Wednesday, May 4, 2016

துயர் காய வருகிறேன் பார்த்தீபா...!

விரலிடை கணுவெல்லாம் நிரம்பி நெருங்கு பார்த்தீபா
எப்போதும் நிகழ்ந்துவிட்டிராத அணைப்புக்களையும்
இனி நிகழவே கூடாத  நெருக்கங்களுக்கும் சேர்த்து
இப்போது ஒரே ஒருமுறை நிரம்பி நெருங்கு. 
இனி நாம் கடந்து போவோம்.
உணரதாவற்றை  துறப்பது மெய்நிலைத்துறவாகாது..
ஆதாலால் இப்பிரிவிற்கு முன்னேனும் ஒருமுறை என் கழுத்தோரம் கட்டிக்கொள்..
பார்த்தீபா இச்சை அற்ற இத்தழுவல் ஒரு தீபோல உனை நெருங்கட்டும்..
உன்னில் துயர்காய வந்தேன் பார்த்தீபா.. 

நேரப்போகும் இவ்வாழ்வில் ஏதேனும் ஞாபக இழை பற்றி நீ உள்ளேறி விடுவாய்..
எனை சூழ்ந்தே அசைவாய்..
ஆனாலும் பார்த்தீபா அப்போதைய என் சந்தோசங்களேனும் அடர்ந்த கண்ணீரேனும்
உனக்கு சங்கடத்தையே உண்டாக்கும்
ஆதலால் காற்று வாசம் கொள்ளும் பொழுதுகளின் 
இப்படியாய் இனி என்னருகில் நெருங்காதே 
ஒரு குமிழி போல் நான்.
மற்றொரு தீண்டலில் நிச்சயம் உடைந்து போவேன்.
குறிப்பெழுதி வை.
இன்னொரு தரம் இதை சொல்லுமுன் 
என் இறுக்கங்கள் தளர்ந்து போய்விடும்.
பின் மீண்டெழுதல் என்பது அபத்தம்.
கிறக்கத்தை உண்டாக்கும் சிநேகத்தின் பிம்பங்கள்
பின்னாளில் பெரும் நிழல் போல துரத்தும்..
பார்த்தீபா அப்போது பகிரங்கமாய்  ஒதுங்க முடியா அந்நிழல்
சிறுபிள்ளை தன் நிழல் பார்த்து மருள்வது போல பயமுண்டாக்கும்..
நிழலாய் தொடராதே பார்த்தீபா
அந்நாளில் மருட்சியை தாங்கும் மனத்திறம் கொண்டிரேன் 

இனியும் நீயில்லா அவ்விருக்கைளில் அந்திப்பறவை வந்து அமரும்..
சருக்கின் ஓசையெல்லாம் நடுநடுங்க உடைதலுறும்
பின்னும்  மற்றொரு நேசத்திற்காய்அவ்விருக்கையில் இலைதுளிர்க்க ஆரம்பிக்கும்.. 
பார்தீபா உனை நானும் உணர்ந்தேன் என இதன்பொருட்டு அறிந்துகொள்.
இறுதியும் முதலுமான தழுவலில் தான் இதை சொல்ல முடிந்தது..

கண்ணீரையும் மீறி சந்தோஷிப்போம்
கானல் கானல் என்று உயிர்வற்ற கதறி மனப்பாடம் பண்ணியபின்னும்
நிர்க்கதியான நம் பாதங்களை சூழ்ந்துகொள்ளும்
இந்நேச அலையிடம்பூக்களை நீட்டுவதா 
அன்றேல்வெறிபிடித்தவள் போல் தலைதெறித்து ஓடுவதா??நீயிருக்கையிலே, 
நீபார்க்கையிலே நமக்காய் அழுது விடுகிறேன்.
தண்ணீர்வரப்படிகளிலும் தனிப்பயணங்களிலும்
சிரிக்கும் உன் கண்கள் கொண்டு எனை தண்டித்துவிடாதே...
எப்போதும் எனை பார்க்காதிருக்க சாபமிட்டு போ..!  
பார்த்தீபா தித்திப்பான வில்லைகள் போலிருக்கும் 
அணைப்பின்கசப்பான துயரங்களை உன் துணையின்றியே தாங்கியாகவேண்டும்.

முள்போல் மெலிந்த கருத்தமாவின் விரல்களிலும்
பொன்மஞ்சள் முடியுடை நகர்ப்பெண்ணின் இடையிலும்
வீட்டிற்கு மூத்தவளின் கழுத்தோர உரோமங்களிலும்
நேசத்தின் வாசமொன்று வாடையாய் மாறியிருக்கும்

பார்த்தீபா அழுத்தமாய் அதீதமாய் அணைத்துக்கொள்.
நீ வேர்பிடித்திருக்கிறாய்..
உனைக் கழுவமழையென இறங்கும்இக்கண்ணீரை  மறைக்கமாட்டேன் காண்....
என்  பாதத்தில் உனை இட்டுவலி களைய கனவு கண்ட காலங்களில்
கைகோர்ப்பின் கதகதப்பு பற்றிய சிலாகித்த இரவுகளிலும்
முத்தமிட்டபடியே கடப்போம் எனநினைத்த சச்சரவுகளிலும்
கண்ணீரெனும் எரிதிரவம் இட்டுவிடு.

இத் தழுவலில் வகிடுவழி பிரிந்து கொள்ளும் கேசம் போல
நம்மிலிருந்து விலகிப்போவோம்.
இன்னுமின்னும் வாசற்படியருகே கண்ணியத்தை கட்டி வைத்திருக்கிறேன்.
மலரானானும் நுகமானாலும் எனக்காய் உடைக்க வலுவற்றவள் நான்..
பின்னும் இங்த இறுதி தழுவலை விட உனைச்சேர வழியில்லை..

தழுவி விடை கொடுக்கும் தைரியங்களை
நிதானமான ஒருநாளில் வகுப்பெடுத்திருந்தேன் 
பார்த்தீபா  இத்தனை அடர்தியாய் உன்மீது படர்ந்திருந்தேன்
மலைமுகட்டில் இறகு உதிர்த்தும்  கழுகைப்போல
என்னிலிருந்தான உன் சாயல்களை பிடுங்கி எறிகிறேன்.
காண் அதையும் காண்


அத்தனையும் கண்டபின் உன்அணைப்பிலிருந்து
என்னைதளர்த்தி விடு.
நடுங்கும் இவ்விரல்களை சொடுக்கு எடுத்தபடி புறப்படும்
இக்குற்றக்காரியின் மனக்கோணல்களை மன்னி..! 
பார்த்தீபா....,
அனன்யாவை மறுதலிக்கும் மனத்திற்காய் பிராத்திக்கிறேன்.
இணையாய் ஆற்றமுடியா என் நேசத்தின் ஓலங்களை ஒப்புவிக்கிறேன்.
பார்த்தீபா என் சுவடு மறைத்த உன் சாலைகளில் கைகுலுக்கிக்கொள்ளாதிருப்போம்.
எந்த சாலையும் மீண்டும் உதிப்பதற்கு துளி அழுகையே போதுமாயிருக்ககூடும். 


-அனன்யா- 

Saturday, March 5, 2016

நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம் போல.இப்போதும் அப்படியே தான்..

அனன்யா இன்று உனக்கொரு சத்தியம் செய்கிறேன்.என் மீது காட்டும் பிரியங்களின் பொருட்டு எனை திருமணம் செய்து கொள் என்று உனை கேட்கமாட்டேன் அனன்யா.உன் மீது மிகவே மரியாதை கொண்டுள்ளேன்.உனை யாரென்று அறியாதவன் நான்.ஆனாலும் நீ தேவதையாய் இருந்தல்வா என்னை ஆசீர்வதிக்கிறாய்.உனக்கான கனவுகள் மீது என் விருப்பங்களை திணிக்க மாட்டேன் அனன்யா.ஒரு காற்றுப்போல இப்போது இக்கணம் உனை உணர்வதே போதுமாயிருக்கிறது.
அனன்யா திருமண மாலையின் பாரங்கள் உன் மென்மையான சிறகுகளை பலவீனப்படுத்தும்.ஆதலால் திருமணம் பற்றி பேசமாட்டேன்.உன்னுடன் கூடவே வாழ்வனைத்தும் ஓர் வழிப்போக்கன் போல வந்து விடுகிறேன்.அனன்யா என் சபல புத்தியும் திடமற்ற நினைவின் பொருட்டேனும் என்னையும் விரல் கோர்த்தபடி கூட்டிச்செல்வாயா?
நீ இன்றி என்னால் இங்கு இயங்க முடியவில்லை அனன்யா.இந்த காட்டில் இப்போது பொழியும் குளிர்ந்த நிலவும் உன் உதட்டுச்சாயமும் போதும்.இரவையும் பகலையும் மாறிமாறி படைத்தபடி இங்கேயே வாழ்ந்துவிடுவோம்.பின்பு நம் கேசத்தின் சரிவு வழி வேறோர் தேசம் போய்விடுவோம் அனன்யா.என் நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம்  போல.இப்போதும் அப்படியே தான்....இப்பளிங்கு விரல்கள் போல் ஏதேனும் உண்டோ சொல்.போர்க்களத்தின் முன்வரிசையில் நின்றிருந்தேன்.நடுக்கமுறும் கால்களை நிறுத்தி வைப்பதே எனக்கு போராட்டமாய் இருந்தது.ஆனாலும் விசுவாசம் மிக்க போராளியாய் எனை காட்டிக்கொண்டிருந்தேன்.போதும் அனன்யா இனி உடைவாள் மற்றும் ஆயுதங்களை அனைத்தையும் ஸ்பரித்து நீ பூக்களாக்கிவிடு.என்னை நான் விரும்பும் உருவமாகவே இருக்கவிடு.நேசித்தல் ஒன்றே தேவை.அதுவும் உன்னிடமிருந்தே வேண்டும் அனன்யா.இச்சந்திப்புக்கள் எதுவரை நீளுமோ?இளைப்பாறுதலே உன்மீது கிறக்கமுற்றிருக்கிறேன்.ஆனாலும் என் நிதானங்களை உன் தேவ நேசத்தால் நிரப்பி வைத்துள்ளேன்.ஆதலால் சத்தியம் செய்கிறேன்.

அனன்யா  உன் போல் ஆறுதலை வேறுஎங்கும் உணரவில்லை.அடிமனதில் உறைந்து போன அச்சங்களும் பிடிப்பின்மையும் நடுநிசிகளில் அலறலாய் துரத்துகிறது அனன்யா.என்னிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அனன்யா.வீடற்றவனின் வேதனைகளை ஒத்தது இந்த தப்பியோடல் என்பது.எதுவரை அனன்யா ஓட முடியும் சொல்? யாருமே கேட்கவில்லை என்கிறார்கள்,அன்றேல் பழகிவிடும் என்கிறார்கள்.என் அனன்யா பக்கம் வா.உனக்கே கேட்கும் அனன்யா அந்த அலறல்கள்.அதன் பின்னும் இப்படியே தான் எனை நேசிப்பாய்.பின் எப்படி நீ இல்லாத இரவின் பாடல்களை ரசிக்க முடியும்.மருண்டு போய்விடுவேனே.வேண்டாம் அனன்யா என்னையும் கூட்டிப்போய்விடு.ஏகாந்தம் ஒன்றில் எனை தரித்துவிடு.அனன்யா முடிந்தவரை முயன்றுவிட்டேன் அனன்யா.எந்தப்பாடல்களிலும் பொருள் இருப்பதாய் தோன்றவில்லை.இதை சொல்லி அவர்களை சங்கடப்படுத்தவும் முடியவில்லை.அனன்யா உனை நிர்ப்பந்திக்கவில்லை.ஆனால் தயை கூர்ந்து கருணை காட்டகேட்கிறேன்.எனையும் கூட்டிப்போ..அன்றேல் நாளையும் இங்கு வா அனன்யா..

Thursday, March 3, 2016

அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்...!

அனன்யா உன்பாதங்களை என் மடிமீது ஏங்திக்கொள்கிறேன். இந்த மென்மைகளுடனே இப்பொழுதை கடந்து விடுவேன்.அனன்யா எனக்கொரு காதல் இருந்தது.அது இன்னும் ஒரு பாடலை போல நினைவிருக்கிறது.அது ஒரு முரண்காதல் என்று நீ சொல்லமாட்டாய்.எதைப்பற்றிய நினைவுகளுமற்று வெறும் காதலால் இயங்கிக்கொண்டிருந்தேன்.அனன்யா நானாய் மடித்துக்கொண்ட சிறகுகளை வெகுதூரம் தாண்டி விரிக்க துணிந்த காலம் அது.இப்போது  சிறகுகளை பற்றி நினைக்கவே பதறுகிறேன்.அனன்யா இந்தப்பொன் பாதங்களை ஒரு தடவை முத்தமிட்டு கொள்வேன்.அனன்யா காதல் கொள்வதை தீட்டு என்று நினைத்த பதின்ம வயதுகளை போல மீண்டும் நேசம் துறந்த ஏகாந்தத்திற்குள் வாழும்படி என்னையே சபித்துக்கொண்டவன் நான் அனன்யா.

ஆனாலும் அந்த ஏகாந்தமே எனக்கு சுதந்திரம் என்று கருதினேன்.என்றேனும் ஜன்னல் அருகில் நின்னறபடி நானாய் விடைகொடுத்த அந்த நேசத்திற்காய் கற்பனையில் கையசைத்துக்கலங்கியிருக்கிறேன்.அனன்யா அறியாவா? என் இத்தனை இறுக்கங்களின் பின் விட்டுப்போன சாரல் ஒன்று இருந்த்து என்பதை??பின்னாளில் ஏதேதோ கடமைகள் இலட்சியங்கள் முகமூடிகள் பந்தங்கள் என்றான பயணங்ளில் இப்போது குற்றவாளியாய் பரிதாபத்திற்குரியவனாய் எனை காண்கிறேன்.யாராலும் தேற்றிவிட முடியாத என் அழுகைகளை உன் ஸ்பரிசம் ஒன்றே குணமாக்கும் என்பதை அறிவாய்.

அனன்யா ஆறுதலளிப்பவளே என் மீது பரிதாபம் கொள்ளமாட்டாய் என்று இப்போதும் நினைக்கிறேன். வாழ்வென்பது பயணமே.உள்ளே ஆழ்ந்த அமைதியை வளர்த்துக்கொண்டு இந்த உலகெங்கும் பயணிக்க வேண்டும்.காற்றுப்போல..அறியாதமுகங்கள்..யாருமற்ற தெருக்கள் காட்டுப்பாதைகள் என நிமிடங்கள் எல்லாம் துருதுரு என்று இயங்கவேண்டும்..ஆனால் அனன்யா ஒரு குளம் போல நீண்ட நேரமாய் இங்கே தான் தேங்கியிருக்கிறேன்.பாசிமூடி வெளிச்சங்களை மறந்த குளம் போல...அதுவே எனக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறது.அனன்யா என்அனன்யா கேள் இதுவல்ல நான் என்று உரக்கக்கத்த வேண்டும் அன்ன்யா.

உனை மூத்தவளாய் பெற்றிராத உன் அன்னையின்  இரக்கத்திற்காய் கடவுளுக்கு நன்றி.மூத்த மகனின்..மகளின்..சாலைகள் இளையவர்களை காட்டிலும் கடினமானது என்பதை அறிந்து கொள்.உனை மூத்தவளாய் பெற்றிருந்தால் இத்தனை மணிகளாய் நீ என்னை சகித்திருக்கமாட்டாய். மூத்தவர்களின் அலாரங்களாய் அம்மாவின் முத்தங்களாலும் கண்ணீராலும் ஆனது.நீ இரக்கமானவள்.இந்த வழிப்போக்கனின் விசும்பல்களை கவிதை போலல்லவாகேட்டுக்கொண்டிருக்கிறாய். மீண்டும் எப்போது  காண்பேன் அனன்யா??ஆதலால் தான் இத்தனை இறுக்கமாய் உன் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்.அனன்யா பரிசுத்தமான உன் ப்ரியங்களை காட்டிலும் வேறெந்த எண்ணமும் என் மனதில் இல்லை .ஆதலால் நீ நெற்றிவியர்த்து நகங்களை கடித்தபடி எந்தப் பொய்களும் சொல்லவேண்டியிருக்காது அப்பாவிடம்.உன்னை இப்படி ஆசுவாசமாய் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.அனன்யா....!

 



-அதிசயா-




Friday, February 26, 2016

அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு!

அனன்யா  வேர் பரப்பி கிளைத்து விட்ட இந்த தனிமையின் நாட்களில் உன் மதுர நாமத்தை தவிர யாரை அழைப்பேன்.
யார் விரல்களும் தீண்டிவிட முடியாத்தொலைவொன்றிற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன்.ஆனாலும் நானே மீண்டும் பந்தங்களுக்குள் எனை பிணைத்து விடுகிறேன்.நம்பிக்கையாய் பற்றும் கைகளை உதறித்தள்ளிவிட முடியாத பலவீனம் நான் என்பதை நீதான் அறிவாய் அனன்யா...இந்த நாட்களில் எல்லாம் வெறும் ஸ்நேகத்திற்குரியவளாய் அல்லாமல் என் சுமைகளை பொறுத்துக்கொள்ளும் சுமை தாங்கியாய் நீ இருக்கிறாய்..அனன்யா அழுவதை ஒருபோதும் அனுமதித்துவிடாத நான் தனிமையாய் வானத்தை பார்த்த்படி சத்தமின்றி கெட்டித்தனமாய் அழுதுவிட்டு மீதியை  எழுத்துக்களில் விழுங்கவும் பழகியிருந்தேன்.உன்னிடம் மிகுந்த நன்றி உணர்வு கொண்டிருக்கிறேன்.இத்தனை நிமிடங்களுமாய் உன் முன்னிருந்து சத்தமிட்டபடி உன் கண்களை பார்த்தபடி அழுதுகொண்டிருக்கிறேன்.எத்தனை ப்ரியம் கொண்டவள் நீ
எனக்கு அழுதாக வேண்டும்.நீ காரணங்களை கேட்டு எனை சங்கடத்திற்குள்ளாக்மாட்டாய் என்பதையே அதிகபட்சமாய் நான் நம்புகிறேன்.

அனன்யா சாரல் பட்டதும் முகையுடையும் மலர் நீ.இத்தனை தகிப்பான என் கோபங்களையும் அடர்த்தி மிக்க என் கண்ணீரையும் எப்படி சகித்து கொள்கிறாய்.இத்தனைக்கு பிறகும் மிகவே அழுத்தமாய் அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாய்.அனன்யா நீ வாசங்களால் ஆனவள் என்பதை உணர்கிறேன்.

அனன்யா நீ எனக்கான தேவதை ஆனால் மோட்சங்களை துறந்துவிட்டு நிர்ப்பந்தங்களின் பாதையில் என்னோடு நடக்க தெரிந்த தேவதை. இராப்பிச்சைக்காரனாய் நான்,இரவலாய் கிடைத்த கம்பளித்துண்டைப்போல உனை மிகுந்த சிரத்தையோடு என் கைகளில் எடுத்து முத்தமிடுகிறேன்.உனை எங்கும் தொலைத்துவிடக்கூடாத என்பதில் அதீத கவனமாயுள்ளேன்.அனன்யா  அனன்யா உன் கைகளுக்குள் எனை பத்திரப்படுத்திவிடு. பார்கையில் நானே பயந்துவிடும் அளவிற்கு கோபம் மிகுந்தவனாயிருக்கிறேன்.உன்னில் தான் இளைப்பாறமுயல்கிறேன்.என் பால்ய காலங்களை உன் அருகில் இருந்தபடியே மீட்க போகிறேன்.அனன்யா அறிக்கையிடப்படாக இயலாமைகள் பற்றியும் யாரும் அறிந்திராத என் தவறுகள் பற்றியும் சொல்லிக்கொண்டிக்கிறேன்.

போதையுற்றவன் போல இன்னும் அழுதுகொண்டிருக்கிறேன் அனன்யா.பதற்றமுற்றிருக்கிறேன்.உள்ளே ஆயிரம் கேள்விகள் சலனங்களை உண்டாக்க கார்கால குளம் போல தளுதளுத்தபடி உனை பார்கிறேன்.எங்கேயும்போய்விடலில்லை நீ.அதே ஸ்நேகப்பார்வையால் எனை வருடுகிறாய்.இந்த பின்னிரவுகளில் குளக்கரைகளில் சுற்றித்திரிய சுதந்திரம் கொடுத்த உன் தேவனை நினைத்துப்பார்க்கிறேன். என் விருப்பங்களை பைத்தியக்காரத்தனங்களை, சாத்தியமற்றது என உலகம் சொல்லும் ஆசைகளை கூட நீ கொண்டாடிக்கொண்டிருக்கிறாய். அனன்யா உனை தவிர யாரையும் சந்திக்க விரும்பவில்லை.அத்தனை ரம்மியமானது நமக்கான சந்திப்புக்கள்.



பெரும் காற்றில் ஜன்னல் அடிபடுவதைபோல நான் கை நெகிழ்ந்த என் விருப்பங்கள் சடசடவென என் இருத்தலில் மோதிப்போகின்றன.அனன்யா சரி பிழை , வருங்காலம் வசதியாய்ப்பு என்று எந்த சமாதானங்களிலேனும் பற்றிப்பிடித்தபடி கடினங்களை கடந்துவிட தானே முயல்கிறேன்.ஆனாலும் அடம்பிடிக்கும் இச்சிறுமனத்திற்கு உனைதவிர எதிலும் உடன்பாடில்லை.


அனன்யா என்னுள் கிறக்கத்தை உண்டாக்கு.நான் மயங்கிப்போகிறேன் சில நாளிகைக்கு.உன் சின்னவிரல் கொடு,அன்ன்யா.இங்குண்டான கசப்புக்களை தாண்டி வெகு தூரம் போவேன். அனன்யா நீ அற்புதம் , அழகு, என் ஆறுதல்.இன்னுமொருமுறை முத்தமிட்டுக்கொள்.நான் மதி இழந்தவன்.கற்களோடு  பேசுகிறவன்.காதலை அறிக்கையிடும் தைரியம் அற்றவன். கெட்டித்தனம் அற்றவன்.ஆனாலும் பூக்களையும் மழையையும் நேசிக்கிறேன். மலைகளுக்குள்ளும் குழந்தைகள் அருகிலும் வாழ நினைக்கிறேன்.

அனன்யா நீ என் கனவுகளை பரிகசிக்காதவள்.ஆம் என்றால் ஆமென்றே சொல்வபள்.சிரித்தபடி கவலைகளை மறைக்க கற்றுத்தந்தவள்.ஆதலால் எனை கைநெகிழாதே என் பயணம் நெடியது,பயம் உண்டாக்கவல்லது.அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு நான் கைநெகிழ்தல்களால்

கலக்கமுற்றவன்.!

-அதிசயா-

Thursday, August 20, 2015

ப்ரியமுள்ள...........!


ப்ரியமே...!
இந்தக்கூதிர் காலத்தின் ஈற்று நாழிகை வரை உனை அங்கேயே தரித்துக்கொள்்சினம் உண்டாக்காத மஞ்சள் வெயில் காலத்தின் பிரம்மிப்புக்களை பற்றி முன்பொரு ஓலையில் நீ வரைந்ததாய் ஞாபகம்ப்ரியக்குழந்தாய் உணரப்படாத கொண்டாட்ட கோஷங்களை காட்டிலும் மௌனம் மட்டுமே அடர்ந்துள்ள தனிமை வெளி ரம்மியமானது என்பதை உணர முயல்வாயாக

வேகமான இந்த ஓட்டங்களில் உனக்குளிருக்கும் அந்த கலைஞனை உயிர்ப்பிக்க முயன்றுபார்
அறிவாயா வானமே கூரையென்றபடி மெதுவாய் ஓர் ராகம் உண்டுபண்ணியபடி மூச்செடுப்பதில் உள்ள சுகத்தை.முதலில் உன்னை செரிமானம் செய்துவிடு்.பிறகு புதிதாய் ஓர் உயிர் ஊறும் பார்
இதை நிச்சயமாய் நீ உணர்வாய்.இக்கூதிர் காலத்தின் அழுகைகளில் எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்.இது தீர்ந்ததும் நானும் உன் மலைத்தேசம் புறப்படுவேன்.அதுவரை எல்லாப்புலர்வுகளையும் உள்வாங்கு

எந்தக்கண்டிப்பும் உனக்கு இல்லை்.கையிவிருந்து புறப்பட்ட சோப்குமிழிகளை  போல் பொழுதுகள் உனை இயக்கும் திசையெங்கும் போ...எந்த ஆசானும் தரமுடியாத ஆச்சர்யங்களை இக் கணங்கள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன.உன்னுள்ளே வாழும் அக்கலைஞன் மீண்டு எழுகிறான் பார்.மீண்டுமொருமுறை இது பற்றி எழுதுவது வாய்க்காது போகலாம் ப்ரியமே
நான் காண நினைத்த பெரு வெளிச்சத்தின் உன்னால் வாழமுடியுமாயிருக்கிறது.என்னால் தீர்மானிக்க முடியாது போன என் இளமை  போலன்றி உன் தீர்மானங்களில் சுதந்திரம் நிறைந்து கிடக்கிறது.என்னை நனைக்கட்டும் என நாளும் ஏங்கிய ஆதித்துமி உன் கேசக்கோட்டோடு வழிகிறது.என் பிரியமே எல்லைகள் நிறுவப்பட்ட ஆயுளில் தித்திப்பான இப்பொழுதுகளை இட்டு நிரப்பிக்கொள்.உன்னை சூழ்ந்துள்ள பெருவிருட்சங்களின் இனிமையான உன் பால்யத்தின் குறிப்புக்களை பொறித்து வை

என் ப்ரியமே மானுடர் யாருமேயில்லை உனை சூழ.நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி உன் மீதமுள்ள நாட்களை நிறுவிக்கொள்.புரண்டெழு குதி.பள்ளத்தாக்குகளெங்கும் உன் குழந்தைமையை அணைத்தபடி புரண்டெழு.நீ ஆண் என்றோ பெண் என்றோ விபரிக்க வேண்டியதில்லை ப்ரியமே
எப்பொழுதில் எதுவாக தோன்ற பிடிக்கிறதோஅதுவாய் இயங்கிக்கொள்.திருமணம் பற்றியோ என்ன குழந்தையை பிரசவிப்பதுஎன்றோ எந்தப்பேச்சுக்களின் வாடையும் சுமைபோல் உன்னை அழுத்தாதிருக்கட்டும் என ஆசீர்வதிக்கிறேன்.நீ என்பது நீ மட்டுடே என்ப்ரியமே.எதற்காயும் உனை தியாகிக்காதே.நீ என்பது நீமட்டுமே.அப்படியே இருந்துவிடு.

இதுபற்றி இன்னும் பேசவே ஆசையாய் இருக்கிறேன்.தீராக்காதலாய் இக்காட்சிகள் எனை தூண்டிக்கொண்டிருக்கின்றன.மொழிபெயர்ப்பு கவிதைகளை போல ஏதோ ஒரு ரகசியதை நோக்கி விரையத்தூண்டும் இக்கணங்கள்.

இயல்பான புன்னகை ஒன்றும் கூச்சமற்ற துயர அழுகை ஒன்றும் ஓரிடத்திலிருந்தே புறப்படுகின்றன.எனில் எப்புள்ளியில் இப்போது வாழ்கிறாய் நீ்??முன் இரவிலும் அதிகாலையிலும் பார் எத்தனை வர்ணப்பிரிகைகள்.வெளிகளில் தோன்றும் காற்றும் இக்கிளிகளின் பறத்தல்களும் எத்தனை முறைநிகழ்ந்தாலும் அத்தனை தடவையும் புதினமே...!பட்சிகளின் இறக்கைக்குள் சென்றுபார்.நேசிப்பின் மொழி அறிந்த அப்பறவையின் கதகதப்புத்தான் கருவறையை பிரதி பண்ணும்.அனுமதி்்்உன் ஆகாரத்தில் தானியங்களை அனுமதி்.அந்திமத்தின் நாட்களை போல் ஆரம்பத்தின் வழக்கங்களும் அவசியமே.

என் பிரியமே நாட்கள் மீளெழுவதில்லை நீ நன்கறிவாய்.அந்தி நாட்களில் நீ இசைக்கப்போகும் புல்லாங்குழல் கீதம் உன்னுடையதாய் மட்டுமே இருக்கட்டும் பிரியமே ஊற்றுக்களில் சுரக்கும் நேசத்தீர்த்தங்களை குடி,உனக்கான ராகங்களை நீ மட்டுமே தேடிக்கொள் உன்இஷ்ரப்படி.என் பிரிய சிநேகிதா இந்நாட்கள் பற்றி ஒரு குறிப்பெழுதி கற்றோடு விடுவாயா?
அழுது தீர்ந்துவிட்ட கடைசி நாளில் பேதக்கோபங்களற்று .உள்ளூறும் நெருப்புகளேதுமின்றி நான் நிதானமாவேன் .

அப்போது உன் குறிப்பு எனை இயக்கி அங்குகூட்டிப்போகும்
அதுவரை அங்கேயே தரித்திரு ப்ரியமே.

்்்அதிசயா்்்்
Related Posts Plugin for WordPress, Blogger...