Saturday, June 30, 2012

காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

உறவுகளுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்.
நலம் தானே....?
     சில நாட்கள் இடைவெளியின் பின்பு மீண்டும் ஓர் அனுபவப்பகிர்வோடு சொந்தங்களின் விழிகளைக்கடப்பது மிகவே மகிழ்வு.

     இந்தப்பதிவு உணர்வு நிலை நிற்பதா அறிவுவழி சார்ந்ததா என்ற வினா எனக்கு சற்று தடுமாற்றத்தை உண்டுபண்ணிய போதும்,உணர்வுகளால் குமைந்து குமைந்து அறிவால் நிறைந்த முடிவு என்பதே உண்மை.

  
                      "நண்பர்கள் இருந்தால் நரகத்திலும் வாழப்பிடிக்கும்"
                                                                                                           -வைரமுத்து-
     
     இது தான் நட்பின் அடர்த்தி. நரகத்தின் நெருப்பு கூட நட்பின் நெருக்கத்தில் நிறைவாகிப்போகின்றது.பொதுவாக எடுத்த எடுப்பில் ஒருவரை நண்பர் என்று வரித்துக்கொள்வதிலும் பார்க்க,சில கால அவகாசங்களின் பின்பு ஒரு நபரை நண்பன் என்று மேற்கோளிடுவதே சாலச்சிறந்தது.
     இங்கு பேசப்படவுள்ள ஆண்-பெண் நட்பு பற்றிய விடயங்கள் வித்யாசமானது.விபரீதமானதும் கூட.இத்தகைய நண்பர்களின் தெரிவானது ஒத்த விருப்பு வெறுப்புகள்,ஏகமான ரசனைத்தன்மைகள்,கலப்படமற்ற பாசம் இவற்றின் விளைவால்  உயிர்கொள்கிறது.இவ்வாறு மனம் விரும்பி சுயாதீனத்தன்மைகளின் சுதந்திரத்தில் நாம் உருவாக்கிக் கொண்ட நட்புப்பந்தத்திடம் முழுதாய் வெளிப்படையாய் இருப்போம்,எங்கள் தவிப்புகளில் அவர்கள் தலை தடவுவதும் அவர்கள்வெற்றிகளில் நாம் சிலிர்ப்பதுமாய் இந்த உறவுநிலை தணிக்கை அற்றதாக விரிந்து செல்லும்.நாளாக நாளாக அந்த நட்பின் மீதான நேசமும் நெருக்கமும் பிரவாகமாகி,எம் நாட்களில் அவர்களை தவிர்கமுடியாதவர்கள் ஆக்கிப்போகிற அளவிற்கு இறுக்கி இறுக்கி நெருக்கும் அந்த நட்பின் பொழுதுகள்.

     இது போன்றதான நேசங்களின் தொடர்ச்சி நாளடைவில் இனம் புரியாத ஒரு அதீத ஈடுபாட்டை நம் நண்பனிம் அல்லது நணபியிடம் ஏற்படுத்தும்.கால் கட்டும் கணங்கள் வரை இந்த நேசம் வேண்டும் என்று மனது அடம்பிடிக்க ஆரம்பிக்கும்.இரவுகளிலும் கனவுகளிலும் மெல்ல அந்த முகம் மிதக்கத்தொடங்கும்.மிதந்து மிதந்து மேலெழுந்த அந்த முகம் தனியே பேச வைக்கும்,சிரிக்க வைக்கும்.சில சமயங்களில் புலம்பவும் வைக்கும்.இது காதல் தான் என உணர்வுகளெல்லாம் ஒருமித்து சத்தமாய் கூறிப்போகும்.ஏதோ பலமான ஒரு அங்கீகாரம் கிடைக்கப்போவதாய் ஓமோன்கள் அறிவிப்புப்பலகை நட்டுப்போகும்.

     அத்தனை மாற்றங்களையும் பல சமயங்களில் நாம் இயல்பாகவே நம் நட்புத்துணையிடம் வெளிப்படுத்தி விடுவோம்.சில சமயங்களில் நாம் மனம் திறப்பதற்கு முன்பே நம்மிடமான ஏதோ மாற்றத்தை நண்பன் அறிந்து விடுவான்.இவ்வாறு வெளிப்படுத்திய எத்தனையோ காதல்கள் பின்னாளில் கைகூடியது மகிழ்வே.இருப்பினும் நட்புச்சாலைகள் தொடராது முறிந்து போகவும் பல சமயங்களில் திருப்தியீனமானஓர் உறவு நிலையாக "ஈனவும் முடியாத நக்கவும் முடியாத "இக்கட்டிற்குள் நம்மை மாட்டி விடவும் காரணமாகின்றன.

        தடுமாறித் தத்தளிக்கும் சமயங்களில் கிடைக்கும் தலை தடவுதல்கள் அற்புதமான சுகத்தை,தாய்மையின் மற்றெதரு பரிமாணத்தை தருவது உண்மை.அத்தகைய இதமான ஆற்றுப்படுத்தல்கள்,பரிபூரண நம்பிக்கைகள்,சில தனிமைச்சந்திப்புக்கள்,சுகமான நடைப்பயணங்கள்,உணர்வுமயமான பரிமாற்றங்கள்,நெருக்கமான தொடுகைகள் இவை தான் நட்பெனும் சாலையிலிருந்து அரவமேதுமின்றி காதல் என்னும் தேசம் ஒன்றில் நம்மை பிரசவித்துப்போகின்றன்.love you சொலுமளவிற்கு நெருக்கமான சில நண்பர்களை கண்டதுண்டு.ஆனால் அந்த வார்த்தைகளில் விரசம் இருக்கவில்லை.உணர்வுக்குழப்பம் தெரியவில்லை.அத்தனையும்  தெளிவான நட்பாக மட்டுமே அது இருந்தது.இது தான் முதிர்ச்சி நட்பு.இது கிட்டினால் பெரும் பாக்கியமே..!

     என்னிடம் கேட்டால் சொல்வேன் நட்பு காதலாகுவது குற்றமல்ல(இது என் கருத்து மட்டுமே)நட்பிற்குள் காதலை ஒளிப்பது தான் குற்றம்.இயல்பு நிலை ஒற்றுமையால் ஏற்படுகின்ற இக்காதல் உணர்வு வயதுகளை வென்று,பருவங்கனை தாண்டியும் நரையோடும் நலிவோடும் நிலைக்குமளவிற்கு பரிசுத்தமானது எனில் உங்கள் தெரிவு சரியானதே.நல்ல நண்பனால் நிச்சயமான நிறைவான துணையாக மாற முடியம்.

     ஆனால் காதல் என்ற, உணர்வு நிலை மாறுதல்கள் வந்த பின்பும் நட்பு என்ற போர்வைக்குள் தம்மை உருமறைப்பு செய்வது அருவருக்கத்தக்க நடத்தைக்கோலம்.மூடி மூடி வைத்தாலும் ஒரு நாள் மூச்சு முட்டி விஸ்பருபமாகும்.அதுவே பல சமயங்களில் உறவுகள் உடைந்து போக காரணமாகின்றன.

  "அறிவும் உணர்வும் ஆயுதமெடுக்கும்
 அறிவில் வென்றால் ஆயுதமாவாய்"
அறிவுநிலை நின்று தீர்மானியுங்கள்.பல நண்பர்களை பார்த்ததுண்டு,சில சமயங்களில் நண்பர்களாய் பல சமயங்களில் காதலர்களாய்.இவர்களுக்கே தெரிவதில்லை..பாவம் தாம் எந்த கட்சி என்று.

   எங்கோ பார்த்தாய் சில வரிகள் நினைவில் வருகின்றன...

"நட்பு எனும் ஊஞ்சலில் தான் நாம் ஆடிக்கொண்டிருந்தோம்
காதல் எனும் காற்று தான் அதை ஆட்டுகிறது என்று தெரியாமல்..."
     
     இது தான் பிரச்சனை.நம்மைப்பற்றியதான நமக்குண்டான குழப்ப நிலை.உயிரில் விழும் முடிச்சுகளை அவிழ்குமளவிற்கு உறுதியானது நட்பு.அதே நட்பு காதலாகிறா???ஆராயுங்கள்.சுயாதீகமாய் முடிவெடுங்கள்.நண்பர் என்ற போர்வைக்குள் உங்களை மறைத்து காதல் உணர்வை வளர்தால் பின்னாளில் உங்களால் கூட சரிசெa;a முடியாத தன்னிலை வெறுப்பிற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக நேரிடும்.உணர்வு நிலை மாறுதல்கள் ஒருவரிடம் மட்டுமே கருக்கொண்டால் வலிந்து அதை உங்கள் துணையிடம் திணிக்காதீர்கள்.இதுவாழ்க்கை,வியாபாரமல்ல!
      இது தான் சாலை என தீர்கமாய் பயணப்படுவோம்.திரும்பும் போது பார்ப்போம் என்ற அலட்சியம் வேண்டாம்.நட்பின் கரங்களை வலுவாகப்பற்றுவோம்.நிச்சயம் நரகங்கள் கூட நேசமாய் மாறும்.
                        
                              வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.
                                                                                                                                                                                                                                                                                     நேசங்களுடன்'
                                                                                                                                         -அதிசயா-



   
   

Sunday, June 24, 2012

இனி ஒரு விதி செய்வேன்....!

கால்களை கவனிக்கும் போதெல்லாம்
ஒரு விழி ஏனோ கழன்று போய்
விரல்களுக்குள் ஒழிந்து கொண்டே
ஒழுகிக் கொள்கிறது..!
இன்று தான் கேட்கிறேன்-ஆதலால்
இனி ஒரு விதி செய்வேன்..!

பட்டணம் வரை
போய் வந்தேன் நேற்றய பகலில்....,
வரும் போது..........

விட்டுவிட்டால் பிரசவிப்போம் ,
 நிறைமாதமாய் இரண்டு பைகள்....,

மூச்சோடு முட்டிமுட் டியே மொட்டவிழ்ந்த
வெள்ளை ஓக்கிட் ஒன்று...,

நெடுநான் பட்ஜெட்டில் இன்று தான் சாத்தியமான
வெளிர்நாவல் குடை ...,

என் கைக்குட்டை கசங்கலில் இறந்து போன
யாரோ வீட்டு குண்டு மல்லிகள்...,

ஆத்திரமாய் அகன்ற என் விழிகளுக்குள்
உருண்டு ஓடிய நேச நண்பனின் கெஞ்சல்கண்ணீர்...,

சரிபாதி நானென சட்டம் பேசிய
அக்தர் கலந்த பிசுபிசுப்பு வேர்வை...,

பேருந்து பயணங்களில் தோளோடு சாய்ந்துவரும்
ஈர நினைவு......

இப்படியாய் சில இன்னும் சில..
ஏராளமான இருப்புகள்..!
 பூவரசு நிழலில் என்னையும் உமிழ்ந்துவிட்டே
ஒற்றைச்சாலை ஓடி மறைந்தது அந்த வண்டி..!

அத்தனையும் சுமந்தேன்.
வாசல் படி தாண்டி,வரவேற்பறை தாண்டி,
தற்காலிக நிறுத்த்தில் சிலவற்றை இறக்கி விட்டு
நினைவுகளை  மட்டும் நெஞ்சோடு இறுக்கி..,
படுக்கயறை வரை அனுமதித்தேன்...!
 
முதல் தடவை  விரல் நனைகயில்
முயற்சிக்கவில்லை காரணம் அறிய....!

இன்று தான் பார்த்தேன்..
அடிப் படி விழிம்போடு
விவாகரத்து கேட்பதாய் அங்கொன்று கிடக்கிறது..
மற்றொன்று..???
சின்ன நாய் "குணா"வி ன் விளையாட்டுப்பண்டமாய்...!

உருகும் வெயில் குடித்து
மேல் கிளிக்கும்  கூர் வலி பொறுத்து
அசிங்கங்கள் சுமந்து
அழுக்குகள் குளித்து
எனக்காய் என்னை
இரட்சித்த என் "செருப்புகள்" .....!

உணர்வுகள் அறுந்து நிர்வாண கண்டனம் செய்தது..,
பகுத்தறிவு பஞ்சாயத்து வைத்து விலக்கி வைத்தது என்னை...,

அது மட்டும;அப்படியே அங்கேயே...!
இனி ஒரு விதி செய்வேன்...!

செருப்புகளை விரட்டும் தெய்வங்களுக்கு என்
பாதங்களோடு சொந்தம் இல்லை!!!!
வாசலோடு நிற்கச்சொன்னால்-திண'ணைக்கும்
எனக்கும் தொடுகை இல்லை!!!!
செருப்போ பாதணியோ பாதுகையோ
பெயர் மட்டும் தான் வேறு
உறவு ஒன்றே... !
சில பேரை மன்னிக்க மறுத்து வந்தேன்,
உன்னிடம் மண்டியிடத் தோன்றுகிறது இப்போது...
ஒரு முறை மன்னித்து விடு..!


நீ பாதணி..எனக்கு அணி
இனி விலகேன்..
என்னிடமாய் வந்து கொள் என் விழியே...
இனி ஒரு விதி செய்வேன்...!!!!


                                                                                                                             சொந்தக்காரி
                                                                                                                              - அதிசயா-

Thursday, June 14, 2012

நுரையீரல்ப்பூக்கள்....!

முயன்று முயன்று  மூச்சுவிடும்-இந்த
அந்தரமான நிமிட ஒழுகல்களில் தான்
நினைக்க முடிகிறது-எத்தனை அற்புதம்
மூச்சுவிடுதல்கள் என்று....!

எனையறியாது விழிதெரியாது
அனுமதி கேட்காது அரவம் செய்யாது
சமைந்தபெண்ணின் மெதுமையாய்
அத்தனை இயல்பாய் நுழைந்திருந்தாய்..!

வாசங்கள் சில பூசி,நேசங்கள் பல சுமந்து
சோகங்கள் அப்பிக்கொண்ட புகைகூட்டம் கடந்து
எங்கிருந்தோ ஓடி வந்து
என்னுள் பிறந்து கொண்டாய் "சுவாசமாய்"

நாசிகளில் மென்வெப்ப முத்தமிட்டு
குழாய்வழி ஒரு தனிப்பயணம் புறப்பட்டு
வடிகட்டல் தடைதாண்டல் முடித்து
சூடேற்றி,குளிர்பெற்று........!

 நீ சுத்தமாய் தொட்ட சிலிர்புகளில்
ஆயிரம் சந்தங்கள் கொண்டு
மெதுவாய் மெதுமெதுவாய் நிறைந்து
காற்றால் கர்ப்பம் கண்டு
நிறைந்து நின்றது அத்தனை சிற்றறையும்..!

அடுத்த நொடிக்குள்
அமுக்கத்தை காரணமாக்கி
வெறுமைக்குள் தன்பிள்ளைகளை விதைத்துவிட்டு
உடல் வற்றி விடுகிறது அத்தனை பைகளும்..!

எப்படி இந்த இயந்திரத்தின் இயக்கத்தினுள்
இத்தனை மென்மை..?
வலப்பக்கம் உயிர்சுமக்கும் மற்றொரு
பெண்மை இது...!

நேற்றுவரை சுகித்ததில்லை
நுரையீரல் பூகளின் சுகத்தை
முயன்னறு முயன்று  மூச்சுவிடும்-இந்த 
அந்தரமான நிமிட ஒழுகல்களில் தான்
 நினைக்க முடிகிறது-எத்தனை அற்புதம்
என் மூச்சுவிடுதல்கள் என்று...!
 முயற்சிகளுடன்
-அதிசயா-

Sunday, June 10, 2012

கொலை ஒன்று செய்வோம் !!!!

பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்..!

சொந்தங்களே நலம் தானா?

வாருங்கள் பதிவிற்கு...!



     தலைப்பைப்பார்த்ததும் ஏதோ குற்றவியல் பதிவென்றோ அல்லது உளவியல் பதிவென்றோ எண்ண வேண்டாம்.அந்த இரண்டு தலைப்பையும் பேசுமளவிற்கு வல்லமை என்னிடம் இல்லை.அதிசயா என்ற பாத்திரத்தில் சலசலப்பையும் தளும்பலையும் உண்டு பண்ணிய உணர்வுக்கொப்பளங்களே இவை.(அட அதாங்க,எப்பயும் போல அனுபவப்பதிவு தான்)

     உணர்வுகளின் கோர்வை தான் மனித மனம்.வெளியுருவில் திடமாகத் தெரியும் ஒவ்வொரு முகங்களின்  பின்னும் எல்லைப்படுத்தமுடியாத நினைவோட்டங்கள் விரிந்து செல்கின்றன.ஒரு கட்டத்தில் இவை எல்லாம் இணைந்து நம்முள்ளே இருக்கும் மற்றொரு நபருக்கு உயிர்கொடுத்துப்போகின்றன.

     நம்முள்ளே இருக்கும் இந்த இன்னொரு மனிதனை எல்லோரும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிப்பதில்லை.எமது நினைவோட்டத்தின் தன்மைகள் தான் இந்த மனிதனின் சாயலை ;தீர்மானித்துப்போகின்றன.இன்னொரு நிழலாய் இறப்பின் எல்லை வரை நீளும் இந்தச்சொந்தம் தான் வாழ்க்கையில் பிடிப்பையும் நம்பிக்கையும் உண்டாக்கி 'வாழ்ந்துபார்' என உந்தித்தள்ளுவது.
     இத்தகைய பேராற்றல் மிக்க அதே நபர் தான் சில நேரங்களில் தன்னிலை திரிபுற்று மிகவும் கோரமான நபராக மர்றி விபரீதத்தின் விளிம்புகளில் நம்மை நிறுத்தி விடுகிறார்.

     மனஉடைவு,உறவுநிலை இழப்புக்கள்,தொடர்ச்சியான திடீர்தோல்விகள்,உடல்தோற்றம் சார் திருப்தியீனங்கள்,உண்மைநிலை அறிதலின் ஏமாற்றங்கள்,நம்பிக்கைக்கு உரியவர்களின் நடத்தை மாற்றங்கள்,வாய்யிட்டு சொல்ல முடியாத துயரங்கள் என்பகைகள் தம்முள் ஒன்றாய் பிணைந்து இதுவரை சாதகமான எண்ணங்களை உற்பவித்த நபருடன் முட்டி மோதி ஆக்ரோஷமாக வென்று மறைச்சிந்தனை கொண்டவராக நம்முள் இருப்பவரை மாற்றிப்போகிறது.

     உள்ளார்ந்த ரீதியில் படிப்படியாய் ஏற்பட்டு திடீரென்று விஸ்பருபம் எடுக்கும் இந்த நபர், மிககோரமான முடிவொன்றை நம்முள் விசாலமாய் விதைத்துப்போகிறார்.அது தான் தற்கொலை உணர்வு.

     உறவுகளையும் இந்த உலகத்தையும் பகையாகக் காட்டி தன்னுள் சேர்த்து வைத்திருந்த அத்தனை சக்திகளையும் ஒன்றாகத்திரட்டி மீண்டும் மீண்டும் அதே தற்கொலை வாசகத்தை நம்முள் பலமாய் உரைத்தப்போகின்றது.

     இருப்பினும் அவ்வப்போது லௌகீகத்தை நேசிக்கும் இந்த உடலும்,வற்றிவிட்ட சில உணர்வுகளும் மீளவும் ஊறி வாழ்தலில் மீது லேசான ஈடுபாட்டை காட்டிப்போகும்.சில பிரம்மிப்பிற்குரிய சொந்தங்களை அடையாளமிடும்;.இத் தருணத்தை சரியாக,மிகச்சரியாக பயன்படுத்தி வாழ்தலுக்கு உள்ளாக நம்மை திருப்பிக்கொள்ள வேண்டும்.

     இங்கு தான் கவனிக்க வேண்டும்.இம்மாறுதல்களை அலட்சியப்படுத்துவோமாயின் மீண்டும் மெதுவான ஒரு மனஉடைவு ஏற்படுகையில் அத்தனை மறை உணர்வுகளும் பலமடங்கு ஆக்ரோஷத்துடன் வெளிவரும்.புத்திசாலித்தனமாக,வலியின்றி இறப்பதற்கு வழி தேடும்.கடைசியில் ஏதோ ஒருவழியை தனக்கெனவே கண்டுபிடித்து அதையே மிகவே நேசிக்கும்.எத்தனை இறுக்கமான ஆளமை கொண்ட நபராயினும் சரி இத்தகைய உணர்வு நெருக்கங்கள் வேருன்றும் போது சரியான தருணமொன்றிற்காய் காத்திருந்து அந்த ஆன்மா இந்த உலகிலிருந்து தன்னை வலிந்து விடுவிக்கும்.

     முயற்சிகள் எல்லாம் முற்றாகி முடிவுகள் நெருங்கும்.அ;ப்போது தான் அந்த அதீதமான வாழுதல் ஆசை நெருங்கும்.கடந்த காலங்கள் நினைவில் வர,தான் நேசித்த மனிதர்கள்,தரப்பட்ட சந்தர்ப்பங்கள்,சிலிர்பான நினைவுக்குறிப்புகள்,திருப்திகரமான சாதனைகள் எல்லாம் ஒன்றாகி 'வந்துவிடு வா' என்ற பலமாய வாழ்வின் குரல் எதிரொலிக்கும்.

     ஆனால்ஐயோ! அந்த நொடியே முக்கால்வாசி உயிர் வற்றிவிட்டருக்கும்.மீதமுள்ள சில துளியும் கடைவிழிக்கண்ணீரோடு ஒழுகி ஓய்ந்துவிடும்.பாதைகள்,பயணங்கள் எல்லாமே வரண்டுபோய் தவறான மாதிரிகையாய் ஒர் ஆத்மா ஓய்வு கொள்ளும்.;.


    இத்தகைய மறையான உணர்வுநிலை ஏவுதல்கள் தற்கொலை வாசகமாவற்கு முன்பே உஷாராகி விடுங்கள்.நம்பிக்கையானவரிடம்,உளவள ஆலோசகரிடம் சென்று தீர்வு காணுங்கள்.இந்நினைவுகள் கொஞ்சம் வளர்ந்தால் போதும் வேர்விட்டு விருட்சமாகி,விழுதுகளை எறிந்து நஞ்சாய் நம்மை ஆட்கொள்ளும்.புரிந்து கொள்ள இயலாதவர்களிடம் உங்கள் குழப்பங்களை சொல்லி விமர்சனத்திற்குள்ளாகாதீர்கள்.

     மரணம் என்பது பிரச்சனைகளுக்கு நிச்சயமாய் சிறந்த தீர்வாக முடியாது.மறுமை பற்றியதான  மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு,இவ் உலகில் தோல்விக்குரிய படைப்பாகி விடுவோம்.

     இந்தக்கணம் கூட உங்கள் சிலருள் அந்த நபர் தன்னிலை மாற்றம் கண்டு,மூலையில் ஒதுங்கி முகத்தை மறைத்தபடி அழுதிருப்பார்.எங்கே இறப்பின் மீதான நெருக்கம் உண்டானது என கண்டுகொள்ளுங்கள்.முகங்களை உங்கள்பால் திருப்பி அன்பாய் ஆதரவாய் தேவைப்படின் கண்டிப்பாய் வழிப்படுத்துங்கள்.வாழ்வு வாழ்வதற்கே என்ற நிலைப்பாடு எங்கே மாற்றம் காண்கிறதோ அங்கே கரிசனையும் கவனிப்பும் அவசியம்.இவர்கள் மட்டில் பாராமுகமும் கரிசனையற்ற தனத்தையும் நாம் வெளிப்படுத்துவொமானால் ஒரு உயிர் தன் வாழ்தகவை முடித்துக்கொள்ளவதற்கு நாமும் நிச்சயம் காரணமாவோம்.தெரிந்து கொள்ளுங்கள்.சில தருணங்களில் அமைதி காத்தல் கூட ஆபத்திற்கு அங்கீகாரம் கொடுக்கிறது.


     தவிப்பார்க்கு தலைதடவுவதை விட ஆறுதல் வேறென்ன இருக்கமுடியும்??
 .சொந்தங்களே முட்டாள்தனம் என முத்திரை குத்துவதை விடுத்து,இந்த விஷமான எண்ணங்களை களைவோம்.களைவதற்கு உதவுவோம்.

கொன்று போடுவோம்-இந்த
தற்கொலை தளிர்களை
வாழ்ந்து காட்டுவோம்;-இது முதல்
வாழவைப்போம்!!!
இறப்புகளை இனியேனும் இறக்கி வைப்போம்!!


  வேண்டுதலுடன்
  -அதிசயா-

Wednesday, June 6, 2012

எண்ணங்கள் வானோக்கி....!



உயிர் வரைந்த வழு இரண்டு
வறுமையும் சிறுமையும்.,
அளவில் சிறுமை சிறுமையல்லவே-இது
விதியின் சிறுமை..!
பகட்டின் வறுமை வறுமையல்லவே -இது
வயிற்றின் வறுமை..!

குழம் நிறைத்த மேகங்கள்-மழையற்று மலடாக
விழியெல்லாம் கருவாகி
இங்கு குடம் நிறைத்து போகின்றன..!

சேர்ந்த துணை-ஈன்ற இணை
ஒன்றாக ஓய்ததனால்
எச்சங்கள் இரண்டும்
இங்கு
என்ன தேடி வந்ததுவோ??

மூன்று முழம் கயிற்றிற்கு
முகம் எதுவும் மறுத்ததில்லை..
அரளி விதை கூட
அந்நியப்பட்டுப் போனதில்லை..
கடைசிக்கொடையாய் மண்ணைன்னை கொடுப்பாருமுண்டு
ஆனால்...!

இந்த விதை இறப்பிற்கில்லை..!
இறுக்கமாய் உரைக்கிறது நான்கு விழிகள்..!
முடியும் முடியும்-விழியின்
வடிதல்
விடியும் விடியும்-நிலவால்
இருளும்.
இடியும் மழையும்-இறங்காவிட்டால்
நொடியில் தொடரும் இந்த தண்ணீர் பயணம்

வேரறுந்து வீழ்ந்தாலும் விதைகள்
வெந்துவிடவில்லை
சோறிpழந்து சோர்ந்த பின்னும்; ஆன்மா
செத்துவிடவில்லை

இரண்டு குடமெடுத்து
இடுப்பொடிய நடப்பதெல்லாம்
யாரோ ஊட்டி விட்ட
அறிவுச்செடி வளர்வதற்கே..!

இரண்டு பானை இறக்கி வைத்தால்
நோட்டுக்கொப்பி கொடுப்பார்கள்-இரங்கியே
இரண்டு ரொட்டித்துண்டும் வைப்பார்கள்.

வயிறு வளர்க்கும் முயற்சியல்ல-அறிவு
வளர்ப்பே இது..!
ரொட்டித்துண்டிரண்டும்
வற்றிய உயிர் சுரக்க..!

நான் காண்கிறேன்,
நாளை விருட்சங்கள் வெளிவரும்
வெளிச்சம் இந்த விழிகளிலே...!



சொந்தங்களே!நலமா??
அதிசயாவின் வருகை கவிதைக்கானதே.எனக்கு மற்றொரு முகம் காட்டியது என் அன்பு அண்ணன்.மீண்டும் என் கவிதைக்குழந்தைகளோடு உங்கள் வாசல் வருவது சிலிர்ப்பு.

சாதனை பற்றியதான நூல் ஒன்று வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒவ்வொன்றாய் படிக்கையில் வெளிச்சங்கள் காட்டியது இந்தச்சொல்- எண்ணங்கள்
தலைப்பு -ஒரு படம் பலர் பார்வையில்

 'எதையும் வெற்றிகரமாக பார்க்க வேண்டும்.அந்த எண்ணங்களே மாபெரும் சக்தி,அதை பார்க்க முடியாது.ஆனால் அதை முறைப்படுத்தி வலுவாக்கி பழக்கமாக்கிக் கொள்ளும் போது வெற்றி புலனாகத்தக்க பொருளாக நமது சூழலில் தோன்றும்.'

தற்செயலாக நான் கண்ட புகைப்படத்திற்காய்இன்று நிரப்பிக் கொண்ட வரிகள் இவை.நீங்களும் உங்கள் வாழ்வில் முயன்று பாருங்கள் சொந்தங்களே..!

குறிப்பு-வெறுமைகள் மிகுந்த தேசம் ஒன்று பின்னாளில் நேசங்களால் நிறைத்த சொந்தம் அது.சில சொந்தங்களிடம் ; பயணமாக இருப்பதால் தாமதம் ஏதும் ஏற்பட்டால் பொறுத்தருள்க.விரைவில் மற்றொரு பசுமையான பதிவுடன் வருகிறேன் நேசங்களே..!

எண்ணங்களுடன்
அதிசயா

Sunday, June 3, 2012

வெளிச்சங்கள் கொஞ்சம் நட்டுப்போங்கள்!!

என் கிறுக்கல்களுக்கு அங்கீகாரம் கொடுத்து பதிவுலகில் என்னையும் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் உறவுகளுக்கு 'அதிசயாவின்' அன்பு வணக்கங்கள்!

சொந்தங்களே நலம் தானா?நேசங்களுடள் வாருங்கள் பதிவிற்கு....!


 .

            
      உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் நிறைந்தது.இந்த உருவாக்க எல்லைகள ;மாற்ற முடியாத அனுவவங்களையும் சில அறிவித்தல்களையும் பலமாய் கூறிப்போகின்றன.உருவாக்கங்கள் முடிந்து விட்ட எல்லைகளில் நின்று பார்குகும் போது,எத்தகைய வெற்றியாளராக இருந்தாலும் அவர் சாலையில் எவ்வளவு வெளிச்சங்கள் காணப்பட்டாலும் அங்கங்கு இருள் காடுகள் முளைக்கத் தவறுவதில்லை.அது போன்றதான ஒரு காலத்தை சிந்தையில் இருத்தி இப்பதிவை இட்டுக்கொள்கிறேன்.

    மனிதனுக்கென அடையாளங்கள் சிலவற்றை நம் முன்னோர்கள் ஏலவே வகுத்து விட்டார்கள்.பகுத்தறிவும்,தன்னார்வ சிந்தனையும் கொண்டவனென மனிதனுக்கு ஓர் மேற்கோளிட்டு விலங்கு இராச்சியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டான்.இதனைத் தக்கவைக்கவும் ,வளர்த்துக்கொள்ளவும் தான் இன்று வரை ஓடி ஓடிக்கற்கிறோம்.
    
         முன்பள்ளியில் தொடங்கி முதுமை அனுமதிக்கும் வரையிலும் நுரைக்க நுரைக்க ,களைக்க களைக்க  கற்கிறோம்,கற்றுக்கொண்டே  இருக்கிறோம்.இதில் வருத்தம் என்னவெனில் பல சமயங்களில ;வெற்றிக்கோப்பை கனவாக தொலைந்து விட வெறும் தாள்கள் தான் பரிசாகிறது.
  
           சராசரி மாணவனை பொறுத்தவரை சாதாரண தரம் வரை கூட்டத்தில் ஒருவராக பொதுவான சில விடயங்களை அறிந்து கற்கிறோம்.பரீட்சைகள் முடிவுற்று பெறுபேறுகள் வெளியான அடுத்த கணமே சிலருக்கு பட்டாம் பூச்சி கனவுகள்.சிலருக்குஃ?????ஃ???

        வெற்றிகரமான கதாபாத்திரம் ஒன்றை தனக்காக கற்பனை செய்தபடி புறப்படும் மாணவர் முன் பாரிய கேள்விக்குறி ஒன்று முளைத்து விழி பிதுங்க வைத்து விடுகிறது.அதுதான் உயர்தரத்திற்கான பாடத்தெரிவு(ஒரு சிலமீத்திறனான மாணவரை தவிர)
   
           மிக வேகமாக ,தன்நிலை திரிவுபடுத்தப்பட்டு வரும் இந்த போட்டி மிகு உலகில் ஒவ்வொருவரும் தம் இருப்பை தக்கவைக்க மிகவே போராட வேண்டி இருக்கிறது என்பது உண்மை.வேலைவாய்பிற்கான சூனியநிலைகளும்,வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் உள்வாங்கலும்,பொருளாதாலத்தின் நெருக்கல்தன்மைகளும் இணைந்து,உயர்தரக்கல்வியையும் ஒரு வியாபாரமாக்கிப் ;போகின்றது.கலை வர்த்த பாடங்களின் மீதான விருப்பு நிலைகளை பறித்து,கணித உயிரியல் பாடங்கள் மீதான செயற்கையான ஒரு வித மோகத்தை ஏற்படுத்திவிட்டன.அதிபர், ஆசிரியர், பெற்றோர் ,நலன் விரும்பிகள் என அனைவரிடமும் இம்மோகம் விரைவாகத்தொற்றி விட்டது வேதனைக்குரிய உண்மை.
    கலந்துரையாடலில் பங்குபற்றும் மாணவர் மீதும் இப்போதை மேல்மிச்சமாக திணிக்கப்பட்டு,மாற்றுவழியில் சிந்திக்க முடியாதவர்கள் ஆக்கப்படுகிறார்கள்.
  
           இலங்கையை பொறுத்தவரை குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தவர்கள் பெரும்பாலும் மண்ணையும் கடலையும் தான் ஆதாரமாக்கிக் கொண்டவர்கள்.வடபகுதியின் யாழ் மண்ணை சார்ந்தவள் நான் என்பதால் மிகவே இதை அனுபவித்து பதிவிடுகிறேன்.எம் மக்களைப்பொறுத்தவரை 13 வருட பாடசாலைக்கல்வியின் வெற்றி என்பதெல்லாம் பல்கலைக்கழக அனுமதி தான்  என்று பாரம்பரியமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.அது தவறும் பட்சத்தில் தென்னிலங்கை மாணவரை போல தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடருமளவிற்கு இங்கு வாய்புக்கள் பெரும்பாலும் ஏற்படுத்தப்படவில்லை.தற்போது திடீரென ஏகப்பட்ட விளம்பரங்கள்.இதில் சரியானது,வாயப்;பானது எது என்பதை தீர்மானிப்பதே எங்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது.வெளி மாவட்டங்களில் தங்கி உயர் கல்வியை தொடருமளவிற்கு எல்லோரிடமும் மிகச் செழிப்பான பொருளாதா நிலைமைகள் இல்;லை.விதி வரைந்த வழு அது.சாதாரண மாணவரின் உயர் அடைவுமட்டம் என்பது இங்கு பல்கலைக்கழகமே.
   
          எனவே உயர்தரம் பற்றிய தெளிவுபடுத்துகை என்பது மாணவரிடையே அவசியம்.விஞ்ஞான பாடங்களை கற்று சித்தியடைந்தால் இலகுவில் பல்கலைக்கழகம் ஙழையமுடியும் என்பது உண்மை தான்.ஆனால் குற்த்த ஒரு மாணவனுக்க அதில' இயல்பாகவே ஈடுபாடு இருக்க வேண்டும்.அந்த இயலுமை இருப்பது அவசியம்.

          மாறி வரும் உலக சந்தையில் கேள்வியுடையவர்களாக ஒவ்வொரு மாணவலையும் உருவாக்க வேண்டியது கற்ற உலகின் கடமை.ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் விடயப்பரப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும் போது அது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு,அதன் நன்மை தீமை இரண்டும் வெளிப்படையாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.அதன் பின்னரே முடிவுகள் பெறப்பட வேண்டும்.ஆனால் இவ்விடயத்தில் கற்றறிந்த உலகம் தம்மை நிருபிக்கத் தவறி விடுகின்றது.வெறுமனே விஞ்ஞானக்கல்வியால் ஏற்படும் நன்மைகள் பற்றி மட்டுமே பேசப்படுகின்றன.சில சமயங்களில்; அனைத்துத் தலைப்பும் பேசப்பட்டாலும் ஒரு வித முன்னிலைப்படுத்தல் விஞ்ஞாக பிரிவிற்கே வழங்கப்டுகிறது.திரைப்படங்களில் கதர நாயகி நாயகன் மருத்துவர் பொறியியலானராக காட்டப்படுகிறார் என்பதற்காக யதார்தமும் அப்படி என்று நினைப்பது முட்டாள்தனம்.

  

            " இந்த இள மூங்கில்களை ஐந்திலேயே வளைக்க ஆசைப்பட்டார்கள்
             பல மூங்கில்கள் வளைக்கும் அவசரத்தில்
             முறிக்கப்பட்டதால்
             விறகுக்கடைகளில் விற்பனையாகின்றன.
             இந்த பட்டரைகளில் கூர் செய்யக் கடப்பாரை
             கொடுத்தோம்.
             அவை குண்டுசிகளாய் வந்து விழுந்தன.''
                                                                                                                      -வைரமுத்து-

.        சிறப்பான படைப்பாக உருவாக்கப்படுவோம் என்ற பேராவலுடன் தான் ஒவ்வொருவரும் தம்மை களிமண்களாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர்.ஆனால் பாத்திரங்களுக்கு பதில் வெறும் இறுக்கமான மண் கட்டிகளாகவே பெரும்பாலானோர் மாறுகிறார்கள்.
    
        உயர்தரத்தில் உயிரியல் துறையின் தேர்வு என்னை ஒர் தவறான தயாரிப்பாக  பெயர் குத்திப்போனது.எனக்குப்பொருத்தமற்ற துறை இது என நான் சுதாகரித்த போதும் அதிலிருந்து வெளிவருவதற்கு எனக்கான அனுமதி மறுக்கப்பட்டது.அதை மீறுவதற்கு என் புத்தியும் வெட்கி ஒளிந்து.இரண்டு வருட முள்ளுப்பயணங்களின் முடிவில் இரண்டு பாடங்களில் சித்தியடையத்தவறினேன்.இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி கலைப்பிரிவில் என்னை இணைத்து 3மதங்க் மடடுமே பயின்று, பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்றேன்.
   
          தோல்வியின் வலியையும் வெற்றி மீதான ஏக்கத்தையும் அறிந்தவள் நான்.என் ஒத்தவர்கள் மேடையேறிப்போகும் போது ஓரமாய் நின்று விழி ஒழுகியவள்,அந்தக்கணங்களை இன்று நினைத்தாலும் நெருப்பாய் சுடுகின்றன.நானும் எல்லோர் போலவும் எனக்கான கரவோசங்களை எதிர்பார்த்தவள்.அதிலும் பிரம்மாண்டமான,பேசப்படக'கூடிய வெற்றி ஒன்றை எதிர்பார்த்தவள்.ஆனால் அன்று தோற்கடிககப்பட்டவள்.; உரிமையோடும் ஆதங்கத்தோடும் சொல்கிறேன்.திணிப்புக்கள் எதுவும் வேண்டாம்.பாடத்தெரிவின் தெளிவின்மைகள் ஏற்படுகிறதென்றால் அக்கறையாய் பாதைகளின் திசையை சொல்லுங்கள்.அவர்களே தாமே தெரிந்து எந்தப்பாதையில் செல்வது என்பதை தீர்மானிக்கட்டும்.இருட்டு சாலை என்று கண்ணை மூடிப்போகாதீர்கள்.கொஞ்சமாயேனும் வெளிச்சங்கள் நட்டு வையுங்கள்.எல்வோரும் சிறப்பானவர்களாக தம்மை அடையாளப்படுத்தவே விரும்புகிறார்கள்.

   
          கனவு காண சொல்லிக்கொடுங்கள்.நீங்களே அவர்களுக்காய் கனவு காணாதீர்கள்.கனவுகளின் வண்ணமானாலும் சரி,வலியானாலும் சரி அவர்களே தீர்மானிக்க அனுமதியுங்கள்.இதைவிடவும் சொல்லப்படாத கதைகள் அதிகம்.நீங்கள் ஒவ்வொருவரும் வெளிச்சம் நடுங்கள்.அது உயர்தரம் என்றாலும் சரி முன்பள்ளி எனறாலும் சரி.இது சேவையல்ல ஒரு கடமை.
   

      கொஞ்சமாய் வெளிச்சம் நட்டு வையுங்கள்.
      யுகங்களுக்கும் நாங்கள் பயணிப்போம்
      களைப்பின்றி நுரைப்பின்றி..!


                                                                                                                            ஆதங்கத்துடன்
                                                                                                                                      -அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...