமா?


    புனைவுகள் விலக்கி இதுபற்றிச் சொன்னால் விலைமாதர் விதி பற்றி பேசப்போகிறேன்.
ஒருகாலம் அடிமைப்பட்டுக்கிடந்த  பெண்ணியம் இன்று வீறு கொண்டாலும் தீண்டத்தகாதவர்கள் என விலக்கப்பட்ட "தலித்துகள்" போல "பேசப்படாத,பேசப்படக்கூடா"த"  தலைப்புகள் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன்.

    என்றோ ஒருநாள் இந்தச்சிந்தனைக்கோடு எனை கடந்து போன போது நானும் அடைமொழிகளுக்கு பயந்து அமைதிகாத்தவள் தான்.இன்று பேசும்படி உள்ளுணர்வு சொல்கிறது.அதிசயாவின் எழுத்துக்களில் இவை பேசப்படுவதையிட்டு நான் கூசவில்லை.என்குரல் இன்று தைரியம் கொண்டதையிட்டு எனக்கு திருப்தியே!

    
  நாகரீகங்கள் எல்லாம் இலக்கியங்களோடு தவழ்ந்து வந்ததென்றால்,இந்த நாகரீகமும் இலக்கிய காலங்களிலே விதைக்கப்பட்டதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.சங்ககாலப்பெருவழக்கில் ஆரம்பித்த "ஆடல் மகளிரின்" இன்பங்கள் துய்க்கப்பட்டு, தொடரப்பட்டு, "தாசிகளாகி" "வேசிப்பெண்டிர்" என பெயர் பெற்று இன்று "விலைமகளாய்"  திரிபுற்று தொழிலாகித் தொடர்கிறது.
 இன்று இது ஒரு தொழில்.பல இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.

  சங்ககாலத்தின் ஆரம்பங்களில் நின்று சங்கடங்கள் மிக்க இக்காலம் வரையான நாட்களை காலப்பெருவெளியாகக்கணக்கிட்டால் இந்த விலைமக்களின் பாதங்கள் பதியாத வரலாறு இல்லை.அத்தனை சுவடுகளிலும் கனமான கண்ணீர் கால்களில் ஒட்டிக்கொள்கிறது.இது பற்றி பேச நமக்கும் கடமையுண்டு.நாமும் வரலாற்றின் மனிதர்கள் தான்.இந்த ஈரங்கள் நம் கால்களிலும் ஒட்டியபடி பிசுபிசுக்கிறது.

   வறுமையின் உச்சம்,வலிமையின் எச்சம்  இவை தான் இந்த இராத்திரி ராகங்களில் சுருதி என்பேன்..வறுமையின் உச்சம் இவர்களை விலைமாதர் ஆக்குகிறது என்றால் பணம் என்ற வலிமையின் உச்சம் இவர்களை வாழவைக்கிறது.கடைசிவரை அதே பெயருடன் வாழவைக்கிறது.

  புரிகிறது சொந்தங்களே!பிழைப்பிற்கு வேறு வழியில்லையா என என்னிடமாய் முரண்படுவது.குறுகிய காலத்தில் குறைகள் தீர்க்க இவர்களுக்கு இலகுவாய் இவ்வழி தான் தெரிகிறது.ஒருமுறை இந்த வாசல்களுக்குள் நுழைந்துவிட்டால் பாதங்கள் விலத்தினாலும் அந்த வாசல்கள் விடுவதில்லை.கறைபட்ட சட்டை ஒன்றை இலகுவாய் சலவைக்கு இட்டுவிட மனம் ஒப்பினாலும் கறைபட்ட மாது ஒருத்தியை கறைநீக்கிப்பார்க்க எத்தனை மனம் ஒப்புகிறது???குளித்துவிட்டாலும் அழுக்காகவே அருவருக்கப்படுவதை விட அதே அழுக்குடன் இருப்பதை  மேல் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இருளோடு நிறையும் அந்த முத்தங்களில் ஈரம் இருப்பதில்லை.
படுக்கையின் விரிப்புகளில் நேசங்கள் முளைப்பதில்லை
தளுவல்களில் ஆழங்கள் தெரிவதில்லை.
ஒற்றைப்புன்னகை கூட அன்பாய்
அவள் பால் தெறிப்பதில்லை.

   இருந்தும் இந்த வாழ்க்கைக்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.சதை மட்டும் பெண்ணாகிப்பிறந்தது இங்குதான்.இதன் பின் எத்தைனையோ சத்தங்கள் ஏதேதோ பாரங்கள்.அத்தனையையும் அள்ளியெடுத்து முடிந்து கொள்கிறார்கள்  மல்லிகை மலர்களின் காம்புகளோடு.இருண்டாலும் விடிந்தாலும் இவர்கள் ராத்திரி இராகங்களாகவே இசைக்கப்படுகிறார்கள்.

    எத்தனை பெண்ணிய கோசங்கள் எழுந்தாலும் இந்த ஐன்னல்கள் இறுக்கமாக அடைக்கப்பட்டுக்கிடக்கின்றன அடுத்த பந்தி ஒன்றிற்கான ஆயத்தமாய்.
விட்டுவிடு வேண்டாமென மனது கூப்பாட போட்டாலும் வயிற்றின் விரல்கள் வலுவாய் விறாண்டும் போது மனமாவது மானமாவது

   எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை தெருக்களிலிருந்து வந்தபோதும் இவர்கள் மனதில் கிளம்பும் வினாவெல்லாம் ஒன்றே.மீண்டும் எப்போது சந்திப்போம் என்பதே.இது கூட பாசத்திற்காக அல்ல பரிதாபம் பணத்திற்காய்.இங்கு போனபின்னும் வீடு நினைத்து அழுபவர்கள்(ஆண்கள்) சிலர் என்றால் வீட்டிற்காகவே  தினமும் அழுபவர்கள் இந்த விலைமாதர்கள்.பரிதாப்பட்ட பின்னம் அவள் படுக்கையை பகிர்வதை விட மற்றொரு பாதை ஒன்றிற்கான ஆரம்பங்களை கொடுப்பதே சரியானது.

   மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது என்றால் இவர்களையும் ஏற்கத்தான் வேண்டும்.அது மெழுகு உருகி  எழும் தியாகம் என்றால் இது அழகு உரித்து எழும் தியாகம்.எத்தனை பந்திகள் எத்தனை பந்தல்கள்.அத்தனையிலும் அவள் பூத்தல்லவா இருக்கிறாள்.

    வேண்டாதவர்கள் என்று அருவருக்காதீர்கள்.இங்கும் ஒரு பெண்மை இருந்தது.இப்போதும் இறந்து கொண்டே இருக்கிறது.வாருங்கள் சொந்தங்களே!பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும்.


   முதலில் பேசத்துணிவோம்.இவர்களின் தொழில் முறை சரி என்ற வாதிடவோ அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கவோ விளையவில்லை சொந்தங்களே.இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.

    எதற்கும் ஒரு தீர்வுஉண்டென்றால் இதற்கும் தீர்வு எங்கோ இருக்கத்தான் வேண்டும்.இது ஆபாசம் அல்ல.அசிங்கம் அல்ல.
பதிவுலகம் என்பது பரந்தது.மாற்றத்திற்கான விதை ஒன்று இங்கு  போடப்பட்டால்ஒருநாள் அது நிச்சயம் விருட்சமாகும் எனற நம்பிக்கையில் தான் இத்தனையும் பேசுகிறேன் சொந்தங்களே!
                                                                                                                             நேசங்களுடன்
                                                                                                                                      -அதிசயா-

( பதிவுலக சொந்தம் சிகரம் பாரதிக்கு அன்பான நன்றிகள்.நிச்சயம் மற்றொரு தரம் பேசுகிறேன்.)
   




Friday, August 10, 2012

நாளையும் வருவேன்...!மறுபடியும் வார்ப்பேன்.!

பவ்வியமாய்,பத்திரமாய் வார்த்துக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளை,
சில சமயம் நெருப்புக்களையும்!
மெதுவாய் மெதுமெதுவாய் நிரவிக்கொள்கிறது ஒரு
வெற்றுப்பாத்திரம்.

வியர்த்து இருக்கும் இடைவெளிகளில்
ஒரு மூலையிருந்து மறுமூலைக்குள் 
ஓடிக்கொள்கின்றன  
ஞாபகத்தின் குமிழிப்பிள்ளைகள்!
இம்முறை கண்டிப்பு ஏதுமில்லை.
எங்கு ஒளிந்தாலும் மறுபடியும் என்னிடமாய் தானே திரும்ப வேண்டும்.
கொப்பறைகள் இங்கு என்றால் குமிழிக்கேது பஞ்சம்???
இந்த வீறாப்பில் தான் விட்டுக்கொடுக்கிறேன்!!!!.

மோதுதல் நேராமல் நிமிர்ந்து தான் இருக்கிறேன்.
ஒருக்களிக்கும் இடைவெளிகளில்
 பவ்வியம் தவறக்கூடாது என்பதற்காய்.!


வார்த்துக்கொண்டே இருக்கிறேன்.,
நெஞ்சுக்குழி நிறைந்தே இருக்கிறது...!
இப்படித்தான் தனிமைகளில் ஆரவாரங்கள்
 முளைத்துக்கொள்கின்றன.

அத்தனையும் கண்ணாடிப்பூக்கள் தான்.
 அன்றொருநாள்  இனிப்புக்கள் பூசியதாய் ஞாபகம்.
அப்போது எனக்கு வார்க்கத்தெரியாதாம்..!
காலம் தான் வார்த்ததாய் யாரோ சொன்னார்கள்.
கசப்புகள் தான் மலிவு என்பதால்
அடியில் மட்டும் தான் இனிப்பு பூசியதாம்.

வார்ப்பதை நிறுத்திவிட்டு தேடுகிறேன்.!
நாக்கு ஏதோ சப்புக்கொட்டுகிறது...
அதனால் 
வார்ப்பதையும் நிறுத்திவிட்டு தேடுகிறேன்.!

அடர்த்தியாக கசப்புக்களை தாண்டியும்
ஆழங்களில் தேடுகிறேன் அந்த இனிப்புகளை..!
இன்னுமின்னும் போக வேண்டும்.

இதுவரை பலமுறை வந்தாயிற்று..
கசப்புகள் தொண்டைவரை நிறைந்தாயிற்று,!

ஓடித்திரிந்த பிள்ளை ஒன்று மறுபடியும் ஓரங்களில் எனை
விழுத்தி விடுகிறது.. !
குறும்பு செய்கிறதாய் சிரிக்கிறது!

இப்போதும் நிமிர்ந்து தான் இருக்கிறேன்.
நாளையும் வருவேன்.
மறுபடி வார்ப்பேன்.
நிச்சயம் வெல்வேன்,
அப்போது  இருசொட்டு இனிப்புகள்
என் குறும்புப்பிள்ளைக்காய்.
தேடவைத்து திருகி விடுவது அது தானே........!


                                                                                                                   -அதிசயா-

Sunday, August 5, 2012

எனக்கொரு பதில்!!!!!

நேசங்களால் எனை நிறைத்த பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்.நலம் தானே???

         இயல்பிற்கும் இருப்பிற்கும் இடையேயான வாழ்தலின் நாட்களில் என்னுள் அடிக்கடி முளைத்த கேள்விக்குறி இது.இடையிடையில் இது ஆச்சரியக்குறியாக,காற்புள்ளியாக கூர்ப்படைந்தாலும் மறுபடியும் ஆற்றாமல் மிகவேகமான ஆரம்பநிலை அடைந்துவிடுகிறது.வாருங்கள் சொந்தங்களே இது பற்றியும் பேசுவோம்.!

      மானுடம் பிரசவித்த அத்தனை படைப்புகளும் பிறப்பின் ஈரங்கள் தாண்டி,நேசங்களால் நிறைந்து,தவழுதல் தாண்டுதல் முடித்து ஒருவாறு பூமியில் ஓங்கி உதைத்து நிமிர்ந்துவிட்ட இருபதுகளின் பிற்பகுதியில் எம்முன் இரண்டு சாலைகள் விரிந்து கொள்கின்றன.சில தருணங்களில் கொல்கின்றன.

1-இனியதான இல்லறம்.
2-தூயதான துறவறம்.

  இந்த இரண்டில் ஒருசாலையில் பயணிப்பதுதான் உலகப் பெருவழக்கு.இதற்குள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்ட மரபொன்றின் எச்சம் தான் நானும்.ஆனால் இந்தப் பெருவழக்கிற்குள் என்னை இணைத்துக் கொள்ளத்தான் மனம் ஒப்பவில்லை.

        பதின்ம வயதுகளின் முடிவுக் கோடுகளில் விதையாய் விழுந்த ஏகாந்த சிந்தனையின் ஒரு குரல் இப்பாதை இரண்டிலிருந்தும் விலகிப் போய் பந்தங்களால் தனித்து,நினைவுகளாலும் நேசங்களாலும் நிறைந்திருப்பது தான் சரி என பலமுறை பல தடவைகளில் சத்தமாய் கூறி ஆன்ம வெளிகளில் கடந்து போகிறது.

         இதுபற்றி இன்று ஐம்பதுகளை தாண்டிவிட்ட சிலரிடம்  பேசியபோது என் ஒத்த பருவங்களில் தாமும் மேற்படி சிந்தனை வசப்பட்டதாகவும் பின்னாளில் அது சாத்தியமற்றது என தெரிந்து தம்மை மாற்றிக் கொண்டதாகவும் பதில்தந்தனர்.

இங்கு என்னிலை விளக்கம் தருதல் பொருத்தமாயிருக்கும்.

இனியதான இல்லறம்.

  • இவ்வார்த்தைப் பிரயோகத்தில் எனக்கு கொஞ்சமும் ஈடுபாடில்லை.வெளியளவில் இது சரியாக,கவர்ச்சியாக கற்பனைக்கு சரியான வடிகாலாக அமைந்தாலும் எத்தனை பேருக்கு மனது போல் மாங்கல்யம் வாய்த்தது?????
  • எத்தனை தம்பதிகள் இன்று காட்சித் தம்பதிகளாக மட்டுமே தெரிகிறார்கள்????.
  • எங்கு தாம்பத்தியமும் சந்தோசமும் சரிவிகித நிறைவு கொண்டது????
  • எத்தனை விழுக்காடு திருமணங்கள் தெருவிற்காய் விடப்பட்டன.????

தூயதான துறவறம்.

  • துறவறத்தில் இணைவது தூயபணி.
  •  சலனமற்ற  தூய மனநிலையை  உண்டாக்கும் யோகம் என்னிடமில்லை.
  • நிர்மல வாழ்வொன்றிற்குள் நிரந்தரமாய் எனை கையளிக்கும் பக்குவமும் வசப்படவில்லை.
  • "மெய்யான துறவி" இந்த சொற்போலிப் பழிக்கும் நான் விடையாகும் விருப்பமில்லை.

     நானும் கண்டதுண்டு.பெரும்பாலும் கிராமப்புறங்களில் இப்படியான தனித்து வாழும் மனிதர்களுக்கு வழங்கப்படும் அடைமொழிகள் அழகாகவோ,வரவேற்பிற்குரியதாகவோ இல்லை.முகம்சுழிக்கும்படியாகவும்,மனம் வெதும்பும்விதமாகவுமே அமைந்துவிடுகின்றன.அதிலும் நெறிபிறழ்வு பற்றியதான எண்ணக்கருவே இவர்கள் பால் பரவிக்கிடக்கிறது.ஆனாலும் ஒருவர் தவறியிருக்கலாம்.அதற்காக அனைவருமே நெறி பிறழ்ந்தவர்கள் என்று அடையாளமிடல் சரியானதா??இது மாபெரும் வடுவல்லவா????

  இத்தகைய தனிமனிதர்கள் பால் ஏன் இப்படியான புறக்ணிப்புகள்.?,இழிவுபடுத்தல்கள்??தனித்திருத்தல் என்பது இதற்காகவா சாத்தியமற்றுப் போகிறது???அதிலும் பெரும்பாலும் இங்கு பேசுபொருளாக்கப்படுவது """பெண்கள்""" தான்.

   பொதுவில் கவிதையாக விளிக்கப்படும் பெண்கள் இங்கு மட்டும் மஞ்சள் பத்திகையாவது நியாயமா?நிலவுவெளிச்ம் நீ எனப்பட்டவர்கள் பின்னாளில் கசியும் விளக்கு வெளிச்சமாக்கப்பட்டது ஏன்?ஓவியங்களெல்லாம் பின்னர் ஆபாசம் என பெயர்பெற்றது ஏன்.?

   இந்த மனிதர்களின் பின்னான விருப்பங்களும் வைராக்கியங்களும் வெறுக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டது வருத்தமான உண்மை.விருப்பப்ட்டு தேடிக்கொண்ட அவர்களின் வெளிச்சங்களில் இருட்டடித்துப் போகும் நாகரீகம் மறந்த உரிமையை கையில் எடுப்பது மன்னிக்கப்படக் கூடாதது.

      வாழ்தல் என்பது ஒருதரம் தானே.இங்கு வரைமுறை வகுக்க வழிப்போக்கர் யாருக்கும் வசதி செய்து கொடுக்காதீர்.பதின்மங்களில் தோன்றும் முறையற்ற முதிர்ச்சியற்ற முடிவல்லவே இது.சிலருக்கு பரபரபப்புகள் பிடிக்கும்.சில பேர் கரகோசங்களை எதிர்பார்பர்.கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது கூட சிலபேருக்கு விறுவிறுப்பை தரும்.ஆனாலும் சில மனிதர்கள் இதனூடு பயணிக்க விரும்புவதில்லை.அமைதியில் கசியும் நிமிடங்களையும்,அடக்குமுறையை அனுமதிக்காத பண்டிகைகளையும்,உறுத்தல்கள் அற்ற உறவுகளையுமே  சந்திக்கவிரும்புகின்றனர்.

      இத்தகைய மனிதர்கள் விமர்சனத்திற்காக இப்படி வாழவில்லை.எத்துணை இலட்சியவாதிகள் அவர்கள்.மகாமனிதர்கள் இவர்களும் தான்.அவர்களின் வைராக்கியங்களிற்கு மதிப்பளிப்போம்.நாளை எம்மவர்  சொந்தங்களில் கூட இப்படி நபர்கள் தோன்ற வாய்ப்புண்டு.நாகரீக  மனிதர்களாக நடந்து கொள்வோம்.நானும் சில சமயங்களில் தவறிழைத்ததுண்டு.அப்படியாய் இப்படியாய் பேசுபவர்களுக்கு காது கொடுத்ததுண்டு.இப்போது உணர்கிறேன் என் தவறுகளை.நாளை ஒரு தரம் இப்படியாய் தரம் குறைய மாட்டேன்.
வாழுதல் கூட ஒரு இசைதான்.இவர்களின் ரிதம் இவர்களுக்கு இனிமை தந்தால் இயங்கவிடுங்கள் அவர்கள்.தாளத்தில் தப்புச் சொல்ல நாம் யார்???

இறுக்கமான மனங்களின் 
பின்னுள்ள ஈரங்களை நேசிக்கப்ழகுவோம்!.
அந்த வைராக்கியங்களின் பின்னான
 வாசங்களுக்கு வழிவிடுவோம்.!
மரத்துப்போனவர்கள்
மானம்விற்றவர்களல்ல..!
இல்லறத்தை துறந்தவர்கள்
அது
இல்லாதவர்களுமல்ல...!
பூக்கள் தர தெரியாதா???
முட்களை விலை பேசாதீர்கள் அவர்களுக்காய்!


                                                                                                                                   அன்புடன்
                                                                                                                                    -அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...