Friday, February 26, 2016

அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு!

அனன்யா  வேர் பரப்பி கிளைத்து விட்ட இந்த தனிமையின் நாட்களில் உன் மதுர நாமத்தை தவிர யாரை அழைப்பேன்.
யார் விரல்களும் தீண்டிவிட முடியாத்தொலைவொன்றிற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன்.ஆனாலும் நானே மீண்டும் பந்தங்களுக்குள் எனை பிணைத்து விடுகிறேன்.நம்பிக்கையாய் பற்றும் கைகளை உதறித்தள்ளிவிட முடியாத பலவீனம் நான் என்பதை நீதான் அறிவாய் அனன்யா...இந்த நாட்களில் எல்லாம் வெறும் ஸ்நேகத்திற்குரியவளாய் அல்லாமல் என் சுமைகளை பொறுத்துக்கொள்ளும் சுமை தாங்கியாய் நீ இருக்கிறாய்..அனன்யா அழுவதை ஒருபோதும் அனுமதித்துவிடாத நான் தனிமையாய் வானத்தை பார்த்த்படி சத்தமின்றி கெட்டித்தனமாய் அழுதுவிட்டு மீதியை  எழுத்துக்களில் விழுங்கவும் பழகியிருந்தேன்.உன்னிடம் மிகுந்த நன்றி உணர்வு கொண்டிருக்கிறேன்.இத்தனை நிமிடங்களுமாய் உன் முன்னிருந்து சத்தமிட்டபடி உன் கண்களை பார்த்தபடி அழுதுகொண்டிருக்கிறேன்.எத்தனை ப்ரியம் கொண்டவள் நீ
எனக்கு அழுதாக வேண்டும்.நீ காரணங்களை கேட்டு எனை சங்கடத்திற்குள்ளாக்மாட்டாய் என்பதையே அதிகபட்சமாய் நான் நம்புகிறேன்.

அனன்யா சாரல் பட்டதும் முகையுடையும் மலர் நீ.இத்தனை தகிப்பான என் கோபங்களையும் அடர்த்தி மிக்க என் கண்ணீரையும் எப்படி சகித்து கொள்கிறாய்.இத்தனைக்கு பிறகும் மிகவே அழுத்தமாய் அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாய்.அனன்யா நீ வாசங்களால் ஆனவள் என்பதை உணர்கிறேன்.

அனன்யா நீ எனக்கான தேவதை ஆனால் மோட்சங்களை துறந்துவிட்டு நிர்ப்பந்தங்களின் பாதையில் என்னோடு நடக்க தெரிந்த தேவதை. இராப்பிச்சைக்காரனாய் நான்,இரவலாய் கிடைத்த கம்பளித்துண்டைப்போல உனை மிகுந்த சிரத்தையோடு என் கைகளில் எடுத்து முத்தமிடுகிறேன்.உனை எங்கும் தொலைத்துவிடக்கூடாத என்பதில் அதீத கவனமாயுள்ளேன்.அனன்யா  அனன்யா உன் கைகளுக்குள் எனை பத்திரப்படுத்திவிடு. பார்கையில் நானே பயந்துவிடும் அளவிற்கு கோபம் மிகுந்தவனாயிருக்கிறேன்.உன்னில் தான் இளைப்பாறமுயல்கிறேன்.என் பால்ய காலங்களை உன் அருகில் இருந்தபடியே மீட்க போகிறேன்.அனன்யா அறிக்கையிடப்படாக இயலாமைகள் பற்றியும் யாரும் அறிந்திராத என் தவறுகள் பற்றியும் சொல்லிக்கொண்டிக்கிறேன்.

போதையுற்றவன் போல இன்னும் அழுதுகொண்டிருக்கிறேன் அனன்யா.பதற்றமுற்றிருக்கிறேன்.உள்ளே ஆயிரம் கேள்விகள் சலனங்களை உண்டாக்க கார்கால குளம் போல தளுதளுத்தபடி உனை பார்கிறேன்.எங்கேயும்போய்விடலில்லை நீ.அதே ஸ்நேகப்பார்வையால் எனை வருடுகிறாய்.இந்த பின்னிரவுகளில் குளக்கரைகளில் சுற்றித்திரிய சுதந்திரம் கொடுத்த உன் தேவனை நினைத்துப்பார்க்கிறேன். என் விருப்பங்களை பைத்தியக்காரத்தனங்களை, சாத்தியமற்றது என உலகம் சொல்லும் ஆசைகளை கூட நீ கொண்டாடிக்கொண்டிருக்கிறாய். அனன்யா உனை தவிர யாரையும் சந்திக்க விரும்பவில்லை.அத்தனை ரம்மியமானது நமக்கான சந்திப்புக்கள்.



பெரும் காற்றில் ஜன்னல் அடிபடுவதைபோல நான் கை நெகிழ்ந்த என் விருப்பங்கள் சடசடவென என் இருத்தலில் மோதிப்போகின்றன.அனன்யா சரி பிழை , வருங்காலம் வசதியாய்ப்பு என்று எந்த சமாதானங்களிலேனும் பற்றிப்பிடித்தபடி கடினங்களை கடந்துவிட தானே முயல்கிறேன்.ஆனாலும் அடம்பிடிக்கும் இச்சிறுமனத்திற்கு உனைதவிர எதிலும் உடன்பாடில்லை.


அனன்யா என்னுள் கிறக்கத்தை உண்டாக்கு.நான் மயங்கிப்போகிறேன் சில நாளிகைக்கு.உன் சின்னவிரல் கொடு,அன்ன்யா.இங்குண்டான கசப்புக்களை தாண்டி வெகு தூரம் போவேன். அனன்யா நீ அற்புதம் , அழகு, என் ஆறுதல்.இன்னுமொருமுறை முத்தமிட்டுக்கொள்.நான் மதி இழந்தவன்.கற்களோடு  பேசுகிறவன்.காதலை அறிக்கையிடும் தைரியம் அற்றவன். கெட்டித்தனம் அற்றவன்.ஆனாலும் பூக்களையும் மழையையும் நேசிக்கிறேன். மலைகளுக்குள்ளும் குழந்தைகள் அருகிலும் வாழ நினைக்கிறேன்.

அனன்யா நீ என் கனவுகளை பரிகசிக்காதவள்.ஆம் என்றால் ஆமென்றே சொல்வபள்.சிரித்தபடி கவலைகளை மறைக்க கற்றுத்தந்தவள்.ஆதலால் எனை கைநெகிழாதே என் பயணம் நெடியது,பயம் உண்டாக்கவல்லது.அனன்யா வெளிர்நீலப்பெண்னே..., பரிசுத்த முத்தமிட்டு தலைகோதிவிடு நான் கைநெகிழ்தல்களால்

கலக்கமுற்றவன்.!

-அதிசயா-

Thursday, August 20, 2015

ப்ரியமுள்ள...........!


ப்ரியமே...!
இந்தக்கூதிர் காலத்தின் ஈற்று நாழிகை வரை உனை அங்கேயே தரித்துக்கொள்்சினம் உண்டாக்காத மஞ்சள் வெயில் காலத்தின் பிரம்மிப்புக்களை பற்றி முன்பொரு ஓலையில் நீ வரைந்ததாய் ஞாபகம்ப்ரியக்குழந்தாய் உணரப்படாத கொண்டாட்ட கோஷங்களை காட்டிலும் மௌனம் மட்டுமே அடர்ந்துள்ள தனிமை வெளி ரம்மியமானது என்பதை உணர முயல்வாயாக

வேகமான இந்த ஓட்டங்களில் உனக்குளிருக்கும் அந்த கலைஞனை உயிர்ப்பிக்க முயன்றுபார்
அறிவாயா வானமே கூரையென்றபடி மெதுவாய் ஓர் ராகம் உண்டுபண்ணியபடி மூச்செடுப்பதில் உள்ள சுகத்தை.முதலில் உன்னை செரிமானம் செய்துவிடு்.பிறகு புதிதாய் ஓர் உயிர் ஊறும் பார்
இதை நிச்சயமாய் நீ உணர்வாய்.இக்கூதிர் காலத்தின் அழுகைகளில் எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்.இது தீர்ந்ததும் நானும் உன் மலைத்தேசம் புறப்படுவேன்.அதுவரை எல்லாப்புலர்வுகளையும் உள்வாங்கு

எந்தக்கண்டிப்பும் உனக்கு இல்லை்.கையிவிருந்து புறப்பட்ட சோப்குமிழிகளை  போல் பொழுதுகள் உனை இயக்கும் திசையெங்கும் போ...எந்த ஆசானும் தரமுடியாத ஆச்சர்யங்களை இக் கணங்கள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன.உன்னுள்ளே வாழும் அக்கலைஞன் மீண்டு எழுகிறான் பார்.மீண்டுமொருமுறை இது பற்றி எழுதுவது வாய்க்காது போகலாம் ப்ரியமே
நான் காண நினைத்த பெரு வெளிச்சத்தின் உன்னால் வாழமுடியுமாயிருக்கிறது.என்னால் தீர்மானிக்க முடியாது போன என் இளமை  போலன்றி உன் தீர்மானங்களில் சுதந்திரம் நிறைந்து கிடக்கிறது.என்னை நனைக்கட்டும் என நாளும் ஏங்கிய ஆதித்துமி உன் கேசக்கோட்டோடு வழிகிறது.என் பிரியமே எல்லைகள் நிறுவப்பட்ட ஆயுளில் தித்திப்பான இப்பொழுதுகளை இட்டு நிரப்பிக்கொள்.உன்னை சூழ்ந்துள்ள பெருவிருட்சங்களின் இனிமையான உன் பால்யத்தின் குறிப்புக்களை பொறித்து வை

என் ப்ரியமே மானுடர் யாருமேயில்லை உனை சூழ.நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி உன் மீதமுள்ள நாட்களை நிறுவிக்கொள்.புரண்டெழு குதி.பள்ளத்தாக்குகளெங்கும் உன் குழந்தைமையை அணைத்தபடி புரண்டெழு.நீ ஆண் என்றோ பெண் என்றோ விபரிக்க வேண்டியதில்லை ப்ரியமே
எப்பொழுதில் எதுவாக தோன்ற பிடிக்கிறதோஅதுவாய் இயங்கிக்கொள்.திருமணம் பற்றியோ என்ன குழந்தையை பிரசவிப்பதுஎன்றோ எந்தப்பேச்சுக்களின் வாடையும் சுமைபோல் உன்னை அழுத்தாதிருக்கட்டும் என ஆசீர்வதிக்கிறேன்.நீ என்பது நீ மட்டுடே என்ப்ரியமே.எதற்காயும் உனை தியாகிக்காதே.நீ என்பது நீமட்டுமே.அப்படியே இருந்துவிடு.

இதுபற்றி இன்னும் பேசவே ஆசையாய் இருக்கிறேன்.தீராக்காதலாய் இக்காட்சிகள் எனை தூண்டிக்கொண்டிருக்கின்றன.மொழிபெயர்ப்பு கவிதைகளை போல ஏதோ ஒரு ரகசியதை நோக்கி விரையத்தூண்டும் இக்கணங்கள்.

இயல்பான புன்னகை ஒன்றும் கூச்சமற்ற துயர அழுகை ஒன்றும் ஓரிடத்திலிருந்தே புறப்படுகின்றன.எனில் எப்புள்ளியில் இப்போது வாழ்கிறாய் நீ்??முன் இரவிலும் அதிகாலையிலும் பார் எத்தனை வர்ணப்பிரிகைகள்.வெளிகளில் தோன்றும் காற்றும் இக்கிளிகளின் பறத்தல்களும் எத்தனை முறைநிகழ்ந்தாலும் அத்தனை தடவையும் புதினமே...!பட்சிகளின் இறக்கைக்குள் சென்றுபார்.நேசிப்பின் மொழி அறிந்த அப்பறவையின் கதகதப்புத்தான் கருவறையை பிரதி பண்ணும்.அனுமதி்்்உன் ஆகாரத்தில் தானியங்களை அனுமதி்.அந்திமத்தின் நாட்களை போல் ஆரம்பத்தின் வழக்கங்களும் அவசியமே.

என் பிரியமே நாட்கள் மீளெழுவதில்லை நீ நன்கறிவாய்.அந்தி நாட்களில் நீ இசைக்கப்போகும் புல்லாங்குழல் கீதம் உன்னுடையதாய் மட்டுமே இருக்கட்டும் பிரியமே ஊற்றுக்களில் சுரக்கும் நேசத்தீர்த்தங்களை குடி,உனக்கான ராகங்களை நீ மட்டுமே தேடிக்கொள் உன்இஷ்ரப்படி.என் பிரிய சிநேகிதா இந்நாட்கள் பற்றி ஒரு குறிப்பெழுதி கற்றோடு விடுவாயா?
அழுது தீர்ந்துவிட்ட கடைசி நாளில் பேதக்கோபங்களற்று .உள்ளூறும் நெருப்புகளேதுமின்றி நான் நிதானமாவேன் .

அப்போது உன் குறிப்பு எனை இயக்கி அங்குகூட்டிப்போகும்
அதுவரை அங்கேயே தரித்திரு ப்ரியமே.

்்்அதிசயா்்்்

Monday, August 17, 2015

கடலாடிய கதைகள்

சொந்தங்களே அன்பு வணக்கம்...!
பயணங்கள் என்பது வெறும் களைப்பு சார்ந்ததில்லை அது அற்புதமான அனுபவத்தின் தூதன் என்று நம்புகிறீர்களா??இல்லையெனில் ஒருமுறை   நம்பியபடி சிறு பயணம் போய் வாருங்கள்.என் பல்கலை நண்பர்களுடன்  கிழக்கிலங்கையின் கடல்சார் இன்பங்களை துய்த்துக்கொண்டிருந்தோம்.
டலாடும் அனுபவங்கள் கிளர்ச்சிமயமானது.பொழுதொரு எழிலென தன்னை உடுத்திக்கொண்டிருக்கிரும் கடல் மடிக்குள் தான் எத்தனை  இன்பங்கள்.மீன்களோடும் கடற்கற்களோடும் கலந்திருந்தோம்.
கண்ணாடி போலொரு தண்ணீர் தேசத்தின் கால்களை கற்கள் பதம் பார்க்க நாங்கள் வலிமறந்து கடலாடினோம்.பின் மீண்டும் மற்றொலு கடலில் எங்கும் கண்டிராத குளிர்மையான நீரில் சிறு குழந்தைகள் போல் விழுந்து விழுந்து புரண்டுகொண்டிருந்தோம்.நம்புவீர்களா???அன்றே அங்கே சிலர் அதிதீவிரமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தோம் முதல்முதலில்.ஏதேதோ இராகங்களை மிக உல்லாசமாய் இசைத்தபடி  தோள்மீதும் மார் மீதும்  கடலில் உலவிக்கொண்டிருந்தோம்.
பெருத்த சந்தோஷம் நிறைந்த கொண்டாட்ட பயணம் அது.எப்போது நினைத்தாலும் என்றென்றைக்குமாய் கடலின் அடர்த்தி கொண்டு கனம் கூடிய நட்பின் அடர்த்தியில் கடலாடினோம்.



தொலைவுப்பயணங்களின் நினைவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்தப்பொழுதுகள்
என் ப்ரியத்தின் நண்பர்களே...!
நேற்றய நீர்ப்பயணம் முழுவதும் சுயாதீனமாய் மிதந்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்து இன்னும் பிரம்மித்துக்கொண்டிருக்கிறேன் இந்த சாலை முழுவதும்.

அந்தப்பாடல்களில் சுருதி இல்லை
சாலை உணவகங்களில் குளிரூட்டி இல்லை
ஆனாலும் கடல்போலவும் மலையை ஒத்ததுமான
விசாலமான குளிர்மையில் கிறங்கிக்கிடந்தோம்♪
மூழ்குவதும் பின் மாறிமாறி தாங்குவதுமாக உச்சி குளிந்தோம்.
உயரங்களில் ஏறி பின் நட்பில் கைகோர்த்து ஆழங்களில் சென்றிருந்தோம்.

ஆணென்றும் பெண்ணென்றும் யாதொன்றும் அறியாத நேசத்தில் நட்பு நட்பு என்று சொன்னபடி
அந்தப்பொழுதுகளை கொண்டாடிக்கொள்வோம்♪
தேவதைகளே எங்களை ஆசீர்வதியுங்கள் எல்லோரும் என்றென்றும்

வாழ்கவென♪♪

Monday, July 20, 2015

அற்புதங்கள் நிறைந்த குவளைகள்-இது நமக்கான சந்திப்பு

என் ப்ரியத்திற்குரியவனே....!
இந்தப்பயணங்கள் பற்றிய குறிப்புக்களில் உன்னை இந்த இனிப்பான கிறக்கம் தருகின்ற பானங்களோடு வரைந்து வைக்கப்போகிறேன்.இத்தனை தொலைவு நடந்து விட்டேன்.பின்னும் இளைப்பாறுதல் பற்றிய எந்த எண்ணமும் தோன்றாமலிருக்கிறது என்பதை தாண்டிய சுவாரஸ்யம் ஏதுமுண்டோ.எப்போதேனும் உண்டாகக்கூடிய இந்தப்பயணத்தில் என் கூட வரும் வழிப்போக்கனே...!பெறுமதி மிக்க இந்த வாழ்க்கையின் கொண்டாட்டமான பொழுதுகள் இன்னுமாய் நீளக்கடவது.

என் அபூர்வ பிரயாணியே..!
இந்த சாலை எங்கிலும் நான் அதிகமாக அவதானித்தது சிறு பையன்களையும், அவர்களை இலாவகமாய் உருட்டிச்செல்லும் அந்த வளைய சில்லுகளையும் தான்.இப்படித்தானே இந்த சாலைகள் அதன் திசைகளின் எங்களை இயல்பாய் கூட்டிப்போகிறது.

மூன்றாவது சாலை வளையும் போது தான் நீ வெறும் வழிப்போக்கனல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.அப்போது தான் அந்த இனிப்பான பூக்களை சொரியும் மரத்தடியில் அமர்ந்தபடி நேசங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பின்னாளில்  நீ கூட மென்மையான இதழ்களை கொண்ட மலர்தருவாக மாறியிருந்தாய் என்பதே உண்மை.பயணங்களில் இரவு பற்றிய பயங்களோ,சாத்தான்கனை விரட்டும் மந்திரங்கள் பற்றியோ அதிகமாய் நாங்கள் ஆலோசித்ததில்லை.எப்போதைக்குமான தேவ தேவன்களை உருவாக்கி அவர்களின் சிறகுகளை ஆராதித்தபடி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தோம்.

அறிவாயா ப்ரியமே....
அப்போதே நினைத்து விட்டேன் இனி உன்னை பிரயாணி என சொல்வதில்லையென.வாழ்தலை தண்டனையாக சுமந்த காலங்களிலிருந்து மீண்டு, இந்தப்பணயம் முழுவதுமாய் மிருதுவான வாழ்தல் எங்களின் கைகோர்த்து வருகிறது.இந்தப் பனிபொழுதுகளில் உன் கவிதைகளை நினைவுகூர்ந்து குளிர்காய்ந்து கொள்கிறேன்.நீயும் அப்படியேஅப்படித்தான்.
உண்மைதான் பெருத்த கனவு ஒன்றை சுமப்பது அதீத பாரமாகிறது.அதனால் தான் சிற்றெறும்பின் வெல்லக்கட்டிகள் போல் இனிப்பான சாத்தியமான குட்டிக்குட்டி கனவுகளை இந்த சாலை எங்கிலும் பின்னியபடி போகிறோம்.

ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் காட்டாறு போல நான் பாய்ந்தும் உருண்டும்போனேன்.இப்படியான பள்ளத்தாக்குகள் மென்மையாகவும் மிக விசாலமாகவும்  எங்களை இயக்குகிறது.முன்பெல்லாம் என் தோல்விகளுக்கு யாரேனும் இப்பள்ளத்தாக்குகளை உதாரணம் காட்டியிருந்தால் அத்தோல்வியை வெற்றியை காட்டிலும் பெரியதாய் கொண்டாடியிருப்பேன்.

இன்று இந்த சிகரத்தை மேவ வேண்டிய உயிர்ப்பை தந்தது அந்தப்பள்ளத்தாக்குகளே.என் பச்சைத்தோழியரோடு சேர்ந்து நானும் நீயும்எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார் .இந்த விருந்தின் இறுதியில் நிலா மட்டும் ஒளிர்கையில் மற்றொரு புகைப்படடெடுத்து இங்கேயே மாட்டிவிட்டுப்போவோம்.சந்தோஷங்களின் சாட்சியாய்.

இப்போது இந்த உச்சியில் இருந்து கீழே பார்க்கையில் அபத்தமேதுமின்றி நீயும் நானும் நேசமாய் விரல்பிடித்து வந்த காலங்கள் கோலமாய் விரிகின்றன.ஆணென்றோ பெண்ணென்றோ தோன்றாமல் எதுவாய் இருக்க ப்ரியப்பட்டோமோஅதுவாகவே நடந'து வந்தோம்.இங்கு விரசங்கள் எதுவுமேயின்றி தனியே நேசம் என்ற ஒன்றே எங்களை நடத்தி வந்தது.குதித்தோம் காற்றின் லயத்தோடு குதித்து நடனமாடினோம்.அட்சரங்களை தியாகம் செய்து விட்டோ ஏதேதோ பாடினோம்.போதை கொண்டவர்கள் போல..

என் ப்ரியத்தின் ப்ரியமே..!இந்த இரவில் நம் இருதயத்திடமாய்  பிராத்தனை என்று சொல்லிவைப்போம்.
என் ப்ரியத்திற்குரியவனே நம் நேசத்தின் மெதுமைக்குள் நம் கைகளை ஒன்றாய் ஏந்தியபடி  சொல்வோம்....


என் இருதயமே..........!அதீத சுதந்திர வீரும்பிகளான எங்களின் பின்னைய நாட்களில்பெருத்த தனிமையோ சலிப்போ தோன்றாதிருக்கட்டும்.இந்த சாரலின் வாசங்கள் நாசிகளில் நிறையும் போதெல்லாம்எங்கிருப்பினும்  எங்களுக்குஇப்பயணங்களை நினைவுபடுத்துவாயாக.இப்போது கூட வரும் இந்த அழகிய பாதச்சுவடுகள்என்றென்றைக்குமாய் பரிபூரண அழகுறட்டும்.சூழ்ந்திருக்கும் இந்த மலைகள் சாட்சியாய்எங்களை ஆசீர்வதிப்பாயாக இதயமே...!


Wednesday, July 8, 2015

சுஜாதாவை அணுகல்-சரித்திரத்தின் சபதத்தோடு இரு காதல்



பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்!
சுஜாதாவை முதல் முதலில் அணுகியிருக்கிறேன் இனி மெல்ல அவர் வார்த்தைகளின் விரல் பிடித்து அழகாய் அறிந்து கொள்வேன்.
"சுஜாதா" இந்த பெயருக்கான நேசிப்பு வட்டம் மிக விசாலமானது.ஒவ்வொருவரும் தனக்குரியவராக கொண்டாடும் இந்த ஆளுமையை அனுபவிக்க வாய்த்தஅவரது முதல் நூல் "ரத்தம் ஒரே நிறம்"
இது விமர்சனம் அல்ல என் விளக்கம் மட்டுமே.


அவரது இரண்டு சரித்தில நாவல்களில் ஒன்று இது.ஆங்கிலேய ஆட்சியில் நிஜமாய் குருதி பீறிட்ட "சிப்பாய் கலகத்தை"அதாவது ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்த இந்திய சிப்பாய்களின் கலக வரலாற்றை ஆதாரமாக்கி கூடவே  வைராக்கியமே நிறமாகி நினைவாகி ஓடும் முத்துக்குமரன் எனும் இரும்புத் தமிழனை கதையிடை செலுத்தி ,வெள்ளெயன் மீது அவன் கொண்டதீரா வெறுப்பையும் முறுக்கேறி புடைத்த புயங்களையும் உந்துசக்தியாக்கி விறுவிறுப்பு வேகத்துடன் பின்னப்பட்டது தான் இந்த சரித்திர நாவல்.

பக்கங்களை பாய்ந்து பறந்து புரட்டா வண்ணம் எனை போல் சாமானியனையும் நிதானமாக ஓரு காதல் தைத்துப் போகிறது.தந்தையை கொன்ற வெள்ளெக்கார துரையை கொன்றே தீருவேன் என விதி செய்த சிலம்பக்காரன் முத்துவிற்கும் ,வித்தையோடு வசீகரமும் சரிவிகிதம் நிரம்பிய சொன்னால் இனிக்கும் பூஞ்சோலைக்குமாய் ஒரு காதல்.இந்தக் காதல் தான் அவனை தப்புவித்து பல தடவை ஆயுள; நீட்டியது.இறுகிய வரப்பின் மேல் ஈரம் குழைத்து ஓடும் சிறுவாணி போல்.

இன்னொரு காதல். அதை இப்படிச்சொல்வேன். இப்போதுதான் விரிந்த மல்லிகையும் அதன் இதழ் ஓரம் கசியும் பியானோ இசையும் போல.இது சீமாட்டி எமிலி மற்றும் கப்டன் ஆஷ்லி வரைந்த காதல்.மிக மிருதுவாய் ஆஷ்லி இழைத்த காதல்.இந்த மென்மைகக்குள் ஒட்டிக்கொண்ட தாமதத்தால்  கேசேராது தொலைவான துயரக்காதல்.


சுவாரஸ்யம் என்னவென்றால்எமிலி சிறைப்பட்ட தங்கச்சிறைக்கூடம் மக்கின்ஸி அதாவது முத்து கொல்லத்துடிக்கம் துரை.பலதடவை முத்துவை துரையிடமிருந்து காப்பாற்றியது எமிலியை மென்மையாய் ஸ்நேகித்த ஆஷ்லி.

சிப்பாய் கலவரத்தை அடக்க சென்னையிலிருந்து புறப்பட்ட ஆங்கிலேய மற்றும்  ஆங்கிலோ இந்தியப்படைகள். ஈற்றில் வரலாற்றின் சுவரோரம் முற்றுகையிடப்படுகையில் ஆங்கிலேய ரத்தம் ஆறானது என்றால் இந்தியக்குருதியும மற்றொரு புனலாகி விரிகிறது.முத்துவின் சபதம் வெல்கிறது.துரை கொல்லப்படுகிறான்.பூங்சோலையின் காதல் தனிமையின் பெரு விசும்பாய் கனக்கிறது முத்துவும் மற்றொரு பிணமாய் சபதத்தின் முடிவருகில் மாண்டுபோனான்.

வரலாற்றின் குரூரங்கள், வழி நெடுகிலும் கலகமாய் கண்ணீரமய் நீள்கிறது.யார் குருதி என்று அறியா அடத்தியான ரத்தம் இன்னும் எங்கள் கால்களில் பிசுபிசுக்கிறது.அது கண்டங்கள் தாண்டி நிலங்களை ஊடறுத்து தேசத்தின் சாலைகள் எங்கிலும் அதற்கென்ற  பிரத்தியேக கதைகளுடன்  வடிந்தபடிதான்இருக்கிறது.எதுவாயின் மறுப்பின்றி ரத்தம் ஒரே நிறம்.

சுஜாதாவை என்னுள் அனுபவித்த தருணம்  மீண்டும் இதமாய் இறுக்கமாய் தொடரும் அந்த  பியானோ மல்லிகை வாசம் தான்.எமிலி என்னும் அந்த வாசம் ஆஷ்லியை தவிப்போடு இறுக அணைக்கிறது.எங்கெங்கோ அலைந்து வந்த  நதியொன்னு நீக்கமற நிரந்தரமாய் சமுத்திரத்துள் அடங்குவது போலொரு அணைப்பு.இங்கு எமிலி மாற்றான் மனையாள் ஆன போதும் ஒரு வாசகிறாய் எனக்குள் முகம் சுழிக்கும் எண்ணமோ இந்த   கண்ணியக்காவலாளியிடம் தோன்றவில்லை.

நானும் அவர்களோடு சேர்ந்து அந்த அணைப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன்.
இந்த நாவலின் காட்சிப்புலத்தின் முற்பகுதியின் சாயலை இன்று உணர்ந்தேன் மதராசப்பட்டினம் திரைப்படைப்பில்.



நன்றிகளுடன்
-அதிசயா-

Monday, June 29, 2015

ஸ்நேக ஸ்பரிசம்


என் அதிகாலை துயிலொன்றின்
கதகதப்பு நீ ப்ரியமே-இனி
உனை போர்த்தபடியே 
இந்த கனவுகள் தொடரட்டும்
இன்று காலைக்கோப்பி வேண்டாம்்
கிண்ணங்களில் நிரம்பும் ஸ்நேக ஸ்பரிசம் போதும்


ப்ரியமே
எப்போதும; ஓர் அசரீரி போலவே  நீஆரம்பிக்கிறாய்
ஈற்றில் காதோரம் பெரும்கடலாய் நிறைந்து கொள்கிறாய்
காதல் இன்னும் ஊற்று அதில்
கரைந்து போவோம்
வேறு எப்படி கரையேறுவது♪♪


உன்
சிறு தடம் பற்றி இடம் சேருவேன்
உயிர் தவம் போல உனில் மீளுவேன்
குழல் நீயாகி இசை ஊறுவேன்_முதல்
பனிபோல உனை மூடுவேன்
இனி மொழி குழைந்தோடஉனை பேசுவேன்♪♪
அந்த நிர்மலப்பின்னிரவே
காதோரம் தேனடை பூசிடவா..
மெய் தழுவிய சிறுமூச்சே
உயிர்க் காட்டில் ஸ்நேகங்கள் மூட்டியே வா♪


பேரன்பே
மற்றொரு மழைக்கொத்தாய் என்வானம் இறங்கினாய்்்்
ப்ரியமே!!!!!
இம் மழைவெளியில் வடியும்
உன் நுனி விரல் துளிகளில் வழுகுதல் அன்றி
பெருமோட்சம் ஏதுமுண்டோ
ஸ்பரிசங்கள் ஊற்றும் அத்துளிகளின்
கதகதப்பில்
என் ஜென்மம் உடைந்தொழுக
மெதுவாய் மெதுவாய் கரையேனோ♪♪♪♪


Friday, August 1, 2014

கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும்



வணக்கம் சொந்தங்களே.!

பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது.

திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான்  இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல் தலைமுறை.ஆரத்தழுவி அந்தநாள் கதைபேசி முற்றத்து பிலாமரத்தில் பழம் புடுங்கி இன்னும் நாச்சார வீட்டில் அந்த நிலவுகளை தரிசித்துக்கொண்டிருக்கிறது.இது நம்மவர் கதை.

எனில் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்த இரண்டாம் தலைமுறை அதாவது இன்றையையும் முந்தையதைக்கும் இடைப்பட்டதான பொது தலைமுறை எப்படி???.குளிர்தேசத்தில; அடைகாத்த குஞ்சுகளை கொண்டு தாய்பறவையிடம் வரும் பிள்ளை பறவை போன்ற  மனநிலை.ஆனால் .இருதலை கொள்ளி எறும்பு நிலை.முற்றிலும் நாகரிகமெனப்படும் அவசரங்களோடும் அதீத அறிவோடும் இருக்கும்தொழில்நுட்பக்குழந்தைகளுக்கும் அரைத்து வைத்த காரக்குழம்போடு ம் அதிகாலை குளியலிடும் நம் பாட்டிகளுக்கும் இடையில் இங்கு வந்தபின் சமரசம் உண்டாக்குவதில் சோர்ந்து போகின்றனர்.பல தடவைகளில் தோற்றும்போகின்றனர்.
பனிதேசத்து பிள்ளைகளுக்கு இந்த மிதமிஞ்சிய வெயில் ,இறுகஅணைக்கும் மனித சூடுகள்,மீண்டும் மீண்டும் கேட்கும் விசாரிப்புக்கள்,”குஞ்சு,ராசா,பிள்ள,ராசாத்தி”போன்றகொஞ்சல்கள்,சுக்குக்கோப்பி எல்லாம் பல சமயங்களில் எரிச்சல் மூட்டிவிடுகிறது இந்த வரண்ட பூமியின் வெயிலை போலவே.

தாயகத்தின் நடைமுறைச்சந்நதியின் பிள்ளைகள் எது நிஐம் என்று புரியாத குழப்பத்தில்.ஈழத்தின் வளர்ப்பு முறை இங்கு வாய்த்த வசதிகள்,இங்கு பயன்பாட்டிலுள்ள நியாயங்கள் தரம்கெட்டதா என தலையைப்பிய்த்து பார்க்கிறார்கள்.வயதொத்த இரு தேசத்தின் பிள்ளைகளுக்கிடையான உரையாடல்கள் நாளாக நாளாக நெருக்கத்தை இளக்கிறது.ஏதோவொரு தாழ்வுச்சிக்கலையும் குற்ற உணர்வையும் நாசூக்காக விதைக்கிறது.நம்மவர் மனதில் தாயகக்கனவுகள் அமிழ்ந்து போக பனித்தேசம் பற்றியதான அதீத மோகம் மேலெழுகிறது.இங்கு பிறந்தது விதியின் சாபமென எண்ணிக்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தை  விடவும’ அந்தரத்தில் இருந்து கொண்டு ஏதோ ஒரு மையம் பற்றி ஊசலாடுவது தாயகத்தின் நடுத்தட்டு இளையோரே.இவர்கள் தான் இருவகைப்பட்ட கண்ணியத்தின் இடைவெளிகளில் மாட்டிக்கொண்டு முளிக்கும் துர்ப்பாக்கியர்கள்.
மிச்சமிருக்கின்ற தாயகத்தின் சுவடுகளையேனும் காப்பாற்றி அதில் கரையேற வேண்டுமென்ற தீராவேசம் ஒருபுறம்.நாமென்ன நாகரிகத்திலும் அறிவிலும் சளைத்தவர்களா என்ற கோபம் மறுபுறம் இவர்களிடம்.எனில் என்ன செய்கிறார்கள்.??

உடனடிச் சமாதானங்களுக்கு வர இவர்களால் முடிவதில்லை.காத்திரமான பின்னணிகொண்ட குடும்பத்தின் இளையவாரிசுகளென கொஞ்சப்படும் குளிர்தேசத்து பிள்ளைகளின் ஆடைஅலங்காரங்கள் ..உணவுமுறை….இலகுவில் வரமறுக்கும் தாய்மொழி,பல்தேசியக்கம்பனி வாசல்களிலும் நாகரிக சந்தைத்தொகுதிகளிலும் என பிரத்தியேகமா அவர்கள் பேசிக்கொள்ளும் தமிழ் அல்லாத மாற்று மொழிகள் இவையெல்லாம் தாயகத்தின் இளையோரிடம் ஏதொவொரு வெறுப்புணர்வை கிளறிப்போவது தாயகத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் நான் கண்ட உண்மை.

ஆக கோடைவிடுமுறை காலத்திலும் சரி எப்போதேனும் சரி தாயகம் வரும் நம் சொந்தங்களுக்கு இனிப்புக்களை மட்டுமே எப்போதும் பரிசளிக்க விரும்புகிறோம்.எத்தேசம் வாழ்ந்தாலும் பூர்வீகம்  நம் ஈழம் தானே.நட்சத்திரங்களும் வான்பரப்பும் வேறுபட்டாலும் கூரையும் நிலவும் ஒன்று தானே.

இத்தேசம் இப்போது காடும் கரம்பையுமாய் இருந்தாலும் நேசங்களை அணைக்கும் போதெல்லாம்  நெஞ்சுருகி மாரி பொழிகிறது.தூரதேசத்தின் சொந்தங்களே இவ்விடமிருந்து உம் மகவுக்கு ஒப்பாகி நானும் ஓர் கோரிக்கை வைக்கிறேன்.நீ
ங்கள் உழுத புழுதிக்காடுகளில் தான் எங்களை இளமையை இன்னும் விதைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்கள் பொழுதுபோக்கு விடுமுறை எல்லாமே இப்போது வரைக்கும் இந்த வெயில் தேசத்தின் எல்லைக்குள் தான்.இந்தக்கைகளுக்கு தட்டச்சு செய்யவும் தெரியும் தழும்புகள் தாங்கவும் அறியும்.பொருளாதாரம் நெருக்க நைந்து நைந்து நாகரீக ஒட்டத்தில்  சரிநிகராய் ஓட முனைகிறோம் கண்ணியங்களோடு.இந்த வஞ்சனை அரசியலிலும் நீங்கள் வாழ முடியாது என்று உதறி ஓடிய தீவினுள் கௌரவமான வாழ்வொன்றிற்று உரிமை கோரவே சாகமல் போராடுகிறோம்,இன்னும் விருந்தாளிகளாய் மட்டுமே நீங்கள் வரத்துணியும் இக்காடுகளில் நேர்ந்துவிட்டதை போல் வாழ்கிறோம்கஞ்சியிட்டதை போன்ற டொலர் மடிப்புகளை விட நைந்து கசங்கிய ருபாக்கள் சிலதருயங்களில் எம்மை கௌரவமாய் நடத்துகின’’றன.இப்படியாய் தான் ஈழத்தின் இளையோரின் தன்னிலை விளக்கமிருக்கும்.

ஆக ஒருதாயின் இருமகவுகளுக்கிடையான ஈடேற்றத்தையும் புரிதலையும் பற்றியே இத்தருணத்தில் பேசுகிறேன்.இருபதுகளிலன் ஆரம்பத்தில் வாழும் ஒரு சராசரி அவதானியாய் கேட்டுக்கொள்வது யாதெனில் புலம்பெயர் தேசத்தின் பெற்றோரேஇங்கு வருவதாயினும் இல்லையெனினும் ஈழம் பற்றிய கண்ணியங்கள் இங்கிருக்கும் நடைமுறை நிஜங்கள்,நடந்தேறிய கொடுரக்கதைகள்.இதன் காலநிலை பாரம்பரியம் அனைத்தையும் செல்ல நாய்க்கு பிஸ்கட் வாங்கும் கடை ஓரங்களில் வைத்தேனும் சொல்லுங்கள்.அழகிய கற்பிதங்களை பெற்றுக்கொள்ளவும் உருகும் பாசங்களில் ஓட்டிக்கொள்ளவுமே வெள்ளை மனங்கள் விரும்பும்.எம் மொழிபெயர்ப்புகள் உம் தேசம் வருவது தாமதமாகும்.அதற்காயேனும் நீங்கள் சொல்லுங்கள்.

இன்னும் திண்ணை உடைக்காத வீடுகளிலும்,முற்றத்த மர நிழலிலும் பேராண்டிக்காய் பலகாரம் சுடும் அப்பத்தாக்களும் மச்சானின் வருகைக்காய் மருதாணி போட்டுக்கொண்ட முறைப்பெண்களும் மஞ்சள்பூவரசின் மங்கலங்களும் நாடித்துடிப்போடு இங்கே சீவித்துக்கொண்டேயிருக்கின்றன.


ப்ரியங்களுடன்
அ-தி-ச-யா



Related Posts Plugin for WordPress, Blogger...