Thursday, March 3, 2016

அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்...!

அனன்யா உன்பாதங்களை என் மடிமீது ஏங்திக்கொள்கிறேன். இந்த மென்மைகளுடனே இப்பொழுதை கடந்து விடுவேன்.அனன்யா எனக்கொரு காதல் இருந்தது.அது இன்னும் ஒரு பாடலை போல நினைவிருக்கிறது.அது ஒரு முரண்காதல் என்று நீ சொல்லமாட்டாய்.எதைப்பற்றிய நினைவுகளுமற்று வெறும் காதலால் இயங்கிக்கொண்டிருந்தேன்.அனன்யா நானாய் மடித்துக்கொண்ட சிறகுகளை வெகுதூரம் தாண்டி விரிக்க துணிந்த காலம் அது.இப்போது  சிறகுகளை பற்றி நினைக்கவே பதறுகிறேன்.அனன்யா இந்தப்பொன் பாதங்களை ஒரு தடவை முத்தமிட்டு கொள்வேன்.அனன்யா காதல் கொள்வதை தீட்டு என்று நினைத்த பதின்ம வயதுகளை போல மீண்டும் நேசம் துறந்த ஏகாந்தத்திற்குள் வாழும்படி என்னையே சபித்துக்கொண்டவன் நான் அனன்யா.

ஆனாலும் அந்த ஏகாந்தமே எனக்கு சுதந்திரம் என்று கருதினேன்.என்றேனும் ஜன்னல் அருகில் நின்னறபடி நானாய் விடைகொடுத்த அந்த நேசத்திற்காய் கற்பனையில் கையசைத்துக்கலங்கியிருக்கிறேன்.அனன்யா அறியாவா? என் இத்தனை இறுக்கங்களின் பின் விட்டுப்போன சாரல் ஒன்று இருந்த்து என்பதை??பின்னாளில் ஏதேதோ கடமைகள் இலட்சியங்கள் முகமூடிகள் பந்தங்கள் என்றான பயணங்ளில் இப்போது குற்றவாளியாய் பரிதாபத்திற்குரியவனாய் எனை காண்கிறேன்.யாராலும் தேற்றிவிட முடியாத என் அழுகைகளை உன் ஸ்பரிசம் ஒன்றே குணமாக்கும் என்பதை அறிவாய்.

அனன்யா ஆறுதலளிப்பவளே என் மீது பரிதாபம் கொள்ளமாட்டாய் என்று இப்போதும் நினைக்கிறேன். வாழ்வென்பது பயணமே.உள்ளே ஆழ்ந்த அமைதியை வளர்த்துக்கொண்டு இந்த உலகெங்கும் பயணிக்க வேண்டும்.காற்றுப்போல..அறியாதமுகங்கள்..யாருமற்ற தெருக்கள் காட்டுப்பாதைகள் என நிமிடங்கள் எல்லாம் துருதுரு என்று இயங்கவேண்டும்..ஆனால் அனன்யா ஒரு குளம் போல நீண்ட நேரமாய் இங்கே தான் தேங்கியிருக்கிறேன்.பாசிமூடி வெளிச்சங்களை மறந்த குளம் போல...அதுவே எனக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறது.அனன்யா என்அனன்யா கேள் இதுவல்ல நான் என்று உரக்கக்கத்த வேண்டும் அன்ன்யா.

உனை மூத்தவளாய் பெற்றிராத உன் அன்னையின்  இரக்கத்திற்காய் கடவுளுக்கு நன்றி.மூத்த மகனின்..மகளின்..சாலைகள் இளையவர்களை காட்டிலும் கடினமானது என்பதை அறிந்து கொள்.உனை மூத்தவளாய் பெற்றிருந்தால் இத்தனை மணிகளாய் நீ என்னை சகித்திருக்கமாட்டாய். மூத்தவர்களின் அலாரங்களாய் அம்மாவின் முத்தங்களாலும் கண்ணீராலும் ஆனது.நீ இரக்கமானவள்.இந்த வழிப்போக்கனின் விசும்பல்களை கவிதை போலல்லவாகேட்டுக்கொண்டிருக்கிறாய். மீண்டும் எப்போது  காண்பேன் அனன்யா??ஆதலால் தான் இத்தனை இறுக்கமாய் உன் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்.அனன்யா பரிசுத்தமான உன் ப்ரியங்களை காட்டிலும் வேறெந்த எண்ணமும் என் மனதில் இல்லை .ஆதலால் நீ நெற்றிவியர்த்து நகங்களை கடித்தபடி எந்தப் பொய்களும் சொல்லவேண்டியிருக்காது அப்பாவிடம்.உன்னை இப்படி ஆசுவாசமாய் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.அனன்யா....!

 



-அதிசயா-




No comments:

Post a Comment