முதல் வணக்கம் கூறி பதிவிடுகிறேன்
அது வரை நான் அந்நிய முகம்தான்
அறிமுகமாகிறேன் ஜக்கியமாவதற்காய்...
நான் 'அதிசயா'
பெரிதாய் அடையாளங்களற்ற அமைதிப்புல்லாங்குழல்..
வெட்ட வெளிகளில் அமர்ந்து கொண்டே,
எனக்குள் மட்டுமாய் இசைத்துக்கொள்ளும்
அமைதிப்புல்லாங்குழல்.!
எனக்கு உயிர் தந்த தெய்வம்,
எனக்குள் உயிர் செய்த சொந்தம்,
விதி பெற்ற பந்தங்கள்,
சித்தங்களில் நிறைந்து விட்ட அற்புதங்கள்,
விழியை கிழிக்கும் கம்பிகள்,
இவையெல்லாம் என் இசைப்பிள்ளையாய்..!
கவிதையெனும் ஆன்மாவை அணைத்துக்கொண்டே,
காலங்கள் தாண்டி யுகங்கள் துறந்து,
கண்ணோரம் மழை கசிய,
மலை வெளிகளில் மிதந்து செல்வேன்..!
மஞ்சள் வெயில் வற்றி விட்ட முன்னிரவில்,
நிலவுடன் நனைந்து கொண்டே,
உங்கள் காதோரங்களில் கடந்து செல்வேன்..
கொஞ்சமாய் புன்னகைத்து தலை கோதுங்கள்-என்
கவிதைகளுக்கு..
நித்தியமாய் மழை கழுவும்
என் சாலைகயின் பூக்களை..!
பதிவுலகின் வாசல்களில் வெளிச்சங்கள் நட்டுவைத்த என்
பாசத்துக்குரிய இணையசகோதரனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...!

