Friday, May 18, 2012

அவள் இன்னும் இருக்கிறாள்......!

தூரத்தில் கட்டி வைத்த மரண வாடை ஒன்று
நேற்றிரவு பலமாய் என் சித்தம் கீறிப்போனது..!
சுயதணிக்கை செய்தும்
சிற்றறைகளை நிரப்பி சுவாசத்தை எரித்துப்போனது.,
நான் கண்டேன் அவளை!
இதுவரை அவள் காயங்களை தொட்டுப்பார்த்தில்லை,
ஆனால் இரவுகளில் ஆழமாய் வலித்துப்போகிறது..,

வெளிகளில் தான் தனித்திருக்கிறாள் அவள்
ஏதோ ஒர் வெளிச்சம் தேடி..
தேச புயல் ஒன்று வீசிய போது இவ்விடம் வந்ததாய் ஞாபகமாம்....

'வீடு எங்கே'? நான் கேட்டேன்,
தெருவே களவு போய்விட்டதாம்-ஆனால்
சிரிக்கிறாள்..!
அது வேதனைச்சிரிப்பு.!
கடந்து போகும் காற்றின்
இரத்த நெடி தான் சொன்னது-அவள் இன்னும் இருக்கிறாள் என்று....


அவள் பெற்றவன்
முட்டி முட்டி இறந்து போனானாம் அவள் மார்பருகில்.!
அவளை உற்றவன்
தட்டி தட்டி தேய்ந்து போனானாம் முள்ளிவேலி முடிச்சுக்களை.!


அவள் இன்னும் இருக்கிறாள்.!
நிர்வாண மௌனங்களை கக்கிக் கொண்டு,
பிணங்களின் நிறை மாத கர்ப்பிணியாய்;.,
பாதி உயிர் வற்றிவிட்ட வெளிதனிலே-ஏதோ
ஒர் வெளிச்சத்தை தேடி..

நிலவு வெளிச்சத்தில் ஓடுகிறாள்;-வைத்துப்போன
வரை படத்தை தேடி..
முகத்தை மட்டும் என்னிடமிருந்து மறைத்து விடுகிறாள்,
என்மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாய்,
அவள் இன்னும் இருக்கிறாள்
முச்சு விடும் பிணமாய்....!
தீ தின்ற தென்றலாய்..!

அதோ வருகிறார்கள் அவள்
நிலவுகளை எரிப்பதற்காய்..!




(முடியவில்லை,,
நான் நினைத்ததை முழுதாய் சொல்ல.,
இப்படியாவது சொல்ல முடிந்தது மகிழ்ச்சி.!)
.

12 comments:

  1. ஆழமான வலியை இறக்கி வைக்கும் வரிகள் .. வார்த்தைகளை நன்கு பிரயோகிக்கிறீர்கள்

    ReplyDelete
  2. நன்றி மதி அண்ணா...

    ReplyDelete
  3. உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
    நினைப்பதையெல்லாம் வெளியில் சொல்லிட முடியாது சகோதரி.

    ReplyDelete
  4. சித்தாரா அக்காவின் வருகை மிக்க மகிழ்ச்சி...உண்மை தானக்கா..நன்றிகள்..:)

    ReplyDelete
  5. ஃஃஃஃகடந்து போகும் காற்றின்
    இரத்த நெடி தான் சொன்னது-அவள் இன்னும் இருக்கிறாள் என்றுஃஃஃஃ

    ஒரு பிடி மண் மட்டுமே
    உன் மேல் போட்ட போதிலும்
    நீ இன்னும் இருப்பதாகவே
    என் மனம் சொல்கிறது

    ReplyDelete
  6. சுதாண்ணா உணர்வுகள் உயிரோடு இருக்கும் வரை சில நெருக்கமானவர்களின் நிரந்தர பிரிவுகள் கூட இன்மையாக தெரிவதில்லை தான்...
    வருகைக்கு நன்றி அண்ணா....

    ReplyDelete
  7. அதிசயா....வணக்கம்.வந்தேன்.ஆரம்பப் பதிவுகளிலேயே எழுத்துக்கள் கவர்கின்றன.உணர்வுகள் தடுமாற வைக்கிறது.கைக்குள் திணித்து வியர்வையாய் பிதுங்கும் வார்த்தைகளின் பிரசவிப்பு.அசத்துங்கள்.வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. வணக்கம்.மிக்க மிக்க நன்றி அக்கா..அத்தனை பிரசவிப்புகளும் நிச்சயமாய் நினைவுக்குழந்தையாய் உங்கள் வாசல் வரும்.தலை தடவிப் போங்கள்....

    ReplyDelete