உங்களின் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகளை விடையாக்கி சேமங்களிற்காக இறைவனை வேண்டி நிற்கிறேன்.
வாருங்கள் பதிவிற்குள் போவோம்.
ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்!!!
நீண்ட நேரங்களாய் விசைப்பலகை மீது விரல் பரப்பி இந்த விடயம் பற்றிப்பேசுவது சரியா என என்னையே கேட்டு வேண்டாம் விட்டுவிடுவோம் என விலகிய பின்னும்,நீண்ட காலமாய் என்னுள்நிரவி நிரவி மேலிட்ட இந்த உணர்வு குழப்பத்திற்கு முற்றிட விரும்பியதால் இதைப் பேசத்துணிந்தேன்.
வாழ்க்கையின் பருவங்களின் லேசாக நரை விழத்தொடங்கும் ஐம்பது வயதின் இரு எல்லைகளிறடகும் இடை நின்று,இப்பதிவு இடப்படுகிறது.இங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது.
நாற்பதுகளை மெதுவாகக்கடக்கத்தொடங்கும் பருவங்களிலிருந்து ஐம்பதுதுகளின் நடத்தல்களில் தான் இப் பிறழ்வுகளை கேட்டதுண்டு.களைக்க களைக்க கற்று,இழைக்க இழைக்க ஓடி,நுரைக்க நுரைக்க காதல் செய்து இளமை நகர்கிறது..சில பொழுதில் முரண்டு பிடித்து
சில தருணங்களில் இயல்பாய் வளைந்து கொடுத்து,சில சமயங்களில் ஆக்ரோஷங்களுக்கு அடங்கி இப்படி பல விதமாய் இல்லறமோ துறவறமோ இரண்டில் ஒன்றிற்று ஊடாக எம்மைத்திருப்பிக்கொள்கிறோம்.இங்கு துறவு பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.
இல்லற இணைவின் முலமிடல் கூட ஒரு வகையில் ஒப்பந்தமே.இதற்குள் தம்மை கட்டுப்படுத்தி,தங்கள் வாழ்வின் நகர்தலின் வெளிப்பாடாக,வாழ்தலின் அர்த்மாக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள்.
அதன் பின் வாழ்கையின் பின்னே ஓடியே ஆக வேண்டும்.இந்த ஓடுதல்கள் விறுவிறுப்பாயும்,விரைவாயும் ஆரம்பித்து இலக்குகள் விரட்டிப்பிடிக்கப்படுகின்றன்.
மெதுவாக நாற்பதுகளின் இறுதியில் அடைவோ அழிவோ இரண்டில் ஒரு முடிவிற்கான அடித்தளம் சிறப்பாகவே இடப்பட்டிருக்கும்.
ஐம்பதுகளில் நுழைந்ததும் ஒரு அமைதி தேவைப்படுகிறது.வெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.இங்கு தான் சட்டென நுழைந்து கொள்கிறது இன்னொரு நேசம்.இது தோன்ற நீண்ட நாள் அறிமுகம் அவசியப்படுவதாய் தெரியவில்லை.வர்க்க வேறுபாடு மறந்து,தராதரங்கள் தாண்டி,வயதுகளை கூட மறந்து இது விரைவாய் தொற்றிக்கொள்கிறது.இதை காதல் என்று மேற்கோளிட மனம் ஏனோ ஒப்பவில்லை.இந்த நேசங்கள் விலக்கப்பட வேண்டியவை...இது தவறானது என வாதிடவில்லை.ஆனால் இந்த நெருக்கங்களில் ஏற்படும் வரம்பு மீறுதல்கள் தான் அருவருப்பிற்குரியது.கண்டிக்கப்படவேண்டியது.
நான் கற்றவற்றின் அடிப்படையில் இந்த 50 வயதுகளின் சாயலும் நடத்துகைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவே மாறுபட்டது.உடலியல் ரீதியாக பெண் பல மாறுதல்களுக்கு முகம் கொடுக்கும்படி இயற்கையால் நிர்பந்திக்கப்படுகிறாள்.இதன் விளைவாக இயல்பான ஒரு மனச்சோர்வு, விரக்தி உடல் நோய்களுடன் கூடவே பலவீனமும் தொற்றிககொள்கின்றன.ஆனால் ஆண்கள் அத்தன்மையை அடைய மிக நீண்ட நாள் செல்லும்.இது அறியப்பட்ட போதும் புரிதல்கள் தம்பதிகளிடம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.பெண்களுக்கு மனோரீதியாக பெரியதொரு ஆதரவும் பலப்படுத்தலும் இப்போது தான் தேவைப்படுகிறது.அதுவும் தம் துணையிடமிருந்து கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
நிலைமையோ பல சமயங்களில் சதிசெய்து சிரிக்கிறது.ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்.அதிலும் வேதனை எதுவென்றால் இளவயதுப்பெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.திருமண வயதை அடைந்த பிள்ளைகளை தம் வீட்டில் வைத்தபடி இத்தகைய தந்தையர் ,ஆண்கள் சபலப்பட்டுகிறார்கள்.
வாழ்க்கை,வழுக்கை,வருத்தம் இத்தனையையுமே ரசித்து ,திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தங்களுக்கு உரம் சேர்க்க வேண்டிய வயதில் இப்படித் திரிவுபட்டு போகும் இவர்களை கண்டால்,கேட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபமும்,முடிந்துவிடாமல் நீளும் கேள்விகளுமான் நான் என்னுள் குழம்பி குழம்பி இறுகியதுண்டு.இத்தனை நாளாய் நிழல் தந்து ,நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.??!!மற்றொரு நிழல் தேடுவது முறையா??ஃபின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்.
"கவனம்!
இன்னொரு காதல் வரும்
புன்னகை வரை மட்டும் போ...!
புடவை தொடாதே"
-வைரமுத்து-
இது யதார்த்தமான கோரிக்கை.சபலம் கைகுலுக்கி சந்தித்து போகும்.விட்டுவிடுங்கள் போகட்டும்.ஆனால் பல பேர் காதுகள் செவிடுகள் போலல்லாவா வெளிக்காட்டப்படுகின்றன????
ஒவ்வொரு மனிதனுமே சுகம் மட்டும் வாழ்வு என நினைத்தால் அழகான குடும்ப அமைப்புகள் எவ்வாறு நிலைக்கும்??எத்தனை சிறுவர்களின் மனம் கிலேசப்படும்???எத்தனை பேரிற்கு வாழ்தல் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை இழப்புகள் விதை கொள்ளும்????
இட்சியத்தை துரத்தி ஓடியது போதும் என்ற எண்ணம் முளைவிடுகிறதா.???
"சாய்வுநாற்காலியும் சில காகிதங்களும் கை வசம் கொள்ளுங்கள்.
அணில்பிள்ளைக்கு தலைதடவுங்கள்.!
வாழ்கையிடம் சுகம் விசாரியுங்கள்..!
அன்று பார்க்க மறந்த பூக்களிடமாய் மண்டியிடுங்கள்.!
ரசியுங்கள்..!!!
துணையிடமாய் மனம்விட்டு சிரியுங்கள்.!
சின்ன மகளின் செருப்பிற்குள் கால் நுழைத்துப்பாருங்கள்..!
எத்தனை முடிக்குள் முதுமை நுழைந்து விட்டது
முகவரி கேளுங்கள்...!
பகலிடமாய் சிரித்துப்பேசுங்கள்..
நலிவு கூட நவரசமாய் சுகிக்கும்" !!!!!
நான் அதிசயா.சிறியவள் சில சமயங்களில் கடிகாரம் பார்பதிலும் தடுமாறுபவள்.இந்தப் பதிவுலகில் எத்தனையோ கற்றறிந்தவர்கள்,பெரியோர்கள்,புலவர்கள்,அறியப்பட்டவர்கள் என எத்தகையோ பெருந்தகைகள் உள்ளீர்கள்.என் கருத்துகளில் தவறிருப்பின் பொறுத்தருள்க.நெடுநானாய் பூட்டி தைத்த விடயம் ஒன்றை என் அன்பான சொந்தங்களிடம் மனம் திறந்ததில் ஆறுதல்.சொந்தம் என்று வெறுமனே சொல்லின் சுதிக்காய் கூறவில்லை.முகம் தெரிவதில்லையாயினும் மனம் திறந்து தான் சொல்கிறேன்.இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.
அன்புடன்
-அதிசயா-
















